பேதலிக்கும் மனது

நந்தவனமாய் பூத்திருந்த
அவள் வாழ்வு ஒற்றைச் சொல்லில்
கருகிப் பொட்டலாகிவிட்டது..

சொந்தம் என்றெண்ணி
துள்ளலுடன் கட்டிய கோட்டை
நொடிப்பொழுதில் சிதிலமடைந்து விட்டது..

வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சி,
நொந்துப் போனவளை
நோக்கமில்லா கொலை செய்துவிட்டது பாழும் விதி.

அந்தரத்தில் ஆடிக்கொண்டிருக்கும்
அவள் வாழ்வில் இனி மீந்திருப்பது
மீளாத்துயர் மட்டுமே...

ஐயங்களை மனத்தில் எழுப்பி,
மெய்யாக இருந்தவளைப்
பொய்யாக்கி பழிசுமத்தி,
குற்றுயிராய் ஆக்கியதேனோ?

கடமைக்காக வந்தபோது
இசைவோடு வாழ்ந்தவன்,
காதலோடு வருகையில்
கருணைக்காட்டாது புறந்தள்ளியது
நம்பிக்கையின்மையில்தானோ?

மூன்று முடிச்சில்
முழுமையாக ஏற்றுக்கொள்கையில்
முரண்படாத எண்ணங்கள்,
முழுமனத்துடன் உள்ளங்கசிய வருகையில்
பேதம் பார்ப்பதுமேனோ?

விதிக்கப்பட்டதைச் சகித்துக்கொள்ளும்
குணம் சத்தியமாக உண்டென்பதை
உணராத மனத்திற்கு,
வாழ்நாள் முழுவதும்
துயரமே உற்றத்துணையாக இருக்கும்
என்பதே நிதர்சனம்...


மகேஸ்வரி பெரியசாமி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (8-Nov-17, 6:13 pm)
பார்வை : 363

மேலே