கண்ணீர் அஞ்சலி

அம்மானே !

அகவைகள் ஐம்பத்தைக் கடந்ததுமே - சென்ற
அவசரம் ஏனோ அறியவில்லை ...

அறுதியாய் இருந்த உறவின்று தழுவிய
அமைதியை நெஞ்சம் ஏற்கவில்லை.
---------------------------------------------------------------------------------------
ஆதியின் அழைப்பை ஏற்றதனால் - நீர்
பாதியில் அவர் பின் விரைந்தீரோ ?

ஆழியாய்க் கண்கள் அவிழ்ந்த பின்பும்
அனல் மட்டும் நெஞ்சம்விட்டு அகலவில்லை.
---------------------------------------------------------------------------------------
வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் - ஏனோ
கொஞ்சம் சளைத்துவிட்டீர் ?

காலனின் மீதும் கரிசனையோ - நீர்
மூச்சை அடக்கி முடங்கிவிட்டீர் ?
---------------------------------------------------------------------------------------

இளகிய இதயம் கொண்டதனாலா - அவன்
மீட்டிய இசையை செவிமடுத்தீர் ?

இம்மையில் இச்சைகள் விடுத்துவிட்டு
இறைபதம் எய்தி சரணடைந்தீர் ?
---------------------------------------------------------------------------------------

உறவாய் , உற்றவனாய், உடன்பிறப்பாய்
எத்தனை பரிணாமம் நீர் கொண்டீர் ?

உதிரியாய் உங்கள் நினைவுகள் கொண்டோம்
உம் நாமம் என்றும் மின்னிடும் திண்ணம்.
---------------------------------------------------------------------------------------
உங்கள் இறப்பை ஏற்கிறோம்
இழப்பை அல்ல ....

உங்கள் பயணம் ஏற்கிறோம்
பிரிவை அல்ல ...

ஆதலால் ..
கல்லறையில் துயில் கொள்வீர் ..
மறுமையில் திரும்பிடுவீர் ..

என்றும் உங்கள் பிரிவில் வாடும் ..

உறவுகள்.

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (14-Sep-17, 7:17 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
Tanglish : kanneer anjali
பார்வை : 8065

மேலே