மழையோடு நானும் குடையோடு அவளும்
எல்லோர் காதல் வைபவத்திலும் மழைக்காலங்கள் முக்கிய இடம் பிடித்திருக்கும். முதல் பார்வைச் சாரலாக, இதழ் முத்தத்தின் ஈரமாக, தேக அனலின் ஆவியாக, பிரிதலின் கண்ணீராக மழை காதலோடு ஆகப்பெரும் உறவு கொண்டது.
குளிர்ந்த வானிலிருந்து துளித்துளியாய் குதிக்கும் அம்மழை இந்நொடிப் பொழுதில், எங்கோ ,
ஒரு கவிஞனை போல ஏதோ ஒரு காதல் கதையின் முதல் கவிதையை தற்போது எழுதிக் கொண்டிருக்கலாம், உடைந்த விரிசல்கள் வழி நுழைந்து காதல் விதைகளை விழித்தெழச் செய்யலாம்.
துருவங்களில் தொலைந்த இருவரை ஒரே குடையின் கீழே ஒளிந்துக் கொள்ளச் செய்து அவர்களின் மார்பில் வழிந்து மனக்குரலை ஒட்டுக் கேட்டுச் சிரிக்கலாம்.
அருகிலிருந்தும் வாய்மூடி பேசியவர்களை அவசர காலம் கருதி அடைமழையாக வார்த்தைகளில் தொலைந்து போகச் சொல்லலாம்.
காணமால் போன வெள்ளை மேகங்கள் காபி கோப்பை வழியே வெளிவருவதை கண்டு ரசித்து ஒரு ஒருவர் மற்றொருவரை அருந்திக் கொள்ள வைக்கலாம்.
ஜன்னல் கம்பியில் இடம்மாறும் இடைவெளியில் இளையவளின் நினைவை இதயத்தில் பரவவிட்டு சொட்டுச் சொட்டாக ரசித்துப் பார்த்திருக்கலாம்.
அவன் உடலுரசி வந்த பயணத்தை நினைவுபடுத்தி உள்ளூர குளிரச் செய்து உறையும் காதலுக்குள் உத்தம வில்லனாய் அம்பை எய்தலாம்.
அவள் தேகத்தை ஆராதிப்பதை நிறுத்திக் கொண்டு உரிய ஆணுக்கு அனுமதி தந்து ஆசைப் புயலை மையம் கொள்ளச் செய்யலாம்.
கருங்கூந்தல் அருவி தாண்டி கன்னத்தில் பதிந்து விட்டு உதடு வந்து முத்த நீராடி மாயும் முன் எச்சில் சுவையேறி இன்பம் களிக்கலாம்.
ஊடல் கொண்ட இரு கைகளின் நடுவே ஈரமாய் இருந்துவிட்டு கூடல் வெப்பத்தில் குளிர் காய்ந்து கொண்டிருக்கலாம்.
மழை வரும் முன்பே ஆடிவிட்ட மயிலாய் பிரிந்த அவனின் எண்ணச் சலங்களை காட்சி பிம்பாய் காட்டி கொண்டிருக்கலாம்.
போதும் இனி பிரிந்துவிடலாம் என குடையோடு சென்றவளை நித்தம் எண்ணி வாடியவனை ஆரத்தழுவி ஆறுதல் சொல்லிவிட்டு கண்ணீரோடு கடலை சேர்ந்திருக்கலாம்.