பிழைப்பு தேடி

பிழைப்பு தேடி

தனது பின்புற உடலை புற்றுக்குள் நுழைக்கு முன் ‘புஸ்’ என்று சீற்றத்துடன் தன் தலையை விரித்து படம் காட்டியவாறு மெல்ல பின் உடலை உள்ளே நுழைத்தது.எல்லா உடலும் உள்ளே நுழைந்து விட்டதை உறுதி செய்த பின் தன் தலையை சுருக்கி முழுவதுமாய் புற்றுக்குள் நுழைந்தது அந்த நாகப்பாம்பு.
அதை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த மாரியம்மாள் தன் கைகளால் கன்னத்தில் போட்டுக்கொண்டு “ஆத்தா” என்று வாய் விட்டு சொல்லி விட்டு புற்றுக்குள் அருகில் வைத்திருந்த பூ கூடையை எடுத்துக்கொண்டு நடந்தாள்.மனசு கொள்ளா சந்தோசத்துடன் காணக்கிடைக்காத மகிழ்ச்சியில் சென்று கொண்டிருந்தாள்.
அவள் கணவனை வெளியூரில் கட்டட வேலைக்கு ஆள் தேவை என்று கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவன் இவளை விட்டு போக மாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்தான். இவள் தான் அவனை ஒரு வழியாக பேசி சம்மதிக்க வைத்திருந்தாள். நாளை காலையில் நேரத்தில் கிளம்ப வேண்டும். லாரி வீட்டுக்கருகே வந்து நிற்கும், அதில் ஏறிக்கொண்டால் போதும்.
கல்யாணமாகி பதினைந்து வருடங்கள் ஆகிறது. இதுவரை கணவனை விட்டு பிரிந்ததில்லை.ஆனால் மழை பொய்த்து விவசாயம் அவர்களை கை விட்டபின் என்ன செய்வது? முதலில் இவளுக்கு கணவனை தனியாக அனுப்புவதற்கு விருப்பமில்லை.
எத்தனை நாளைக்கு வெறும் கஞ்சிய குடிச்சுகிட்டு இருப்பது.வேற ஏதாவது வேலைக்காவது
போய்த்தான் ஆக வேண்டும், என்ற நிலையில் தொலை தூரத்தில்.உள்ள ஊருக்கு கட்ட்ட
வேலைக்கு ஆட்களை கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இவளுக்கு முதலில் தயக்கமாக இருந்தாலும் சரி கணவனை அனுப்பி வைப்போம் என்று முடிவு செய்தாள்.
இந்த பதினைந்து வருடங்களாக அவளையே சுற்றி வந்து கொண்டிருந்த அவள் கணவன், அவளை விட்டு பிரிய ஒத்து கொள்ளவில்லை. இவள் போய்ட்டு வாய்யா
என்று சமாதானப்படுத்தி வைத்தாள்.
காலையில் கணவன் கிளம்ப போகிறான், என்ன நினைத்தாளோ மாலையில் அந்த புற்றை வந்து கும்பிட்டு வருவோம் என்று கிளம்பி வந்து விட்டாள். எப்பொழுதாவது ஒரு முறை அந்த வழியாக செல்லும்போது அந்த புற்றை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வாள். இன்று ஏதாவது ஒன்றில் மனதை ஈடுபட வைக்கவேண்டும் என்று அவள் மனது நினைத்த்தால், ‘சரி புற்றுக்கு கொஞ்சம் பூ வைத்து கும்பிட்டு வருவோம்’ என்று கிளம்பி வந்து விட்டாள். வந்தவள் ஐந்து நிமிடம் நின்று மனதுக்குள் எதையோ வேண்டிக்கொண்டு கூடையில் இருந்த பூக்களை புற்றின் மீது வீசி விட்டு கூடையை கீழே வைத்தவள் சர சர் வென சத்தம் கேட்டு பயந்து சற்று பின்னால் தள்ளி நிற்கும்போதுதான் இந்த நாகப்பாம்பு புற்றின் வலது புறத்திலிருந்து உள்ளே நுழைந்ததை கண்டவள் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் விவசாயிதான், பல தடவை பல பாம்புகளை பார்த்திருக்கிறாள் என்றாலும்,
அது அவள் கும்பிடும் நேரம் வந்தது அவளுக்கு நல்ல சகுனமாக பட்டது.
