குழந்தைகள் உலகம்

குழந்தைகள் உலகம்

கற்பனை குதிரைகள் புல்லட் ட்ரெய்ன் வேகத்தில் ஓடும் பருவம்.
அந்திசாயும் வண்ணங்கள் போல்
புதிதாய் புதுமையாய்
சிறகுகளில் கண்ணைப்பறிக்கும்
ப்ளூரசன்ட் ஒளிகற்றைகளை ஒளிர்விக்கும் பொழுது.

சாத்தியமில்லை என்ற வார்த்தை இவர்களது ஏட்டில் சத்தியமாய் இல்லை.
வானத்தை தாண்டிய வளிமண்டல கோட்டைக்குள் சிண்ட்ரல்லாவையும் வேதாள விபூஷகர்களையும் யதார்த்த ஹீரோக்கள் போல பாவித்து அவர்களின் ஏக்க தேக்கங்களின் நோக்கங்களோடு வாள்வீசும் வயது.

நித்தியவாழ்வு எனும் பேரின்பபெருவாழ்வு போன்ற அவதானிப்பை
இவர்களது கனவுகள் நமக்கு சொல்லாமல் செல்வதில்லை.
ஏட்டறிவில் குறைந்திருப்பினும்
வான்கோள்கள் கண்துஞ்சாது வட்ட இயக்கப்பாதையில் சுற்றி வருவதுபோல்
தமது தேடல்வேட்டையை விமர்சனங்களை சட்டை செய்யாமல் தொடர்கிறார்கள்.

பூமியில் நடமாடும் இப்பூப்பந்து
நித்தியத்துக்கு சொந்தமான உயிர் முடிப்பை சுமையில்லாமல் வலிதெரியாமல் சுமந்து கொள்கிறது.

கருப்பை தான் உலகம் என்பதை உடைத்துப்பிறந்த உயிராதலால்
கம்ஃபர்ட் ஜோன்கள் தாண்டும்
பிக்பேங் கருத்தியல்களை
தன்னோடு இணைத்துப் பிணைத்து
வெடித்துப் பிறக்கிறது.

எண்ணிய கருமத்தை எவை எதிர்வரினும்
துணிந்தாற்றும் வீரவினோத வைராக்கியம்
மழலைப் பட்டாளங்களின் தனிப்பெரும் சொத்து.
இன்னும் எதை நான் சொல்ல இவர்களின்
ஜகதலபிரதாபங்களை.

ஒன்றுமட்டும் சொல்லுவேன்
முடிந்தால் கற்றுக்கொள்வோம் நமது முன்பருவ வரலாறுகளை.
ஆனாலும் முடக்கிவிடவேண்டாம்
குழந்தைகளின் வான்துளைக்கும் கனவுகளை.

எழுதியவர் : ஜான் பிரான்சிஸ் (3-Oct-17, 7:23 pm)
பார்வை : 3282

மேலே