எழுந்தனர்காண் எழுச்சியுடன்

எழுந்தனர்காண் எழுச்சியுடன்
பாவலர் கருமலைத்தமிழாழன்

பொறுப்பில்லை பொறுப்பில்லை இளைஞர்க் கென்றே
பொறுப்பின்றிப் பேசுவோரே கண்தி றந்து
வெறுப்பின்றிப் பாருங்கள் இளைஞர் தம்மை
வேடிக்கைப் பார்க்கின்ற கூட்ட மன்று
அருவருப்பு அரசியலை நடத்து கின்ற
ஆட்சியாளர் தவறுகளைக் கேட்கும் கூட்டம்
நெருப்புதனைக் கண்களிலே ஏந்திக் கொண்டு
நேர்நடக்கும் தீமைகளை எரிக்கும் கூட்டம் !

வணிகமாக மாறிவிட்ட கல்வி கண்டு
வாய்ப்பாக்கிப் பொருள்குவிக்கும் கயமை கண்டு
அணியணியாய் இளைஞர்தாம் கொதித்தெ ழுந்தே
ஆர்ப்பாட்டம் செய்கின்றார் மாற்றம் வேண்டி
பிணியாகத் தோன்றியின்றித் தொற்று நோயாய்ப்
பீடித்தே கொல்கின்ற ஊழல் நோயைத்
துணிவாக எதிர்க்கின்ற மருந்தைப் போன்று
துடிப்புதனைச் செயல்களிலே காட்டு கின்றார் !

மதிமயக்கி மானத்தை இழக்க வைத்து
மரியாதை புகழ்தன்னை மங்க வைத்து
நிதியழித்துக் குடும்பத்தைத் துடிக்க வைத்து
நிர்மூல மாக்கிவீதி நிற்க வைக்கும்
சதிகார ஆட்சியரின் மதுக்க டைகள்
சாவுமணி அடிக்கின்ற கடைக ளென்றே
எதிர்த்தின்று மூடுதற்கே இளைஞர் எல்லாம்
எழுந்திட்டார் எழுந்திட்டார் வெற்றி காண்பர் !
கடற்கரையில் கூடிவெற்றி பெற்ற போல
கனிவளத்தை மண்வளத்தைக் காப்ப தற்கு
முடமாக்கி நெடுவாசல் திட்டம் தன்னை
மூடுதற்கே இளைஞரின்று கூடி நின்றார்
திடமான மனத்தோடு தளர்ந்தி டாமல்
தினமரசு போடுகின்ற தடைத கர்த்தே
இடம்விட்டு நகராமல் எதிர்ப்பைக் காட்டி
இருக்கின்றார் உறுதியுடன் காண்பர் வெற்றி !

ஓடிவரும் ஆறுகளைக் காப்ப தற்கே
ஓரணியாய் இளைஞரெல்லாம் திரண்டு நின்றார்
நாடிவந்து பயிர்வளக்கும் நதிக ளெல்லாம்
நன்னீராய் நடப்பதற்கே காப்பாய் நின்றார்
கோடிகளாய்ப் பணமள்ளி மணலை அள்ளும்
கொடுங்கோலர் தமையெதிர்த்துக் குரல்கொ டுத்தார்
கூடிநின்று மணலெடுப்போர் தமைத்த டுத்துக்
குற்றுயிராய்ப் போகாமல் காக்கின் றார்கள் !


சாதிவிட்டு சாதிபெண்ணைக் காத லித்துச்
சாதிகள்தாம் கலப்பதற்கே ஒன்று சேர்ந்தார்
வீதிகளில் சமத்துவந்தான் உருவா தற்கு
வீற்றிருக்கும் சாதிகளை ஓட்டு கின்றார்
நீதிநேர்மை நிலைநாட்ட ஊழ லோட்ட
நீண்டிருக்கும் கையூட்டின் விரல்கள் வெட்ட
மோதிவெற்றி காண்பதற்கே இளைஞ ரின்று
மௌனத்தைக் களைந்தெழுந்தார் எழுச்சி யோடே !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (13-Sep-17, 7:26 pm)
பார்வை : 72

மேலே