எவ்வுலகும் வேண்டி வரும் அணி வேண்டா விரதமே – அணியறுபது 19

நேரிசை வெண்பா

இவ்வுலக வாழ்வுக் கினியவணி செல்வமே;
அவ்வுலக வாழ்வுக்(கு) அருளணி; - எவ்வுலகும்
வேண்டி வருமணி வேண்டா விரதமே;
ஈண்டிவை எண்ணல் அணி. 19 அணியறுபது

- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

செல்வமே இவ்வுலக வாழ்வுக்கு இனிய அழகாகும்; வீடு பேற்று உலக வாழ்வுக்கு அருளே அழகு;

யாதும் வேண்டும் என்ற பேராசையின்றி வேண்டாம் என்னும் விரதமே ஈரேழு உலகுக்கும் வேண்டிய அழகாகும்; இந்த உண்மைகளை மனதில் உணர்ந்து கொள்வதே சிறந்த அழகாகும்.

நிதியும், கருணையும், நிராசையும் இங்கே சிந்திக்க வந்துள்ளன; சிந்தனை தெளிவது சீவ ஒளியாம். உண்ண உணவு, உடுக்க உடை ஆகிய பண்டங்களை எல்லாம் எளிதே அடைவதாலும், உலக வாழ்க்கைக்கு உரிய தேவைகளை அருளி வருதலாலும் பொருளுடைமையே என்றும் இனியதாக எண்ணப்படுகிறது.

பொருளுடையான் கண்ணதே போகம் என்று சிறுபஞ்சமூலமும், பொருளில் ஒருவர்க்கு இளமை பரிந்தாலும் செய்யா பயன் என்று அறநெறிச்சாரமும், பொருள்இல் குலன் இருளினுள் இட்ட இருண் மை போன்றது என்று வளையாபதிச் செய்யுளும் கூறுகின்றன

பொருள் உடலை வளர்த்து இவ்வுலக அளவில் நின்றுவிடும்; அருள் அறமாகி உயிர்க்கு ஒளிபுரிந்து மறுமை இன்பங்களையும் அருளும்.

பொருளைப் போற்றியும், அருளை ஆற்றியும் ஒழுகி வருபவர் எவ்வழியும் செவ்வையாய் விழுமிய தலைமைகளில் விளங்கி வருகிறார்.

உலகப் பொருள்கள் எதையும் விரும்பாத மேன்மையை வேண்டா விரதம் என்றது. ஆசையை வென்றவன் அகில உலகங்களையும் வென்றவனாய்த் தேசு மிகுந்து நிற்கின்றான்.

ஆசைதனை அடிமை கொண்டவனே தப்பாது உலகம்தனை அடிமை கொண்டவனே தான் என்று நீதிவெண்பா 12 கூறுகிறது.

எதையும் வேண்டாதவன் அதிசய பாக்கியவான்; ஆண்டவனை உரிமையுடன் அவன் நேரே அடைகிறான்.

வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில். 363 அவாவறுத்தல்

எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வானுலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை. வேண்டாமையின் மகிமையை இப்பாடல் விளக்குகிறது.

இவ்வுலக வாழ்க்கைக்கு செல்வம் வேண்டும்; அத்தோடு அறம் செய்து இறைவன் அருளையும் பெற வேண்டும். போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்றெண்ணி பேராசையை விடவும் வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Dec-17, 3:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

சிறந்த கட்டுரைகள்

மேலே