நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’
1916 ல் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த தமிழன் பத்திரிகையில் அதன் ஆசிரியர் பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை ஒரு சம்பவத்தை எழுதியிருந்தார். ஏதாவது ஒரு விஷயமாக சாலைக்கடைப் பக்கமாக அவர் போகாத நாள் இல்லை. ஒருநாள் போகும்போது ஒரு பண்டாரம் சிவகணம் போல நின்று ‘முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனை‘ என்ற பாடலை ‘கல்லும் கரையும் வண்ணம்‘ பாடிக்கொண்டிருந்தார். இவர் நின்று அதை கவனித்தார். பண்டாரத்துக்கு ஓரளவு சில்லறை சேர்ந்தது
தானும் சில்லறை போட்டு நகரும்போது பண்டாரம் பின்னால் வந்தார். தன்னிடம் புதையல் பற்றிய தகவல் அடங்கிய ஒரு சுவடிக்கட்டு இருப்பதாகவும் வீட்டுக்கு சென்று வாசித்துப் பார்க்கும்படியும் சொன்னார். போய் வாசித்துப் பார்த்தால் அது ஒரு கவிதை நூல். ஏமாற்றம் ஏற்படாலும் எஸ்.முத்துசாமிப் பிள்ளை அதை வாசித்தார். அது வேறு வகையான புதையல் என்று தெரிந்தது.
அதுதான் ‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்‘. இது கிட்டத்தட்ட மூன்று வருடம் தொடராக வந்தது. அக்காலத்தில் நாஞ்சில்நாட்டில் வாசிப்பவர்கள் கொஞ்சம்பேர் இருந்தார்கள். அந்நூலின் நகைச்சுவை நடை, எளிமை , அதன் சமூக சீர்திருத்த நோக்கம் ஆகியவை காரணமாக அது சட்டென்று பிரபலம் அடைந்தது.
உண்மையில் அந்நூலை எழுதியவர் கவிமணி.தேசிக வினாயகம் பிள்ளை. அப்போது அவர் அவ்வளவு பிரபலம் இல்லை. கவிமணி பொதுவாக வம்புதும்புக்கு அஞ்சுபவர். எல்ல்லாருக்கும் நல்லவர். அரசாங்க வேலையில் ஆசிரியராக வேறு இருந்தார். ஆகவே புனைபெயர். பின்னர் அவர் எளிமையான கவிதைகள் எழுதி பிரபலம் அடைந்தார். அவரை புகழ்பெறச்செய்தவர் டி.கெ.சிதம்பரநாத முதலியார்.
கவிமணி புகழ்பெற்றாலும்கூட இந்த நூல் முக்கியமானது என்ற எண்ணம் எவருக்கும் ஏற்படவில்லை. இது ஒருமாதிரி நாட்டுப்புறப் பாடல் என்ற எண்ணம்தான் இருந்தது . அவர் நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்த்தை எழுதும்போது அவருக்கு வயது 40. ஆனால் அவர் புகழ்பெற்ற கவிஞராக ஆன பின்பு அவரது 66 ஆவது வயதில்தான் நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் அச்சேறியது. 1942ல் புதுமைப்பதிப்பகம் வெளியிட்டது– கவிமணி பேரிலேயே.
இன்று பொதுவாக பலரும் கவிமணியின் ஆகச்சிறந்த ஆக்கம் நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் தான் என்று நினைக்கிறார்கள். சிலர் அதுமட்டுமே அவர் எழுதிய ஒரே இலக்கியத்தரமான படைப்பு என்று எண்ணுகிறார்கள். சுந்தர ராமசாமி அவ்வாறு சொல்லியிருக்கிறார்– நான் அதை வழிமொழிகிறேன். இலக்கியம் என்றால் சராசரி நற்கருத்துக்களை சராசரி இலக்கிய வடிவில் சராசரி வாசகர்களுக்காக கொடுப்பதே என்று கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை எண்ணியிருந்ததாக தெரிகிறது. அவரது கவிதைகள் இன்றைய வாசகனுக்கு எந்த கவிதை அனுபவத்தையும் அளிப்பவை அல்ல.
