என்னை தவிக்க விட்டு

நித்தம் விடிகாலை
என் பிஞ்சு கன்னம் தடவி தலை கோதி
பல நூறு முத்தமிட்டு

என் சுட்டு விரலை
உன் ஆள் காட்டி விரலோடு இணைத்து
எங்கு நீ சென்றாலும்
என்னையும் உன்னோடு அழைத்து சென்று

நான் தேடும் கேள்விகளுக்கு விடையளித்து
எனது அறிவு பட்டினிக்கு உணவளித்து
எனக்கோர் ஆலோசனை ராணியாக செயல்பட்டு

என்னை தாக்கும்
எதிரிகளின் கணைக்கு
பதில் அம்பு விடுத்து
என்னை கேலி செய்வோர் வார்த்தைகளை
கூர் வாளால் கிழித்து

என்னை தோள் மீதும்
மார் மீதும் அணைத்து
என்னை ஓர் பொக்கிஷமாய் பாதுகாத்து
எனக்கு மற்றோர் அன்னையாய் விளங்கிய
என் உயிருக்கு உயிரான தமக்கையே!!!

இன்று இந்த கருமை நிறைந்த உலகில்,
இருள் சூழ்ந்த உலகில்,
என்னை தவிக்க விட்டு
நீ மட்டும்
விண்ணுலகம் சென்று விட்டாயே...
நிம்மதியின் உச்சத்தில்
உன் ஆன்மா

இழப்பின் தவிப்பில்
உன் தம்பியின் உயிர்...

இப்படி ஓர் உயிர்
உன் தம்பிக்கு தேவையா??
அழைத்துக் கொள்வாயா என்னையும்????
அல்லது
உன்னை கொண்டு வரவில்லை??
அதனால்
கொண்டு செல்ல முடியாது
என்று சொல்லி விடுவாயா???

எத்தை உறவுகள் என்னை சுற்றினாலும்
எத்தனை ஆறுதல்கள் என்னை தேற்றினாலும்
என்னால் எழ முடியாத சோகத்தை
என்னவென்று சொல்வது?????....

(மிகவும் அன்பு நிறைந்த அக்காவை இழந்த தம்பியை உறவினர் வீட்டில் பார்த்தபோது விளைந்த படைப்பு இந்த வேதனையான கவிதை)

எழுதியவர் : சாந்தி ராஜி (6-Dec-17, 12:33 pm)
பார்வை : 1706

மேலே