அவள் கணவன் லாரி ஏறி சென்று ஒரு வாரமாகி விட்டது. அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவர்களுக்கு சொந்தமான காட்டுக்கு சென்று சிறிது நேரம் கொத்தி விட்டு வருவாள். பக்கத்து காட்டு கனகாக்காள்தான் இவளுக்கு சோடி. வந்து பேசிக்கொண்டிருப்பாள். அவள் கணவனும், மாரியம்மாள் கணவன் கிளம்புகிறான் என்று தெரிந்தவுடன் அவனையும் லாரியில் ஏற்றி அனுப்பி விட்டாள்.அவளுக்கு ஒரே ஒரு பெண்
அவளையும் கொஞ்சம் தள்ளி உள்ள ஊருக்கு கட்டிக்கொடுத்து விட்டதால், ஒண்டிக்கட்டையாக இருப்பதற்கு மாரியம்மாளுடன் இருப்பதால் பொழுதை போக்க முடிந்தது. சில நாட்களுக்கு
இவளே மாரியம்மாளுக்கும் சேர்த்து சமைத்து காட்டுக்கு கொண்டுவந்து விடுவாள்.எப்படியும் பக்கத்து பக்கத்து காடுகளிலிருந்து பெண்களும் இவர்களோடு சேர்ந்து கொள்வார்கள்..
பகலில் இவளது பொழுது சுலபமாய் கழிந்தாலும்,குடிசைக்கு வந்தவுடன் அவன் ஏக்கம் மனசுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும். அவன் என்ன செய்கிறானோ என்று கணவனை நினைத்து அடித்துக்கொள்ளும். போய் பத்து நாளைக்கு மேல ஆயிடுச்சு, என்ன பண்ணறாருன்னு ஒரு பதிலையும் காணோம். கூட்டிப்போன ஆளு இந்த பக்கம் வருவான்னு பார்த்தா அவனையும் காணோம்.
சே நமக்கு என்ன புள்ளையா,குட்டியா?போய்தான் சம்பாரிச்சு என்னத்தை கண்டுகிட்டோம், அந்த ஆளை பேசாம இங்கனயே வர சொல்லிடலாம். இப்படியும் மனது நினைத்துக்கொண்டது.
நான் இல்லாமல் எப்படித்தான் சமாளிச்சுக்குதோ. சும்மாவே சுகவாசி,
நான் பாத்து இழுத்துட்டு போய் சுடுதண்ணி காய்ச்சி ஊத்துனாத்தான் குளிக்கவே செய்யும்.
இப்ப அங்க யாரு அதுக்கு குளிக்கறதுக்கு தண்ணி காய்ச்சி தருவா?
இங்கிருந்தால் இருவரும் காட்டு வேலைகளை முடித்து விட்டு மாலை குடிசைக்கு
வந்தால், முதலில் இருவரும் அடுப்பை மூட்டி சுடு தண்ணி வெச்சு தண்ணி வார்த்தால்தான் திருப்தி. அதுக்கப்புறம் இவள் வைக்கும் கஞ்சியை ஊறுகாயை வைத்து குடித்து விட்டு நேரத்துக்கு படுத்து விடுவார்கள்.இப்பொழுது எத்தனை மணிக்கு அங்கன தூங்க விடுறாங்களோ.அவளுக்கு நினைக்கும்போதே அழுகை வந்தது.நான் ஒரு மடைச்சி, அந்த ஆளை போக விட்டுருக்க கூடாது.
ஆயிற்று ஒரு மாதம், பக்கத்து காடு கனகாக்காள் வீட்டுக்காரன் கூட ஒரு முறை வந்து விட்டு போய் விட்டான். வரும்போது இவளுக்கு கொஞ்சம் தொகையையும் கொடுத்து விட்டிருந்தான். அவளுக்கு பணம் வந்தது கூட பெரியதாக படவில்லை. ஒருதரம் வந்துட்டு
போயிருக்கலாம்ல இந்த ஆளு. மனது ஆற்றாமையால் தவித்தது.
கனகாக்காள் வீட்டுக்காரன் வேறு மாரியம்மா உன் புருசன் அங்க சுகமா இருக்கான்
என்று சொல்லி விட்டான். அதை கேட்ட்து முதல் அவள் மனதுக்குள் ஒரு ஏமாற்றம்
படலமாய் வந்து உட்கார்ந்திருந்த்து. இங்க நான் இந்த ஆளு இல்லாம எம்புட்டு கவலையா
இருக்கேன், அங்க என்னடான்னா அந்த ஆளு சுகமா இருக்கானாம். பொரும ஆரம்பித்து விட்டாள்.