உண்மையில் டி.கெ.சி தன் கவிதைகளை உச்சிமீது வைத்துக் கொண்டாடுவது குறித்து கவிமணி தேசிக வினாயகம் பிள்ளைக்கே ஆச்சரியம் இருந்தது. அவரது உண்மையான ஆர்வம் கல்வெட்டு ஆராய்ச்சியில்தான். சோழர் வரலாறு குறித்தும் சேரர் வரலாறு குறித்தும் கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை செய்த ஆரம்பகால கல்வ்வெட்டு ஆராய்ச்சிகள் மிகமிக முக்கியமானவை. முன்னோடியானவை. கவிதை எழுத அவர் விரும்பியதே இல்லை. ‘கவிதை எழுதும்போது தலைவலிக்கிறது‘ என்று அவர் புகார் சொன்னதாக அ.கா.பெருமாள் பதிவுசெய்கிறார்.
இலக்கிய ஆக்கத்தின் அடிபப்டைகள் சில கைகூடிவந்த படைப்பு நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம். ஒன்று இது ஒரு மண்ணில், பண்பாட்டில், வாழ்க்கைமுறையில் ஆழமாக வேரூன்றி நிற்கிறது. அந்த வேர்ப்பிடிப்பு வழியாக அது எடுத்துக்கொண்ட நுண்மைகளை வைத்தே பேசுகிறது, பொதுமைகளை விட்டுவிடுகிறது. கதாபாத்திர உருவாக்கம், மொழி நடை ஆகியவற்றில் எந்த பிரயத்தனமும் தெரியாத ஒழுக்கு உருவாகி வந்திருக்கிறது.
கவிமணிதான் சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ஆ.மாதவன், நீல பத்மநாபன், நாஞ்சில்நாடன், தோப்பில் முகமது மீரான் போன்ற குமரி மாவட்ட எழுத்தாளர்களுக்கு முன்னோடி என்று சொல்லலாம். வட்டார வழக்கின் நுண்ணிய அழகுகளை தொட்டு இலக்கியமாக்கும் திறன் அவரில் அபூர்வமாக கைகூடியிருக்கிறது. குறிப்பாக நாஞ்சில்நாடனுக்குச் சொந்த தாத்தா மாதிரி இருக்கிறார் கவிமணி
கேரளத்தில் எப்போதென்று அறியமுடியாத காலம் முதலே மருமக்கள் சொத்துரிமை முறை இருந்து வருகிறது. இது தாய்வழிச் சொத்துரிமை முறையின் இன்னொரு வடிவம். சொத்துரிமை முழுக்க முழுக்க பெண்களுக்கு இருந்தது. பெண்களின் சொத்துக்கு நிர்வாகியாக , உரிமை இல்லாதவராக, அவர்களின் மூத்த சகோதரர் இருந்தார். அவர் காரணவர் என்று அழைக்கப்பட்டார். பெண்களின் சொத்து அப்பெண்களின் பெண்களுக்கே செல்லும். மகன்களுக்குச் செல்லாது. அந்த மகன்களுக்கு மகள் இருந்தால் அவளுக்குச் செல்லும். அரசுரிமை போன்ற ஆண்கள் வகிக்கும் பதவிகள் காரணவராக இருக்கும் மாமனில் இருந்து மூத்த சகோதரியின் மூத்த மகனுக்குச் செல்லும்.
ஒரு சிக்கலான சொத்துரிமை முறை. இது தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இந்தச் சொத்துரிமை முறை திருவிதாங்கூரில் அரசநிர்வாகத்துடன் தொடர்பு கொண்டிருந்த எல்லா சாதியினருக்கும் பரவியிருந்தது. நாடார்களில் தெற்கு குமரிமாவட்ட நாடார் குடும்பங்களில் நிர்வாகப்பதவிகள் கொண்டிருந்த குடும்பங்களில் மருமக்கள் முறை இருந்ததாக தெரியவருகிறது. மீனவர்களில் பட்டக்காரர் பொறுப்பில் இருந்த சில குடும்பங்களில் உண்டு. சிரியன் கிறித்தவ குடும்பங்களிலும், சில சுன்னி முஸ்லீம் குடும்பங்களிலும் இருந்திருக்கிறது என்கிறார்கள்.
