தீயின் தீக்குளிப்பு
மாலதி....
கூப்பிடுறது காதுல விழலையா..
கார்த்திக்கின் அதட்டல் குரல் கேட்டு அவளின் மனசு கிடுகிடுத்தது..
எத்தனை தடவை சொல்லிருக்கேன் உங்க வீட்டுக்கு போக கூடாதுனு,என் பேச்சை மீறி போற அளவுக்கு உனக்கு துடுக்கு வந்துருச்சா..அப்படியே அங்கேயே கிடக்க வேண்டியதுதான ஏன் என் மானத்தை வாங்குற..
இல்லைங்க என்று சொல்லும் போதே அவளின் ஈன குரலுக்கு சுதி சேர்ப்பது போல கண்ணீர் சொரிந்து வேகமாய் தரையில் பட்டு அவன் கால்களில் தெறித்து விழுந்தது..
நீ என்ன அழுதாலும் சரி அந்த வீட்டுக்கு போன கழுதைக்கு இந்த வீட்டுல இடமில்லை வெளியே போடி என்று இரக்கமற்று இரைந்து கொண்டிருந்தான்..
தீபாவளி முடிஞ்சுருச்ச கையோட உன் அப்பா ஊரார் முன்னிலையில் சொன்ன மாதிரி எனக்கு பைக்கும் பத்து கிராம் மோதிரமும் சீர்வரிசையா கொடுக்கிறதை விட்டுட்டு இப்படி வீசுன வெறுங்கையுமா நம்மளை அனுப்பிய வீட்டுக்கு எதுக்கு போகனும்ங்கிறேன்..மனுஷன்னா சொன்ன சொல்லை காப்பாத்தனும் அதுதான் உன் பரம்பரைக்கே இல்லைனு தெரிஞ்சுருச்சே..சில சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகளும் வந்து விழுந்தது.
கார்த்திக்கின் கோப கனல்களில் விட்டில் பூச்சியாய் விழுந்த மாலதியின் மனசு துடியாய்துடித்து கொண்டிருந்தது அந்த இரவின் கருமையினூடே..
தீர்கமாய் ஒரு முடிவுக்கு வந்தவளாய் தன் பெட்டியை எடுத்து கொண்டு அவனை தாண்டி வாசல் படியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்...
என்னடி நான் சொல்ல சொல்ல உன் பாட்டுக்கு போற,மரியாதையா நில்லு இல்லைனா நான் மிருகமாகிருவேன் என்று கர்ஜித்தான்..
மிருகத்தோட ஒரே வீட்டில் இருந்து விடலாம் ஆனால் அந்த மிருகத்தோட தாம்பத்யம் வைத்து கொள்வது அருவெறுப்பாய் இருக்கு,
இவ்வளவு நாள் என் உயிரையும் எனக்குள் இருக்கும் உயிரையும் உங்க அன்பால பார்த்திங்கனு நினைச்சேன்.
எப்போ உயிரற்ற ஒரு பொருளுக்காக என்னை அந்த பொருளை விட சீப்பா நினைச்சிங்களோ அப்பவே நமக்குள்ள இருந்த அன்னியோன்னியம் முடிஞ்சிருச்சு..
மானம்கிறது நாம வாங்குற வரதட்சணை சீர்வரிசைல இல்லை,
நம்மளை நம்பி வர்ற பெண்ணை சீரும் சிறப்புமா வைச்சு பாத்துகிறதுலதான் இருக்கு என்று சொல்லியவாறே வாசல் படி நிலை தாண்டி மாலதி காலடி எடுத்து புதிய அத்தியாத்தை தொடங்கினாள்.
கார்த்திக் தன் நிலை தடுமாறி கால்கள் இடறி நிலைகுலைந்து வாசலில் விழுந்தான்,
புத்தியில் லேசாய் அடி விழுந்ததை உணர ஆரம்பித்தான்..
காலம் இந்த நிலையை மாற்றும்.
காலகாலமாய் நடக்கும் இந்த அவலமும் மாறும்.
காசு பணத்தை விட உறவுகள் மேலானது என்ற நிலை வரும்..
அதுவரை காத்திருப்போம் அவர்களுடன்..