இல்லத்தரசி

பட்டங்கள் வாங்கினாள் பழுப்படைந்து பெட்டிக்குள்
பட்டையம் அவளுக்கு இல்லத்தரசி என்று
கட்டிய தாலியால் பூட்டிய கட்டுக்குள்
கிட்டிய திறவுகோலை தட்டித் தொலைத்தாள்.....

துள்ளிய நாட்களை துயிலில் தள்ளி
வெள்ளி உறங்கும் முன்னே விடியலானாள்
பள்ளியறை அன்பின் உள்ளிடையாகி
வள்ளி காதலனை கொள்ளிக்காய் ஈன்றாள்.....

அடுப்பங்கரை அமந்திரங்களோடு அசையா சொத்தானாள்
மண்டியப் புகைக்குள் முண்டிய எண்ணங்கள்
குருட்டு வௌவாலாய் சுவர்களில் மோதி
செவிட்டு அறைக்குள் புலம்பி அடங்கியது...

நத்தையாய் ஊறும் நாட்காட்டி வாழ்வில்
நித்திய சுமையை நத்தமாய் சுமந்தாள்
சொற்பமாய் சிற்சில மணித்துளி இடைவெளி
சொர்க்கமாய் எட்டிப் பார்க்கும் நினைவுகள்...

உறுத்தும் உள்ளத்தில் உணர்வுகள் மேலெழ
அவளுக்குள்ளும் ஆயிரம் கவிதைகள் துளிர்க்கும்
இதய அறைக்குள் ஏடுகளாய் பதுக்கினாள்
தான் மட்டும் தனக்குள் ரசிப்பதற்காய்....

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (27-Sep-17, 4:05 pm)
Tanglish : illatharasi
பார்வை : 75

மேலே