கவிதை திருவிழா- அக்கரைச்சீமை அகதிகள்

பாவமும் நல் புண்ணியமும்
பற்றிய வாழ்க்கை யாலே
தாளாத துன்பம் கொண்டோம்
தன்மானம் அடகில் வைத்தோம்
ஊரிலே பிழைப்பும் இல்லை
உள்ளூரில் மதிப்பும் இல்லை
தேரிலே வந்தா தெய்வம் - நம்
பேரிலே படி அளக்கும்
மழைநீர் மறந்து மாதங்களாச்சு
மருந்தும் உரமும் பயிர்கொன்றாச்சு
விளையும் நிலமோ, கனவென்றாச்சு
வினையின் விளைவே விதியென்றாச்சு
அடைக்கலம் என்று போனால்
அரசியல் பிழைப்பாய்ப் போச்சு
உழுகின்ற நிலமும் போச்சு - வலை
விழுகின்ற மீனும் போச்சு
கடலிலும் அடிமை கொள்ளும்
கயவர்கள் சூழலாச்சு என
தெருவுக்கோர் மேடை போட்டு
தினம்தினம் இதுவே பேச்சு
தள்ளாத வயதில் தாய்க்கு
தனிமையை துணையாய் தந்தோம்
இல்லாமை வாழ்வில் நீந்த
இடரெனும் படகு கொண்டோம்
சிறுவிரல் வாயில் வைத்து
சிரிக்கின்ற குழந்தை விட்டு
மனைவியின் அன்பு முகம்
மங்கலாய் மறைய விட்டு
வந்தோமே வாழ்வு தேடி
வளைகுடா நாடு தேடி
பிழைகொண்ட வாழ்வுதானோ? - இழி
பிறவியோ பெருந் தவறோ?
மலை கொண்டால் வாழ்வோ
அலைகொண்ட கடலே நீசொல்
அக்கரைச் சீமை யென்றால்
அவனவன் அகதி தானே.
- கரு. அன்புச்செழியன்