நல்ல நட்பு

நல்ல நட்பு!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

'நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய்.' (அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.)

தனிமனித சீர்திருதத்திற்கும் சீரழிவுக்கும் உள்ளமும் சூழலும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட ஹதீஸ் தனிமனித வாழ்வில் சூழல் ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றி விளக்குகிறது. நபிصلى الله عليه وسلمஅவர்கள் அதனை அழகிய உதாரணத்தினூடாக விளக்குகிறார்கள். சூழல் எனும் போது பெற்றோர், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் கருத்திற் கொள்ளப்படுகின்றனர். ஒரு குழந்தையின் வாழ்வில் ஆரம்பமாக பாதிப்பை ஏற்படுத்துவோர் பெற்றோர்களாவர்.

எனவே தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்பின்வருமாறு கூறினார்கள்:'ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹூதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன'.

பெற்றோருக்கு அடுத்தபடியாக, உற்றார் உறவினரை விட நண்பர்களால் ஒரு பிள்ளை பாதிப்படைகிறது. பால்ய வயதை அடைவதற்கு முன்பே அது கூடி விளையாடுவதற்கு நண்பர்களைத் தேடுகிறது. நட்பு கிடைக்கும் பட்சத்தில் அது உள அமைதி அடைகிறது. நட்புக்கத் தடையாக பெற்றோர் அமைகின்ற போது அது உளச் சிக்கலுக்கும் உள இறுக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டு, வேண்டத்தகாத விளைவுகளை குடும்பத்தில் தோற்றுவிக்கிறது. அநேகமாக பெற்றோரின் வழிகாட்டல் இன்றிய நட்புத் தேடல் படுமோசமான பாதிப்புகளை ஆறாத வடுக்களாய் பிள்ளைகளிடம் விட்டுச் செல்கிறது. இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை நட்புத் தேடலையும் நெறிப்படுத்தி வழிகாட்டியிருப்பது எம்மை வியப்பிலாழ்த்துகிறது.

நபித்துவ வழிகாட்டலின் வெளிச்சத்தில் நட்புத் தேடலை விளங்க முயற்சிப்போம். நண்பர்களை எக்கோணத்திலிருந்து விளங்கினாலும் கூட அவர்களை இரு வகையாக அமைகின்றனர். நல்ல நண்பர்கள் கெட்ட நண்பர்கள்.

நல்ல நண்பன் தனது நட்பை முதலில் எவ்வித பேரமும் பேசலும் இன்றி, முன் நிபந்தனையின்றி விரிந்த மனப்பான்மையுடன் கருமித்தனம் ஏதுமின்றி அள்ளி வழங்கத் தயாராக இருப்பான். இவன் கஸ்தூரியை இனாமாக வழங்குபவன் போலாவான். சிலபோது பிறரினால் இவன் வஞ்சிக்கப்படலாம். அப்பாவியாகக் கருதப்படலாம். நல்ல நண்பன் தனது தரத்தினை பெறுமதியாகக் கருதுகிறான். தனது சிந்தனை ஆன்மா, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் விழுமியம் என்பனவற்றை இலவசமாகக் கொடுத்துக் கிராக்கியைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தனது ஆளுமைப் பண்புகள் இதர மனிதர்களால் மாசுபடுவதை இம்மியளவும் விரும்புவதில்லை. எனவே, அவன் தனது நட்பை நாடி வரும் மனிதர்களை நோக்கி முன் நிபந்தனை - உறுதிப்பிரமாணம் என்பனவற்றின் அடிப்படையில் நகருகிறான்.

எனது நல்ல நண்பர்களுக்கு உங்களால் மாசு கற்பிக்கப்படும் போது கெட்ட பாதிப்பு ஏற்படும் போது உங்களுடன் உள்ள நட்பை முறித்துக் கொள்வேன் என்று பேரம் பேசி நட்பைப் பகிர்ந்து கொள்கிறான்.

இவன் பணத்திற்கு கஸ்தூரியை விற்பனை செய்பவன் போலாவான். ஹதீஸின் மூலத்தில் தப்தாஅ என்ற பதம் உள்ளது. ஒரு பொருளை திருப்பதியின் அடிப்படையில் விலை கொடுத்து வாங்குதல் என்ற கருத்து அப்பதத்தில் தொணிகிறது. வியாபாரம் என்பது ஒரு வகை உடன்படிக்கையாகும். விசுவாச பிரமாணத்திற்கு பைஅத் என்ற சொல் பிரயோகப்படுத்தப்படுகிறது. தப்தாஅ - பைஅத் என்ற இரு சொற்களும் கிட்டத்தட்ட ஒரே கருத்தைத் தருகின்ற இருவேறு சொற்களாகும்.

நல்ல நண்பனுடன் ஆழ்ந்த நட்பை கொள்ளப்படா விட்டாலும் கூட அவனால் நல்லன விளையும் என்பதையும் ஹதீஸ் விளக்குகிறது. இக்காலகட்டத்தைப் பொறுத்தவரையில் இனாமாக வழங்கப்படும் பொருள்களுக்கு எவ்வித பெறுமானத்தையும் மனிதன் வைப்பதில்லை. ஆகவே உறுதிப் பிரமாணத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படும் நட்பே நித்தியமானதும், நிரந்தரமானதுமாகும்.

மனித வாழ்வில் நட்பு என்பது விசித்திரமானது. விந்தையானது. அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது. பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது. பெற்றோர்களது அன்பு உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சீர்திருத்த முடியாத கையாலாகாத நிலை உருவாகும் பட்சத்தில் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை அணுகி தமது பிள்ளைகளை சீர்திருத்த முனைவது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிதர்சன நிகழ்வுகளாகும்.

தொடரும்.......

எழுதியவர் : கவிப் புயல் சஜா (9-Nov-17, 3:00 pm)
சேர்த்தது : சஜா
Tanglish : nalla natpu
பார்வை : 1638

மேலே