கண்மறையும் மனிதர்கள் =========================

காலியான பாத்திரத்தில் காற்றிருக்கும் மறவாதே!
=காதலென்று வீசும்புயல் காற்றினையே எண்ணாதே!
போலியான புன்னகையைப் புனிதமென்று நம்பாதே!
=போக்கிலியின் வாக்குதனை போதனையாய்க் கொள்ளாதே!
வேலியிங்கு பயிர்மேயும் விசித்திரத்தை மெச்சாதே!
=வேர்முறித்து மரம்ரசிக்கும் விலங்கினத்தை ஒட்டாதே!
தாலியொன்று போடுமுன்பு தாரமென்று ஆக்காதே!
=தாய்மொழியைக் கொன்றழித்துத் தத்துவமும் பேசாதே!

கூலியின்றி வேலைசெய்து குடும்பமது நடத்தாதே!
=கூட்டாளி யாகிடினும் கொள்கைவிட்டுக் கொடுக்காதே!
சோலிபெற்று விட்டபின்பு சொதப்புதலும் செய்யாதே!
=சொத்துசுகம் சேகரித்தே சுகமிழந்து நிற்காதே!
காலிலாத மனிதர்முன் கலைநடன மாடாதே!
=காசிலாத நேரத்திலே கடன்வாங்கித் தொலைக்காதே!
நூலிலாமல் நெசவுசெயும் நோக்கம்தான் வைக்காதே!
=நூறிலாமல் ஆயிரத்தில் நோட்டமுமே விடாதே!

உழைத்திடாமல் வாழுமாசை உள்ளந்தனில் வைக்காதே!
=உழைப்பவர்தம் வியர்வையினை உதாசீனப் படுத்தாதே!
அழைப்பிலாமல் பந்தியிலே அமர்ந்திருந்து உண்ணாதே!
=அழகுக்காக மணந்துவிட்டு அவசரமாய் புலம்பாதே!
பிழைதிருத்திக் கொண்டிடாதப் பிழைமீண்டும் செய்யாதே!
=பிழைக்கவழி இல்லையெனப் புலம்பிநிதம் தவிக்காதே!
கழைத்துளைக்குள் நுழையும்வளி கீதமாகும் அறிவாயே!
=காற்றிழுத்து முடிவதகுள் கற்றுவாழு மறவாதே!

கார்முகிலை தடைசெய்யக் காடழிப்புச் செய்யாதே!
=கானலிலே விதைபோட்டு காத்திருப்புக் கொள்ளாதே!
நீர்க்கரைகள் சிதைத்துவிட்டு நிலவரட்சிக் குதவாதே!
=நெஞ்சமதில் பொய்நிரப்பி நேர்மையென விற்காதே!
ஊர்விழுங்கத் தவமிருக்கும் ஊழல்கை உயர்த்தாதே!
=உன்வாழ்வோ உன்கையில் உணர்ந்தொழுக மறவாதே!.
தேர்தலிலே நிற்பவரை தெய்வமென்று நம்பாதே!
=தெரிந்திருந்தும் வாக்களித்து தெருவினிலே நிற்காதே!

வாலிபத்தின் முறுக்கினிலே வயோதிபத்தை வதைக்காதே!
=வளர்குழந்தை மனதினிலே விசவார்த்தை விதைக்காதே!
பாலிலாமல் அழுங்குழவி பார்த்திருந்து ரசிக்காதே!
=பாவமெலாம் புரிந்துவிட்டு பக்தவேசம் போடாதே!
வாலிலாத குரங்கினத்தின் வடிவமாக மாறாதே!
=வசதியற்றப் பெண்ணிடத்தில் வரதட்சணைக் கேட்காதே!
கோலிலாது நடக்குமட்டும் கூடவருவார் யாருமே
=கொஞ்சம்நீ தளர்ந்துவிட்டால் கண்மறைவார் புரிவாயே!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (2-Jan-18, 2:52 am)
பார்வை : 152

மேலே