வேளாளர்கள் பொதுவாக சோழர் ஆட்சிக்காலத்தில், கிபி ஒன்பதாம் நூற்றாண்டுமுதல் குமரிமாவட்டத்தில் வந்து குடியேறியவர்கள். நஞ்சை நில வேளாண்மை அறிந்தவர்கள். மெல்லமெல்ல அவர்கள் திருவிதாங்கூர் அரசில் உயர் பதவிகளை வகிக்க ஆரம்பித்தார்கள். அவ்வாறு வகித்தவர்கள் மருமக்கள் சொத்துரிமை முறைக்கு மாறினார்கள். மற்றவர்கள் மக்கள்த்தாய முறையில் நீடித்தார்கள். இந்த வேறுபாடு ஒரு உபசாதித்தன்மையுடன் இப்போதும் நாஞ்சில்நாட்டு வேளாளர்களிடம் உண்டு. ஒருவர் நாஞ்சில்நாட்டு வேளாளர் என்று தெரிந்ததுமே அடுத்து ‘என்ன வழி?’ என்று கேட்பார்கள். கல்யாணங்களில் ‘வழிசுத்தம்‘ பார்ப்பதுண்டு.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருமக்கள் சொத்துரிமை என்பது சீரழிந்த நிலையை அடைந்தது. அது பெண்ணுக்குச் சொத்துரிமை என்ற அடிப்படையில் உருவானது. ஆனால் நடைமுறையில் பெண்கள் வீட்டுக்குள் அடைபட பெண் பெயரில் ஆண்கள் சொத்தை கையாள ஆரம்பித்தார்கள். அப்படி கையாள்பவர் தன் சொந்த மனைவியின் குழந்தைகளுக்கு அதை அதிகாரபூர்வமாகக் கொடுக்க முடியாது. ஏனென்றால் அவரது மருமக்களுக்கு உரியது அந்தச் சொத்து. ஆகவே சொத்தை பலவகையிலும் திருடி தன் மக்களுக்குக் கொடுத்தனர் சிலர். மாமன் ஒழுங்காக இருந்தாலும் அவர் தங்கள் சொத்தை திரூவதாக எண்ணினர் மருமக்கள். குடும்பங்கள் சண்டைகளில் சீரழிந்தன
இப்படி ஒரு சண்டையின் கதைதான் நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம். மருமக்கள் முறை ஒழிப்புக்காக நாயர் சாதியில் குரல்கள் எழுந்து சீர்திருத்தத்துக்கான இயக்கங்கள் சூடுபிடித்தன. அந்த இயக்கம் வேளாளர் நடுவே விவாதங்களை உருவாக்கியது. அப்போது மருமக்கள் முறை ஒழிப்புக்காக பிரச்சாரம்செய்யும்பொருடு உருவானதே நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம். இந்நூல் வெளிவந்த சில வருடங்களிலேயே 1927ல் அம்முறை படிப்படியாக ஒழிக்கப்பட்டது. அந்த மாற்றத்தில் இந்நூலுக்கும் பங்குண்டு.
நாஞ்சில்நாட்டு வேளாளர் மருமக்கள்தாயமுறையின் சிக்கல்களால் பெரிய பொருளியல் சரிவைச் சந்தித்தார்கள். அம்முறை உருவாக்கிய விவகாரங்கள் கோர்டுக்குப்போய் கோர்ட் செலவால் பெரும்பாலான குடும்பங்கள் அழிந்தன. ஏனென்றால் இந்த முறை மூன்று அடுக்குகளாக சட்ட மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறது. சொத்து பாகம் வைப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. குறைந்தது இருபது வருடங்கள் இழுக்காமல் ஒரு வழக்கு முடிவுக்கு வருவதில்லை.
