பொங்கல் காலைகள்

பொங்கல் காலைகள் இனிதே புலர்ந்தன.

வீட்டின் பின்புறம்
பொது குளியறையில்
நண்பர்களுடன்
அரைத் துண்டுடன்
அரக்கு தேய்த்து
குளித்த நாட்களில்,
பொங்கல் இனிதே புலர்ந்தது.

நீளமான கரும்பு வேண்டி
நுனிக்கரும்பு தேடி நான் எடுத்து,
அடிக்கரும்பு கடிக்கும் தமையனிடம்
என்னவென்றே தெரியாமல்
ஏமாந்து நின்ற தருணங்களில்,
பொங்கல் இனிதே புலர்ந்தது.

பக்கத்துக்கு வீடு பாட்டியிடம்
பக்குவம் பல கேட்டு
பார்த்து பார்த்து அம்மா செய்த
முறுக்குகளை கடிக்க முடியாமல்
இடித்துத் தின்றிட, அப்பா
வெற்றிலை உரல்
எடுத்து வந்த வேளைகளில்,
பொங்கல் இனிதே புலர்ந்தது.

அம்மாவிடம் அடம்பிடித்து
காசு வாங்கி,
நண்பர்கள் யாவருக்கும்
"என்றும் பிரியா நட்புடன்"
என்றெழுதிய வாழ்த்து அட்டைகளை
அனுப்புகையில்,
தபால் பெட்டியில் கை சிக்கி
அழுத வலியில்,
பொங்கல் இனிதே புலர்ந்தது.

விளையாட்டு போட்டிகளில்
நானும் சேர்கிறேன் என்று சொல்லி
நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்
ஓடமுடியாமல் பாதியிலே நின்று
ஊரார் கைகொட்டி கேலி செய்ய,
வெட்கத்தில் வீட்டிற்குள்
ஓடி ஒழிந்தபொழுது,
பொங்கல் இனிதே புலர்ந்தது.

இன்று,
முகநூலில் வாழ்த்து சொல்லியும்,
தொலைபேசி அழைப்புகளிலும்
சாயகின்றன பொங்கல் காலைகள்.

நினைவுகள் இசையாட,
இனிப்பற்ற கோகோ பானம்
ஒன்றை பருகி நிற்கின்றேன்,
பொங்களின் கசப்பை மறந்திட,
பானம் சிறிது இனிக்கத்தான் செய்கின்றது.

எழுதியவர் : (16-Jan-18, 5:32 am)
சேர்த்தது : தமிழ் பித்தன்
பார்வை : 100

மேலே