பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்
பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்..!
==============================
நஞ்சுக்கொடி மூலம்தான் பிள்ளையும் தாயுமோர்..
..........நல்லுறவுக்கு மேன்மையாய் உலகுக் குதாரணமாம்.!
அஞ்சு விரலாலவள் தானீன்றமகவை அனுதினமும்..
..........ஆரத்தழுவி முத்தம் கொடுக்கும் அன்புத்தாயாம்.!
விஞ்சி நிற்குமன்பைதன் பிஞ்சுமனங்களில் தேக்கி..
..........வெள்ளை மனதுடன் வெளிப்படுத்துவாள் அன்னை.!
பிஞ்சுக்குழவிக்கு கொஞ்சி அமுதூட்ட!...அழைப்பாள்..
..........ஓடும்பிறை நிலவையும்! தூவும்செல்ல மழையையும்.!
துஞ்சும் குழவியழகைத் தன்கருப்பையுள் உணர்ந்து..
..........தாலாட்டுப் பாடுபவள்தான் தாயெனும் தெய்வமாம்.!
மிஞ்சுகின்ற துன்பமும் கவலையுமவள் மனதில்..
..........மறைந்தோடும்...நொடியில் தன்மகவை ஈன்றவுடன்.!
அஞ்சும் குழந்தையை அரவணைக்க அவளழைத்தால்..
..........ஆவலோடு ஆவின் கன்றுபோலத் தவழ்ந்தோடிவரும்.!
பிஞ்சுமனங்கள் பெரிதே மகிழ்ச்சியுற!..வான்முகிலும்..
..........பிறைநிலவும் மழைத்துளியும் அழையாமலே வருமாம்.!
அழுமுன்னே குழந்தையின் தேவையெது வெனவறிந்து
..........அமுதூட்டும் செய்கையால் அவனியிலோங்கி நிற்பாள்.!
தழுதழுக்கு மன்பைதன் தொண்டையுள் அடக்கும்..
..........தாய்காட்டும் அன்பைவிட மேலாகும் அன்பிலையாம்.!
முழுநிலவை வான்மேகம் மறைக்கும் செயலைப்போல்..
..........முடங்காத அன்பைதன் முகத்திலே மறைத்திருப்பாள்.!
வழுவாதிருக்கும் இப்பண்பினால் “அன்னை” என்பாள்..
..........வாழுமுலகில் தனக்கீடா யவருமிலாது சிறந்திருப்பாள்.!
=======================================================
நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::18-09-17
நன்றி:: கூகிள் இமேஜ்.