ஒத்த விரலு உசிரு இருந்தா

உச்சாணி கொம்பொடிச்சி
முச்சந்தி இட்டவளே..!
வேராணி புடிச்ச புங்க
கோடாரி வச்சுதான் சாய்ச்சியோ..!
வலி தந்து போனவளே..
வழியறியாமத்தான் வந்தியோ
காக்கா குருவி குடியிருந்த மரத்த.
கங்ஙணம் கட்டித்தான் பேத்தியோ..!
கடலுக்குப் போன சனம்
கரைக்கு வந்து கூடலையே
கடலோரம் காற்று திரண்ட கத
கடவுளும் தான் அறியலையே..!
கணக்காக சோறு கட்டி
கடல் தாண்டிபோன மகன் நெலம
கர தொட்டு போற அலையே
அறிஞ்சி வந்து
எங்க கண்ணீருக்கு சொல்லு
கண்ணான கண்ணுகள
கை அலையில இழுத்து
கர கொண்டு வா தாயி
மூத்த மகன் முத்தம் தர
சொந்த மனைவி சொல்லி அழ
சொந்த மண்ணுல கல்லறைக்கேனும்
பூதவுடல கொண்டு தா
கடல் பார்த்துநீ போக
உடல் பார்த்து உறவூரு இருக்க
மந்திரிமாரா வந்து வந்து
கணக்குத் தான் எடுக்கிறாங்க
இறந்த பட்டியலில பேரு கொடுக்க
இம்மியளவும் விருப்பம் இல்ல மகனே..!
காப்பாத்த கப்பல் விட
கண்ணீரு விட்டு சனம் கேட்டும்
மெத்தனமாத்தான் இருக்கிறாங்க
கண்ணுக்குத் தெரியாம வந்து
கண்ணீர துடைச்சதா
நியூசில தான் காட்டுறாங்க
கர சனத்துக்கு
மரம் விழுந்த பாரம் தாங்கல
கூர விழுந்த சனமெல்லாம்
வீட்டில தூங்கல
குழித்துறையில ரயில மறிச்சும்
குமுறலு இன்னும் தீரல
குமரி எங்க குமுறல
அறிஞ்சும் அரசு
ஆக்சனு எடுக்கல
அநியாயப்பட்ட அரசு
பேரிடரா இன்னும் அறிவிக்கல.
வேசிப் புயலு
ஆண்சனத்த எங்க
கிடத்திப் போட்டிருக்கோ
அரியணையில இருக்கும் சீமான்
இன்னும் கூட அறியலையே..!
நெய்தலு படை கட்டி இன்னும் முடிக்கலயே...!
உசிரு போன கத கேட்க
உசிர எங்க மேல வச்சி வாற சாமி
காப்பாத்தி தாங்க சாமி
கருவாடுவித்தாவது பிழைச்சுக்கிறோம்
மந்திரிங்க ஹெலிகாப்டர
விட்டாவது தேடுமையா
ஒத்த விரலு உசிரு இருந்தா
ஓட்டு போட்டு.தாறோமையா..!