காவிய நாடகம்
"தானன தானன தானன தானன
தானன தானன - தனதானா"
சீருயர் சோலையி னீழலி லேயவள்
சீதன மாயமர் - திருநாளில்
சீரிய சூரிய னோடிநி லாவொளி
சீவனு ளாடிடு - மொருபோது ,
பாரடி காதலி யாருமி லாவிடம்
பாலிதழ் தாவென - நான்கேட்க
பாவையு மேயுட னாவென வேகளி
பாய்விழி சேல்களி - னிமைமூடி
ஓரர ணாகிடு நாணமு லாவிட
வோடிட வேயவ - ளருகேகி
ஓ!கனி யே!மல ரே!யென தாசையை
யோரடி யே!வென - வுளம்பாடும்
காருடல் வானமு மேமுகி லாலொளி
காணுநி லாவினை - யுடன்மூடும் !
காவிய மாயமை நாடக மேயொரு
காவினி லேயெழி - லரங்கேறும் !
பொருள் :
சீரில் உயர்ந்ததொரு சோலையின் நிழலில் அவள் சீதனம் போல அமர்ந்திருக்கும் ஒரு நாளில்,
சீரியதான சூரியனின் ஒளி மறைந்து நிலாவொளி வந்து ஜீவனுள் ஆடிடும் ஒரு பொழுது.
(அப்போது)
"பாரடி காதலீ ! இது யாரும் இல்லாத இடம் இங்கே உன்றன் பால் இதழைத் தா" என்று நான் கேட்க,
பாவையும் உடனே "ஆ!!!" என வியப்புற்று களிப்பு பாயக்கூடிய சேல்கள்(மீன்கள்) ஆன அவளது கண்களின் இமைகளை மூடி
அந்த சந்தர்ப்பத்தில் தனக்கு அமைந்த ஒரே ஒரு அரண் (பாதுகாப்பு) ஆகும் வெட்கத்தைக் காட்டி அவள் ஓட, அவள் அருகே சென்று,
"ஓ! கனியே ! மலரே ! எனது ஆசையை ஓரடீ (அறிந்து கொள்வாயடி) என்று என் உளம் பாடும்.
(அவள் அறிந்து கொள்வதற்கு முன்பே)
கருமையான உடல் கொண்ட வானம், மேகங்களைக் கொண்டு ஒளி காட்டக்கூடிய நிலவை உடனே மூடும்...
(இருட்டான பின்பு)
காவியமாக அமைந்த அந்த நாடகம் (அந்த முத்த நிகழ்வு) ஒரு சிறிய சோலையில் அழகாய் அரங்கேறும்.
-விவேக்பாரதி !