சாய்ந்ததால் ஓய்ந்ததே

"சாய்ந்ததால் ஓய்ந்ததே.."

இன்னமும் நிழலாடுகிறது என் மனத்தில்,
புன்னகை ததும்பும் உன் சாந்தமான முகம்..
சின்னச் சின்ன ஆசைகளையும் சலிக்காமல்,
மின்னலாய் நிறைவேற்றி வந்தவனே..

என்னைத் தனியே தவிக்கவிட்டு,
உன்னைப் பிரித்துச் சென்ற காலனுடன்,
பின்னேயே செல்வாயென,
முன்னமே அறிந்திருந்தால்,
என்னுயிர் கொடுத்து உனை மீட்டிருப்பேனே..

மண்ணுக்குள் உனை புதைத்தப்பின்,
மனத்திற்குள் உன் நினைவை விதைத்ததால்
ஓயாத விழி நீரும்,
காயாத கன்னங்களும்,
இப்பிறவி முழுமையும் எனைத் தொடருமே..

சாய்ந்த ஆலமரத்தின் அடியில்
சோர்ந்து கிடக்கும் ஒற்றைப்பறவையாய்
காலம் எனக்கெழுதியிருப்பதில் மிச்சத்தை
கடந்து செல்லும் மனோதிடத்தை உன்
நினைவுகள் எனக்கு அளித்திடட்டும்..

முன்னால் நீ சென்றதால் வென்றதாய் எண்ணாதே..
பின்னால் நான் வரும் வேளை வரை காத்திருப்பாய்


மகேஸ்வரி பெரியசாமி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (7-Nov-17, 6:49 pm)
பார்வை : 75

மேலே