நொடிமுள்ளின் சிறகு - வினோதன்

கட்டுத்தறிக் காளையென
ஒத்திசைந்து ஓடுகின்றன
தனித்தனி காடுகளில்
வெற்றிடக் கூடுகளில்
தவமும் இருந்தபடி !

இடியோடி இடுப்பேற
வந்தாலும் - இருதயக்குடுவை
தெறித்தோடி விழுந்தாலும்
பின்னோக்கிப் பார்ப்பதில்லை
யாரிட்ட கட்டளையோ ?!

சுக துக்கங்களை
பளிச்சிடும் பற்களுடனோ
கண்ணுப்பு நீருடனோ
கடந்து விடுகின்றன
கண்டு ரசிக்க, ருசிக்க
எதற்கும் நேரமின்றி !

தலைதிருப்ப விழைந்து
தவறிய நொடிகளும்
தாண்டிவிடத் துணிந்து
கனியாக் கனவுகளும்
கோடிகளில் உண்டு !

"காக்கா உட்கார்ந்த கதைதான்
தெரிவதில்லை யாருக்கும்"
அவர்தம் புலம்பல்கள்
கண்ணாடிக் கூடுதாண்டி
வருவதில்லை ஏனோ !

தொடுதிரையில் - மௌனித்துக்
கடக்க விரும்பாத இவை,
முதல் நொடி, வரும்நொடியை
முத்தமிட்டு முட்டுவதையே
விரும்பிச் செய்கின்றன !

இடதோ வலதோ - முந்நாடி
கவ்வியபடி கையேற விரும்பும்
கடிகார நொடி முள்ளின்
ஆசைக்காகவாவது - அணியுங்கள்
'கடி'கார காப்புக்களை !

உலகமே மௌனிக்க
நீங்கள் மட்டும் கேட்பதற்காக
ஒரு தடவை துடிக்கும்,
காத்திருந்து காதுகொடுங்கள்,
மறுநொடி - நொடி முள்ளுக்கு
சிறகு முளைக்க - கடிகார
கண்ணாடி உடைந்து வழிவிடும் !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (3-Jan-18, 6:30 pm)
பார்வை : 85

மேலே