காதல் பிறந்தால்-கங்கைமணி

பரட்டை தலையும்
படிந்துபோகும்.

மீசை மீதொரு
ஆசை பிறக்கும்

கம்பன் விரல்கள்
கையில் முளைக்கும்.

கன்னித்தமிழே
கவியில் பிடிக்கும்.

கள்ளிச்செடி தன்
முள்ளை வெறுக்கும்

பார்வை தேடி
பாதம் தேயும்.

தாகம் மறக்கும்
தண்ணீர் வெறுக்கும்

பானை உடைக்கும்
படித்துறை சிரிக்கும்.

உடம்பு கிடக்கும்
நினைவு கடக்கும்

ஊரே சிரிக்கும்
ஊரையே இரசிக்கும்

களவு பார்வை
உளவு பார்க்கும்.

பறவையின் தலையில்
பனங்காய் வைக்கும்

அஞ்சி நடக்கும்
அடங்கி துடிக்கும்

கடந்த திசையில்
காத்துக்கிடக்கும்

வளையளோடு
வாழ்க்கை நடத்தும்

கற்பனை உலகம்
கண்ணில் விரியும்

காற்றை பிடித்து
கயிறு திரிக்கும்

காட்டு யானை
வீணை மீட்டும்

கஞ்சிக்கலயம்
கஞ்சா கலக்கும்

மூளை சிரிக்கும்
முடங்கி படுக்கும்

உருளும் மனது
மௌன உதடு

இரவுத்தூக்கம் -
உலரும் ஏக்கம்.

-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (1-Dec-17, 10:17 pm)
பார்வை : 158

மேலே