துணிந்து வா தோழனே

யார் யாரையோ
ஏற்றாய் தலைவனாய்
யார் யாரிடமோ
ஏமாறினாய் தொண்டனாய்

கூலிக்கு மாரடிக்கும்
கூத்தாடிகளை
தலைவனாக்கி
நீ கொடி பிடிப்பதை
இழிவென்று கூட
உணரவில்லை இன்று வரை

ஆங்கிலேயர்களிடம் போராடி
சுதந்திரம் பெற்ற பின்பும்
இன்னும் அடிமையாகத்தானே
இருக்கிறோம் அனைவருமே

தொழிலை வைத்து
பிரிக்கபட்ட சாதி வைத்து
அரசியலாக்கி நம்மை
நிரந்தரமாக பிரித்து
நிற்க வைத்த
கேடுகெட்ட ஜென்மங்களே
இன்று தலைவர்களாய்

வழிபடும் முறையில்
மதம் பிரித்ததை
அரசியலாக்கி
மதம்பிடித்து அலையும்
மனித மிருகங்களே
இங்கு அதிகம்

வழக்கு நிலுவை
அதிகம் யாருக்கோ
அவனே அரசியல் சாணக்கியனாய்

வயிற்றுக்காய்
திருடுபவனை
சிறையில் அடைத்து
தந்திரமாய் திருடுபவனை
தலைவன் என்றோம்

எவ்வளவு உழைத்து
எவ்வளவுதான்
சம்பாதித்தும்
வாக்கை விற்று
பிச்சைக்காய் அலைந்தோம்

கட்சி பார்த்து
சாதி பார்த்து
ஓட்டு போட்டு
ஓட்டு போட்டு
ஓட்டை குடம் போல
கண்ணீர் வடித்தோம்

பட்டம் முடித்து
வேலை தேடி அலைந்தோம்
கைநாட்டுகளிடம்
அரசியலை அடகு வைத்தோம்

காமராஜர் போன்ற
தலைவர்களை தோற்கடித்து
அன்று தோற்று போன நம்மை
இன்று வரை மீட்கவே இல்லை

அன்றாடம் வாழ்வோடு
கலந்து போன அரசியலை
கூவமாக்கி
மூக்கை மூடி அலைகிறோம்
சொரணையின்றி

ஒவ்வொரு நாளும்
வரி செலுத்தி
நம் வரி பணத்தில்
ஊதியம் பெறும்
நம் வேலையாட்கள்தான்
அடிப்படை ஊழியன் தொடங்கி
அரசாலும் முதல்வன்
என்பதையும் மறந்து
மனுக்களோடு அலைகிறோம்

இன்னும் எத்தனை காலம்தான்
இந்த அரசியல் சாக்கடையில்
அருவருப்போடு வாழ்வோம்

இனியேனும் துணிந்து வா
இறங்கி சுத்தப்படுத்த
நாற்றமெல்லாம் நம்மோடு போகட்டும்
அடுத்த தலைமுறையாவது
நிம்மதியாய் இருக்கட்டும்

துணிந்து வா
இல்லை இறந்து போ
ஏதோ வாழ்கிறோம்
என்பவர் யாவரும்
பூமியின் மட்க்காத
குப்பைகளே

அரசு வேலை தேடுவதை விடுத்து
அரசியலுக்கு வா

இனியேனும் நம் அரசியல் பற்றி
ஐ நா புகழட்டும்

அழைப்பும் ஆதங்கமும்
ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (29-Dec-17, 4:18 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 636

மேலே