கிராமத்து காதல்
அடியே அத்த மகளே
என் ஒட்டுமொத்த சொத்தின் நகலே!
அஞ்சாறு வருசம் கழிச்சு உன்
ஆசமுகம் பாக்க வந்த இந்த
பட்டாளத்து மாமனின்
பாசமுகம் நெனவிருக்கா ?
வண்டி மை எடுத்து
கண்ணில் மை எழுதி
நாம நடிச்ச கட்டபொம்மன்
நாடகமும் நெனவிருக்கா ?
எருக்கம்பூ எடுத்து
வாழ நாரில் அதத் தொடுத்து
நமக்கு நடந்த நாடகக்
கல்யாணம் நெனவிருக்கா ?
நொங்கு பழம் பறிச்சு
சரிபாதி பங்கு வச்சு
பசிய தீத்துக்கிட்ட
பனமரமும் நெனவிருக்கா ?
ஆத்துல மீன் பிடுச்சு
அரகுறையா அத சமச்சு
கூட்டமா கூடித் தின்ன
கூட்டாஞ்சோறு நெனவிருக்கா ?
நீ குத்தவச்ச சேதியின
அத்த வந்து சொன்னதுமே
சொத்த வித்து சீர்செஞ்ச
இந்ந தாய்மாமன் நெனவிருக்கா ?
ஊரெல்லாம் உச்சு கொட்ட
இந்த மாமன் வந்து குச்சிக்கட்ட
அந்த ஒலக்குச்சி ஓட்டவழி
நீ பாத்த பார்வ நெனவிருக்கா ?
கட்டிக்கிட்ட தாவணிய
மாமன்கிட்ட காட்டவந்து
வெக்கப்பட்டு கதவோரம்
ஒழிஞ்சதுவும் நெனவிருக்கா ?
சனிக்கிழம சந்தையில
சாடமாடப் பாரவையில
பேசாமப் பேசி
பிரிஞ்சதுவும் நெனவிருக்கா ?
ஒத்தையடி பாதையில நீ
ஒத்தையில போகையில
அத்தமகன் நான் குடுத்த
ஆசமுத்தம் நெனவிருக்கா ?
கடனா தந்த முத்தம்
உடனே வேணும்முன்னு
வட்டிக்கட 'சேட்'ட போல
நா செஞ்ச சேட்ட நெனவிருக்கா ?
பட்டாளம் போற மாமா
பத்திறமா வந்திடுன்னு
வந்த கண்ணீர் தொடச்சுக்கிட்டு
என்ன வழியனுப்பி வச்சவளே
சிப்பாய் மாமன் இப்ப
ஜீப்பேறி வந்துருக்கே
கருவாச்சி உன்ன பாக்க
கடல் தாண்டி வந்துருக்கே
எத்தன நாளாச்சு உன்
எட்டுவச்ச நடபாத்து
வருசமோ ஆறாச்சு
வட்டநிலா முகம் பாத்து
அத்த மகளே முத்தம்மா
ஓடோடி வந்துருடி
சேத்துவச்ச மொத்தத்தையும்
'முத்தம்'மா தந்துருடி....