ஒரு வழியாக இரண்டு மாதம் கழிந்து குடிசைக்கு வந்து விட்டான். தோற்றங்கள்
கொஞ்சம் மாறி இருந்தன, இங்கு ஒரு வேட்டியும், கை பனியனும் போட்டிருப்பான். இபொழுது கைலிகள் இரண்டோ, மூன்றோ கலராய் வைத்திருக்கிறான். சட்டைகள் கூட இரண்டு மூன்று வைத்திருக்கிறான். இவளுக்கு கூட சில்க், சேலைகள் இரண்டு வாங்கி வந்திருக்கிறான். அப்புறம் பவுடர்,கண் மை இவைகள் கூட கொண்டு வந்திருந்தான்.
இந்தா புள்ளை, என்று அவளை சுற்றி வந்தாலும், அவனே எழுந்து குளித்து கொள்வதும், இவளிடம் பணத்தை கொடுத்ததோடு சரி. அவளே கடைக்கு போய் மளிகை வாங்கி வந்தாள், இங்கிருக்கும்போது சமைக்கும் அடுப்பின் பக்கத்தில் உட்கார்ந்து
அவளுடன் கதை அளப்பான். அது எதுவும் இல்லாமல், கையில் ஒரு சிகரெட்டை பற்றை
வைத்துக்கொண்டு குடிசைக்கு வெளியே ஒரு கயிற்று கட்டிலை போட்டுக்கொண்டு, காதுக்கருகில் ட்ரான்சிஸ்டரை வைத்து சுகமாய் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான்.
இதை பார்க்க பார்க்க இவளுக்கு அவன் தன்னை விட்டு தூரம் போய்க்கொண்டிருப்பதாக பட்டது.
வாய்யா அந்த புத்து கோயிலுக்கு போய்ட்டு வந்திடலாம், மறு நாள் காலையில்
கூப்பிட்டதற்கு அவன் இல்லை புள்ளை, நீ மட்டும் போயிட்டு வா, எனக்கு வேலை இருக்கு
என்று சொல்லிவிட்டு அந்த ரேடியோ பெட்டியை எடுத்து வைத்து உட்கார்ந்து கொண்டான்.
இவள் மனமில்லாமல் அந்த புற்றுக்கு சென்று கும்பிட்டு விட்டு வந்தாள்.
இரண்டு நாட்கள் கழிந்து அவன் புள்ளை “நாளைக்கு நான் கிளம்பறேன்” என்று சொன்னவுடன் இவள் மனசு சுத்தமாக சோர்ந்து விட்டது. வேணாம்யா இங்கனயே இரு,
நாம் இருக்கற வேலைய நம்ம காட்டுலயே பாத்துக்கலாம்.சொன்னவளை கோபத்துடன் பார்த்தவன் என்ன பேச்சு பேசறே, அங்க எனக்கு தலைக்கு மேல வேலையிருக்கு.
முதலாளி என்னைத்தான் நம்பியிருக்காரு, அங்கன அமபது ஆளுகளுக்கு என்னையத்தான் சம்பளம் கொடுக்க சொல்வாரு. அந்தளவுக்கு நம்பிக்கை வச்சுருக்காரு.இப்ப லீவு கொடுக்கும்போது கூட சீக்கிரம் வந்துடணும்னு சொல்லித்தான் என்னை அனுப்பிச்சிருக்காரு.
நீ பாட்டுக்கு பொசுக்குன்னு போகாதேன்னு சொல்லிட்டே.
இங்க நான் தனியா என்னதான் பண்ணுறது? அவளின் குரலில் அழுகை எட்டிப்பார்க்க
அவன் கொஞ்ச நேரம் அவள் முகத்தை பார்த்தவன் இந்தா புள்ளை கவலைப்படாதே, இந்த
முறை முதலாளிகிட்ட சொல்லி அடுத்த முறை உன்னை கூட்டிட்டு போறேன். சொல்லிவிட்டு அதற்கு மேல் பேசாமல் போய் படுத்துக்கொண்டான்.
அவளுக்கு சொந்தமான பொருள் அவளை விட்டு தூரமாக போய்க்கொண்டிருப்பதாக அவள் மனசுக்கு பட்டது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Sep-17, 12:35 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : pilappu thedi
பார்வை : 287

மேலே