உள்ளம் உணர்ந்த உவகை

உள்ளத்தில் பிறந்திடும் அன்பு –அது
உயர்வினைத் தந்திடும் நம்பு
பள்ளத்தில் வீழ்வதைத் தடுக்கும் –நல்
பண்புடன் வாழ்வினைக் கொடுக்கும் !

உதவிகள் செய்யவும் துடிக்கும் –வரும்
ஊறுகள் கண்டால் வெடிக்கும்
பதவியில் பணிவினைப் படிக்கும் –அதைப்
பட்டென பற்றியே பிடிக்கும்.

நட்புடன் பழகிட நினைக்கும் –பிறர்
வஞ்சமோ கண்களை நனைக்கும்.
விட்டுப் போகா உறவால் –ஒரு
நிம்மதி கொள்ளும் வரவால்...

நல்லவை நடந்தால் மகிழும் –அந்த
நினைப்பால் தானே நெகிழும்
இல்லை எனினும் அணைக்கும் –ஒரு
அன்பால் எவரையும் பிணைக்கும்.

மழலை என்றால் உருகும் –ஒரு
மகிழ்வால் அதனை நெருங்கும்
அழகினில் ஆனந்தம் கொள்ளும்-அந்த
ஆசையால் நாளும் துள்ளும்.

பட்டுப் போலும் மென்மை –அது
பச்சிளம் குழந்தையின் தன்மை
முட்டும் துயரரும் மறையும் –அதன்
முகமோ உள்ளம் நிறையும்.

உள்ளம் உவகை கொண்டால் –உயிர்
உடலில் நீண்டு தங்கும்
கள்ளம் தன்னை நீக்கின் –நல்
கருணை அங்கே பொங்கும்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (19-Dec-17, 9:32 pm)
பார்வை : 134

மேலே