ஒருகட்டத்தில் நாயர் சாதியே இதனால் அழிவதைக் கண்டபின்புதான் மன்னத்து பத்மநாபன் நாயர் செர்வீஸ் சொசைட்டி போன்ற அமைப்பை உருவாக்கி ஊர்தோறும் அதற்கு கிளைகளை உருவாக்கி கிட்டத்தட்ட ஒரு அதிகாரம் கொண்ட அமைப்பாக அதை மாற்றினார். அது கோர்ட்டுக்குப் போகாமல் தொண்ணூறு சத வழக்குகளை தீர்த்து வைத்தமையால் நாயர்கள் தப்பித்தார்கள். அதேபோல பெரிய கல்யாண விருந்துகள் சாவு விருந்துகளை போட்டி போட்டு நடத்துவதையும் என்.எஸ்.எஸ் கட்டுப்படுத்தியது.நாயர் சர்வீஸ் சொசைட்டி கேரளத்தில் இருந்த வேளாளர்களை நாயர்களாக கணித்து அங்கத்தினராக ஆக்கிக்கொண்டது. ஒரு தலைமுறைக்குப் பின்னர் அவர்களில் பெரும்பாலானவர்கள் தனி அடையாளம் இழந்து நாயர்களாக ஆகிவிட்டார்கள்.
கவிமணி ஒரு மணமக்களை ஆசீர்வதிக்கிறார்
நாஞ்சில் நாட்டு வேளாளர்களுக்கு அப்படிப்பட்ட அமைப்புகள் உருவாகவில்லை. அவர்களிடம் மிக வலுவான பிடாகை என்ற ஊர்க்கூட்ட அமைப்புகள் இருந்தன. மன்னர்க¨ளையே கட்டுப்படுத்திய சபைகள் இவை. ஆனால் இவை மருமக்கத்தாய முறையால் உருவானவை. மக்கள்தாயம் வந்த போது இந்த அமைப்புகள் எல்லாமே சிதறின. விளைவாக நாஞ்சில்நாட்டின் பாசன நிர்வாகம் முழுமையாகவே சிதைந்தது. கூட்டுக்குடும்பத்தில் நிலங்கள் ஒட்டுமொத்தமாக இருந்தபோது செய்ததைப்போல நிலம் சிதறியபோது விவசாயம்செய்ய முடியவில்லை. அனைத்துக்கும் மேலாக கடந்த முக்கால் நூற்றாண்டாக நெல் விவசாயம் தொடர்ந்து நஷ்டவியாபாரமாக ஆகிக்கொண்டிருக்கிறது. நாஞ்சில்நாட்டு வேளாளரின் வீழ்ச்சி இதன் விளைவாக உருவானதே.
இந்நூலில் பதிப்பாசிரியர் அ.கா.பெருமாள் அவர்கள் இந்த பின்னணித்தகவல்களை மிக விரிவாக அளித்திருக்கிறார். நாஞ்சில்நாட்டு வேளாளர்களின் பாரம்பரியம் அவர்களின் சுயநிர்வாக முறை, அவர்களின் மருமக்கத்தாய முறை, அதன் விழ்ச்ச்சி ஆகியவற்றை ஏராளமான தகவல்களுடன் சொல்கிறது இந்த ஆய்வுரை. ‘குடும்பத்தை விற்றாலும் வழக்கு நடத்தக் கற்றுக்கொண்டேனே‘ என்று நீதிமன்ற வசலில் நின்று இறும்பூது எய்தும் வேளாளப்பிள்ளையின் காட்சியை அளித்தபடி அக்கட்டுரை முடிகிறது
* * * * *
நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் ஒரு அங்கத நூல். ஒரு பெரிய குடும்பத்தில் காரணவருக்கு ஐந்தாம் மனைவியாக வாழ்க்கைப்பட்ட எளிய பெண்மணி தன் கதையைச் சொல்கிறாள். ஐந்து கல்யாணம் செய்தமையால் ‘பஞ்சகல்யாணிபிள்ளை‘ என்று காரணவருக்கு ஊரிலே பெயர்.
