காத்திருந்த நேரம்

களவு போனது காதல் தருணங்கள்
நிலவு போனது இருளும் ஆனது
இலவு காத்த கிளியாய் நான்
பிளவு ஏனோ நம்மில் வந்தது

உலவி வந்தோம் காதலில் விழுந்து
பழகி வந்தோம் எண்ணத்தில் கலந்து
குளவி ஒன்று இதயத்தைக் கடிக்க‌
குழவி போன்று அழுகிறேன் இன்று

சிலையோ என்று என்னை வர்ணித்தாய்
கிளையோ அழகின் என்று கவிபடித்தாய்
பிழையென செய்தேன் இப்படி தண்டித்தாய்
தலைகவிழ்ந்து வடிக்க வைத்ததேன் கண்ணீரை

உருகி உருகியே அப்படி காதலித்தோம்
பருகி மகிழ்ந்திட்டோம் காதலின் ருசியை
பெருகி வந்த காதலின்று எங்கே
அருகியதோ அன்பு தொலைந்தே போனதுவோ

மீண்டும் வருவாயென நான் பார்த்திருக்கின்றேன்
தீண்டும் துன்பம் ஓடுமென நினைத்திருக்கின்றேன்
தாண்டி வந்துவிடு பிரிவொன்று நமக்கெதற்கு
வேண்டி கேட்கிறேன் காதலையே தந்துவிடு

காத்திருந்த நேரமெல்லாம் நன்மைக்கென்றே உணர்த்து
பாத்திருந்த காலமெல்லாம் லாபமென்றே உரைத்து
நேத்திருந்த சோகமெல்லாம் அடியோடு விலக்கு
பூத்திருக்கும் மனசுக்குள்ள ஏற்றிவையேன் விளக்கு... 

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-17, 4:10 pm)
பார்வை : 358

மேலே