நதி யெனும் கவிதை

இந்த
நதிகள் மட்டும் இல்லையென்றால்
அந்த
கானகக் கச்சேரிக்கு
இசையில்லாமல் போயிருக்கும்.

மெல்லிய
புல்லாங்குழலாய்
ஒவ்வோர் பாறை இடுக்கிலும்
இசையை
ஒட்டி வைத்து நடப்பது
நதிகள் தானே.

பச்சைகள் புறப்படுவதும்
நாகரீகம் பெறப்படுவதும்
நதிகளின்
கரைகளில் தானே.

கடல்ப் பெண்ணின்
நீலமான முந்தானை
இந்த
நீளமான நதிகள் தானே.

பூக்களையும்
இலைகளையும்
சமத்துவத் தோளில்
சுமந்து திரிவது
நதிகள் மட்டும் தானே.

நதிகள்
மறைந்து போனால்,
வளங்கள் குறைந்து
உயிரினமே
உறைந்து போகுமே.

நதி,
பூமித் தாயின் இரத்தப் பாசனம் !?

நாட்டிய அரங்கேற்றம்
நயாகராவில்,
ஒத்திகை நடப்பது
குற்றாலத்தில்,
ஆங்காங்கே மேடை போட்டு
பாடிவிட்டுத் தான்
நதிகளும் நடக்கின்றன.

கடலின் கால்களில்
கரைந்தபின்
ஆறுகள் மெல்ல மெல்ல
அகலமாகின்றன,
கடலுக்குள் விழும் பக்தியில்
ஆறுகள் அடையும் முக்தி.

சலவை செய்த
தண்­ர் ஆடைகள்
கடலில் வந்து
நீலம் முக்கிக் கொள்கின்றன.

எத்தனை பாரம் ஆனாலும்
நெஞ்சில்
ஈரம் மாறாதது
அருவிகள் தானே.

பூக்கள் தலை நீட்டி
பாய்மரக் கப்பலாய்
படபடத்து நகர,
உள்ளுக்குள் மீன்கள்
நீர்மூழ்கிக் கப்பலால்
நழுவும்.
நதிகள் அவற்றின் பாதைகள்.

கானம் பாடிக் களைத்த
காட்டுக் குயில்களுக்கு
நதிகள்
தாகம் தீர்க்கும் தருமன்.
சாதகம் செய்யும் பாடகற்கு
நதிகள்
பாதகம் செய்யா பரமாத்மா.

நதிகள் மட்டும் இல்லையேல்
பச்சையம் விற்கும் சூரியன்
சருகுகளை
மட்டுமே செய்து குவித்திருப்பான்.

நதிகள் மட்டும் இல்லையேல்
பூமியின் பாதிக் கறைகள்
கழுவப் படாமலேயே
கிடந்திருக்கும்.

நதிகள் மட்டும் இல்லையேல்
பாதிக் கவிதைகள்
தாகத்தில் தொண்டை
வறண்டிருக்கும்.

தவம் கலைக்கும்
ரதியும் நதியே,
தவம் கொடுக்கும்
கதியும் நதியே.

சுத்தமாகவும்
சத்தமாகவும் சுற்றும் நதிகள்
ஆங்காங்கே
அரசியல் கலக்கும் போது
மட்டும்
அழுக்கடைந்து அழுகின்றன.

சேவியர்

எழுதியவர் : (28-Dec-17, 3:16 pm)
பார்வை : 39

மேலே