மெளனம் பேசியதே

மெளனம் பேசியதே! . . .

பெண்ணே . . .
கத்தியின்றி இரத்தமின்றி
கணப்பொழுதில்
ஓர் இதயப்பரிமாற்றம்
செய்கிறது . .
நம் முட்டிக்கொண்ட
பார்வைகள் . . . .

எனை நோக்கி உதிரும்
உன் சிறு புன்னகையும்
விடையறியா வினாத்தாள்
ஒன்றை . .
மனதோரம் தொங்கவிட்டு
மகிழ்ச்சியில் மீள்கிறது . . .

என் நித்திரையை
உருவி விட்டு
உன் நினைவுகளைப்
போர்த்துகின்றாய்
நடுநிசி என்றும் பாராது . . .


நீ வாரா நாள் தன்னில்
துரும்பையும் அசைக்காது
வியர்த்துப் புழுங்கியதாய்
ஒர் வானிலை மாற்றத்திற்கு
அடிபோட்டு நிற்கிறதே
உன் வாசத்தை சுவாசமாக்கிக்
கொண்ட காற்று . . .

உன்னிடம் அடகுபோன
என் மனத்தினை மீட்டிட
மாற்றாய்
என் நிம்மதியை அள்ளிச்செல்கின்றன
உன் மெளனங்கள் . . . . .

சு.உமாதேவி

எழுதியவர் : சு உமாதேவி (14-Nov-17, 8:23 pm)
பார்வை : 480

மேலே