தொழுத்துச் சாணம் வழிக்க ஒருத்தி
தொட்டி தண்ணீர் சுமக்க ஒருத்தி
அடுக்களைச் சமையல் ஆக்க ஒருத்தி
அண்டையில் அகலாதிருக்க ஒருத்தி
அத்தனை பேருக்கும் அடிமையாளாய்
ஏழை பாவியேனும் ஒருத்தி…
என்று தன்னைச் சொல்லிக்கொள்கிறாள் கதைசொல்லி. இந்த நூல் முழுக்க பெண்களின் உலகம் மிக அழகாக அதற்குரிய அடுக்களை வம்புகளுடன் சித்தரிக்கப்படுகிறது.
அம்மா மிளகை அரையென்றால் உடன்
அவள்கை மதலை அழுவது கேட்டிடும்
பிள்ளைக் குணமோ பிடுங்கி வைப்பாளோ
என்று அழுபிள்ளைக்காரி அக்காளை சொல்கிறாள். இனி ஒரு அக்காளைப்பற்றிய குறிப்பில் நுட்பமாக ஒரு குத்து உள்ளது. அவள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவளாக இருக்க வேண்டும். தேவதாசிமுறை படிப்படியாக ஒழிந்து வந்த நாட்களில் அவர்கள் பெரும்பாலும் வேளாளர்களிலும் நாயர்களிலும் தான் மணம் முடித்துக் கொண்டார்கள். கதை முழுக்க இந்த அவசூசகத்துடன் தான் இந்த மனைவி சொல்லப்படுகிறாள். அவளுடைய–
மஞ்சள் பூச்சும் மயக்கிடு பேச்சும்
சாந்து பொட்டும் தாசிகள் மெட்டும்
கோல உடையும் குலுக்கு நடையும்
கொண்டை அழகும் கண்டு கணவர்
அண்டையிலிருந்து அகலவே மாட்டார்
இந்த லட்சணத்தில் கன்யாகுமரி கடலாடச்செல்கிறார்கள். ஏக காலத்தில் இவர்களை எல்லாம் கைபிடித்து கடலாட நான் பன்னிருகை பரமன் இல்லையே என்று ஏங்குகிறார் பிள்ளைவாள். ஐந்து மனைவியரையும் வரிசையாக கைப்பிடித்து கடலில் மூழ்கி எழுந்து பஞ்சகல்யாணிப்பிள்ளைக்கு காய்ச்சல் வந்து மயிரிழையில் உயிர்பிழைக்கிறார்.
இந்த குடும்பத்தில் மருமகன் வந்து சொத்துக்கணக்கு கேட்கிறான்
‘ விளையை வயலாய் வெட்டித்திருத்த
வயலை விற்ற பணம் போதாதோ?’
என்பது போன்ற நுண்கேள்விகள். கடைசியில்
சாட்சி போட்டு சம்மன்ஸ் அனுப்பி
வரவில்லையானால் வாரண்டும் அனுப்பி
கூட்டில் ஏற்றி குறுக்கு மறுக்காய்
கிராஸ¤ம் கேட்டு கேவலமாக்கி
விடுவதாக மிரட்டுகிறான். இது நவீனகால நாகாஸ்திரம். காரணவர் கொந்தளித்து எழுகிறார். கருடாஸ்திரத்தை ஏவுகிறார். அம்மைக்கு அடியந்திர, சுடலைமாடன் கோயில் செலவு என பட்டியல். இதில் காரணவர் தனியாகச் செய்த செலவுகள் உண்டு. மாமனும் மருமகனும் ‘சேர்ந்து‘ செய்யும் செலவுகளும் உண்டு
போன கொடைக்கு புதிதாய் வந்த
வில்லுக்காரி வீரம்மைக்கு
நாலுசேலையும் நாற்பது ரூபாயும்
கொடுத்தது நீயும் கூடி அல்லவா?
