கைகேயி

கேகய நாட்டின் மன்னனின் மகள்,கை
***கேயியின் இருவரங் களினால்
சோகமே உருவாய்த் தசரதன் தானும்
***துடித்தனன் ஐம்புலன் ஒடுங்க
வேகம டங்கும் வேழமாய்த் தரையில்
***வீழ்ந்தனன் வேதனை முற்றித்
தோகையள் ஐயன் அல்லலைக் கண்டும்
***துணைவனை அலட்சியம் செய்தாள் !

சந்ததம் இராமன் நலனையே கருதிச்
***சகலமும் காத்திடும் நங்கை
மந்தரை யென்ற கொடுமனக் கூனி
***வார்த்தையில் தன்னுளம் மயங்கித்
தந்திர மாக முன்பொரு நாளில்
***தயரதன் தருவதாய்ச் சொன்ன
சிந்தையில் நிறுத்தி இருவரங் களையும்
***செருக்குடன் பெற்றனள் கேட்டு !

சீர்மிகு செல்வன் ஏழிரண் டாண்டு
***சிறப்புடன் கானகம் ஏகப்
பார்புகழ் வண்ணம் பரதனும் ஆளப்
***பத்தினி வரங்களைக் கேட்டுக்
கூர்சொலால் மன்னன் உள்ளமும் வெதும்பிக்
***கொதித்தனன் உலைக்கல மாகத்
தேரென நிமிர்ந்த நடையினைக் கொண்ட
***திருவுரு சாய்ந்ததே உடனே !

விதிப்படி நடந்த நாடகந் தன்னில்
***வினைப்பயன் முழுமையும் ஏற்றாள்!
மதியினால் கண்டு மயக்கமும் தெளிந்தே
***வனிதையும் வரங்களைக் கேட்டாள்!
பதியையும் காக்கத் தாய்மையின் அன்பால்
***பழியினைச் சுமந்தனள் தானே !
புதிரென விளங்கும் பூவெழில் மங்கை
***புனிதையை வாழ்த்திடு வோமே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (4-Dec-17, 10:30 am)
பார்வை : 110

மேலே