சும்மா இருத்தல் சுகம் - பாகம் 1-
வேலையிலிருந்து ஒய்வு பெற்றபின்னர், கடந்த மூன்று வருடங்களில் பலரை சந்தித்து இருக்கிறேன். அவர்களுடன் பல தடவை நடந்திருக்கும் ஒரு வார்த்தைப் பரிமாற்றம் -
அவர் - " என்ன, சும்மாவா இருக்கிறீங்க?"?
நான்- ஆமாம் !
அவர்: ஏதாவது பார்ட் டைம் ?
நான்: ம்ஹூம் .
அவர்: எதாவது கன்ஸல்டன்சி ?
நான் : நோ, நோ.
அவர் : சும்மா இருக்கற டைம்ல பண்ணலாமே ?
நான் : எதுக்கு வீணா ?
அவர் "இவன் எதற்கும் லாயக்கில்லை போல இருக்கு" என்று ஒரு பரிதாபப் பார்வையுடன் நகர்கிறார்!
(இந்த மாதிரி பல தடவை ஆனபின்பு, இனிமேல் "நான் ஒரு மேனேஜ்மென்ட்
கன்சல்டன்ட் ஆக இருக்கிறேன் "என்று சொல்வதென்று முடிவு செய்திருக்கிறேன்.)
வேலையிலிருந்து ஒய்வு பெற்ற ஒருவரின் கண்ணோட்டத்தில் இந்த "சும்மா இருக்கும் சுகம் " எப்படி இருக்கும் ? என்று ஒரு பாடல்.
சும்மா இருத்தல் சுகம் - பாகம் 1-
வேலையை விட்டபின்னர் வேறெதுவும் செய்யாமல்
காலையிலும் மாலையிலும் இவ்விரண்டு வேளையிலும்
வம்பெதற்கும் போகாமல் கால்மேலே கால்போட்டு
சும்மா இருத்தல் சுகம். (1)
தானும்தன் சுற்றமும் சீராக வாழ்ந்திட
"வேணும் வரையில் உழைச்சாச்சு" என்பதால்
அம்மாடா என்றெண்ணி கால்நீட்டி உட்கார்ந்து
சும்மா இருத்தல் சுகம். (2)
பக்கத்து வீடுகளில் உள்ளோரைப் பற்றியே
அக்கப்போர் பேசியே வீண்பழியை வாங்கிவந்து
சிக்கல் எதிலுமே சிக்காமல் வீட்டிலே
சும்மா இருத்தல் சுகம். (3)
மற்றவர் செய்திடும் வேலைகளை ஆராய்ந்து
குற்றம் பலகூறி மூக்கை நுழைக்காமல்
தம்வேலை தானுண்டு என்றேவோர் ஓரத்தில்
சும்மா இருத்தல் சுகம். (4)