என்று பிள்ளைவாள் கேட்கவும்செய்கிறார். ஆத்தாள் செத்த அடியந்திரச் செலவு கணக்குகேட்ட மருமகனுக்கு
‘பத்து பெண்கள் பட்டினி கிடந்து
பருத்திப்பொதிபோல் பதினாறாம் நாள்
வெளிவந்திட வேண்டும் என்றால்
அவர் எத்தனை தோசை இட்டிலிக்கெல்லாம்
எமகாலராயிருப்பார் அப்பா?
என்று இன்றியமையாத செலவுகளைச் சொல்லிக்காட்டுகிறார்.
‘ ஆமை வடைக்காய் அரைஞாண் பணயம்
போளிக்காக புத்தகம் பணயம்‘
என்று மருமகன் படித்த லட்சணத்தையும் சொல்லிக்காட்ட தவறுவதில்லை. வாய்ச் சண்டை மூத்து அடிதடி. நேராக கோர்ட்டு.
அண்டப்புரட்டன் வக்கீல் ஆப்பீஸில்
ஆனைப்பொய்யன் குமஸ்தனை அறிந்து
வழக்கு தொடுக்கிறார்கள். கோடேறி குடிமுடிந்த படலத்தில் மெல்லமெல்ல காரணவர் நொடிக்கும் கதை. விளைவதெல்லாம் வக்கீல் வீட்டுக்குச் செல்கிறது. வயலையும் விளையையும் விட்டுவிட்டு பகலந்திவரை கோர்டு வாசலில் தவம் இயற்றுகிறார். எல்லாம் நாசமாகிறது
துப்பட்டாவும் தொங்கலும் போச்சு
துவர்த்து முண்டு துணியும் ஆச்சு
புட்டும் பழமும் காப்பியும் போச்சு
புளித்த காடியே போதும் என்றாச்சு
தோசை இட்டிலி தோய்ப்பனும்போச்சு
தொந்தியும் கரைந்து சுருங்குவதாச்சு..
மெல்ல மெல்ல பிள்ளைவாள் நோயாளி ஆகிறார். நடமாட்டம் குறைகிறது.
அண்டைவீடாகி அறப்புரையாகி
படிப்புரை ஆகி பாயிலும் ஆனார்
குடும்பத்தை திவாலாக்கி பிள்ளைவாள் சாக நடுத்தெருவுக்கு வருகிறது குடும்பம். மருமக்கள் தாய முறைய ‘அடக்கிப்பிடிச்சு‘ வசைபாடி சாபம் போட்டபடி மான்மியம் முடிகிறது.
ஆடுகள் மாடுகளுக்கு ஆகும் இவ்வழி
மனிதர் செல்லும் வழியாயிடுமோ?
* * * *
ஒரு பிரச்சார படைப்பு இது. எதற்காக பிராசரம் செய்ததோ அந்த இலக்குக்கு இன்று ஒரு பொருளும் இல்லை. அந்த வரலற்றையே சொன்னால்தான் புரியும். ஆனால் இது இலக்கியமாகி நிற்கிறது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டை நெருங்கவிருக்கிறது. இதன் நுண் விவரணைகள் வழியாகவே இது ஒரு செவ்வியல் படைப்பாக காலத்தைத் தாண்டிச் செல்கிறது
பல வருடங்களுக்கு முன்பு தங்கள் ஊர் கிணற்றில் ஒரு பெண் விழுந்து இறந்து போன போது அவளை அவள் தாலியை வைத்து இன்ன பகுதியைச்சேர்ந்த இன்ன பெண் என்று அடையாளம் கண்டுகொண்டதாகச் சொல்லும் கி ராஜநாரயணன் அதைப்போன்ற ஒரு பெரும் பண்பாட்டு சின்னம் என்கிறார் இந்நூலை. கலைப்படைப்பு ஒரு சமூகத்தின் தாலிதான்.
[நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம். பதிபாசிரியர் அ.கா.பெருமாள். காலச்சுவடு பதிப்பகம்]
சுசீந்திரம்