அயல்தேசத்து அகதியான கதை

வயது முதிர்ந்த தந்தையின் வருவாயில்,
வீட்டில் தண்டமாய் அமர்ந்து சாப்பிடும் போது ஏற்படும் குற்ற உணர்வு,
மெல்ல என்னை கொன்று கொண்டிருந்தது.
தொண்டைக்கு கீழ் சென்ற உணவு மலமாய் மாறும் முன்னரே,
அந்த வார்த்தையை உச்சரித்து குத்தி காட்டும் சித்தியின் நினைவு,
சட்டென வந்து மறைந்தது.
படிப்புக்கேற்ற வேலையை தேடி தினமும் தேய்ந்து கொண்டிருந்தேன்,
செருப்பை விட மோசமாய்..
எத்தனையோ இரவு உறக்கமின்றி உருகுலைந்து இருக்கிறேன்.
கண்துடைப்பு வேலை வாய்ப்புகளை நம்பி கொண்டு.
ஏமாற்றவே கூடாது என்ற நேர்வழியை,
எனக்கு பின் வந்தோரெல்லாம் ஏறி மிதித்து குறுக்கு வழியில் முன்னேறி விட்டனர்.
உறவுகள் அணைத்தும் என்னை பார்த்ததும் வலுக்கட்டாயமாய்,
புன்னகைக்க முயன்று தோற்று போனதை நானும் அறிவேன்.
கடன் கேட்டு விடுவானோ என்றென்னி,
என் வார்த்தைகளுக்கு முன்னதாகவே தன் போலி கஷ்டங்களை வரிசை படுத்திய நண்பர்களும் என்னை கடந்து செல்கின்றனர்.
ஏமாற தயாராக இருங்கள் என்று சவால் விடுக்கும் விற்பனை விளம்பரங்களை போல நானும் உலகமெனும் சந்தையில் என்னை நானே மிகைப்படுத்தி அடமானம் வைக்க போகிறேன்.
எந்த வேலை என்றாலும் என்னால் செய்ய முடியும் என்ற அதீத பொய்களை சுமந்து,
நானும் அடிமையாகி அயல் தேசம் செல்ல போகிறேன்..
வேலை இல்லா குற்ற உணர்வை இனியேனும் வெல்வேனா..

எழுதியவர் : சையது சேக் (26-Sep-17, 8:58 pm)
பார்வை : 89

மேலே