நுண்ணுணர்வு

அன்று மதியம் மணி இரண்டை தாண்டி இருக்கும், ஆவேசமாக மழை பொழிந்து தீர்த்தது, ஏனோ என் சோகம் அதனையும் தொற்றிக் கொண்டது போல். டாக்டர் சென்ன வார்த்தைகள், என் இதயத்தை பிளந்தது போல உணர்ந்தேன். என் ஐம்புலனும் செயல் இழந்து, பேர் இடியில் முடங்கிப்போய் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தேன். சிவா, ஆஸ்பத்திரி வேலைகளை முடித்து ஆம்புலன்ஸில் என்னை ஏற்றி விட்டான். வீட்டு முற்றத்தை எட்டியதும் என் மகள் சுமதியின் ஓலம் என்னை ஏதோ செய்தது. சிவாவும் சுமதியும், என்னை இருக்கிப் பிடித்தப்படி அழுது புலம்பினர். ஒன்றுமே செல்லாமல் என் பால்கனி ஓர இருக்கையில் அமர்ந்தேன்.

"என்னங்க, இங்க வந்து உகாந்திருக்கீங்க?..காப்பி கொண்டு வரட்டா?" என்று என்னை உபசரிக்க அவள் என் அருகில் இல்லை.

"அப்பா, எல்லாம் ரெடி பன்னிடாங்க..நீங்க ஒரு தரம் வந்து பத்திட்டு போங்க" என்று சிவா கூற, அவள் அறைக்குள் சென்றேன்..
" விழியழகில்..
என் மனதளவில்..
பூந்தளிர் அவள்!.."
அன்றோ..கண்கள் மூடிய படி, அவளை சுற்றிலும் நான் அறியாத மருத்துவ கருவிகள் அவளை பற்றிக் கொண்டிருந்தது.

அன்பில் சிறந்தவள், அமைதியான புன்னகை கொண்டவள், என் தேன்மதி. பாலில் மஞ்சள் கலந்தது போல அவள் நிறம், மடிப்பு கலையாமல் அவள் புடவை கட்டும் தோரணைக்கு அண்டை வீட்டு பெண்களும் பொறாமை கொள்வது உண்டு. அவள் சமயலறையில் பாடிக் கொண்டே பதார்த்தங்களை பக்குவமாக செய்யும் போது அன்னபூரணியின் சாயல் தோன்றும். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அவள் பேச்சிலிருந்து நான் இன்னும் மீளவே இல்லை. என் மன அலைகளை கடந்து ஓர் குரல் என்னை தடுத்தது.

"சார், நான் தான் லதா, ஹாஸ்பிடல் அரேஞ் பன்ன ஸ்டே அட் ஹோம் நர்ஸ்"
"மம்ம்.." என்ற உணர்ச்சியற்ற பதிலுடன், மதியின் அருகில் அமர்ந்து பார்த்த படியே என் பொழுதுகளை ஓட்டினேன். ஒரு வாரம் மலைப் போல் ஓடியது.
பிள்ளைங்க இருவரும் அவர்கள் வேலை நிமித்தமாக தங்கள் வீடுகளுக்கு சென்றனர். நான், என் தேன்மதி, வெறுமை என்று நாட்கள் ஓடின.

தினமும் சுமதி என்னை தொலைபேசியில் அழைப்பாள். அன்று, அவள் " அப்பா, அம்மா நேத்து என் கனவுல வந்தா, உனக்கு பிடிச்ச குலோப் ஜாமுன் செஞ்சு தர மாதிரி வந்தாச்சுப் பா, ஏன்பா அம்மாவுக்கு மட்டும் இப்படி வந்துச்சு " என்று அவள் தேம்பி அழுவதை தாங்க இயலாமல் நான் மதியின் கால்களை பிடித்தப் படி கதறி அழுதேன்.

காலைல பில்டர் காப்பி, பத்து மணிக்கு சூப், சாய்ங்காலம் மாசாலா டீ, காஞ்சிபுரம் இட்லி, வத்தக் குழம்பு, வேப்பம் பூ ரசம், அதிரசம், மஸ்கோத் அல்வா, பிரியாணி இப்படி அவள் கை வண்ணத்தை அடிக்கி கொண்டே இருக்கலாம்.. அதன் நடுவில்.
" அய்யா..இன்னும் ஒரு இட்டிலி சேர்த்து சாப்பிடுங்க" என்றால், பற்றுடன் எங்க வீட்டு வேலைகாரி அலமேலு.

ஓர் புத்தகத்துடன் அவள் அறைக்கு சென்றேன்.
" அண்ணா, சிவா சார் கிட்ட செல்லி உங்கள செக்கப் கூடிட்டுப் போக செல்லுங்க, ரொம்ப வீக்கா இருக்கீங்க" என்றால் லதா, ஓர் சகோதிர பாசத்தில்.

எட்டு மாதங்கள் ஓடின. மனைவியின் உடலில் ஏதும் மாற்றம் தோன்றவில்லை. அவள் உடல் முழுவதும் ரணங்களாய், துளையிட்ட இடம் எல்லாம் ரத்தம் வடிய, உடல் மெலிந்து, தலை முடி கொட்டி, இதற்கு மேல் என்னால் அவளை பார்க்க முடியாமல் தவித்தேன். அன்று இரவு பத்தை தாண்டி இருக்கும், ஏனோ மனதின் வலி என் தோள்பட்டைகளை படர்ந்தது. பிள்ளைகளை தொலைப்பேசியில் அழைத்து பேசினேன், இருவரும் பதறி அடித்து மறுநாள் காலை ஓடி வந்தனர். மாப்பிள்ளை மற்றும் பேரப் பிள்ளைகளுடன் வந்த சுமதி அதிர்ச்சியில் உரைந்தாள், "அப்பா! ..அய்யோ!..அப்பா என்ன ஆச்சு உங்களுக்கு..". சிறிது நேரம் கழித்து எல்லாம் மாறியது.

சுமதி, வந்திருந்த அவள் அத்தையிடம் கூறி அழுதது, "அப்பாக்கு டிப்ரெஹன் அதிகமாகி, ஹார்ட் ஸ்ட்ரோக் வந்திருக்கு, அவர் அம்மா கைய பிடிச்சுகிட்டே பக்கத்துல சேர்ல உக்காந்த மாதிரியே...அம்மாவுக்கு இது என்னமோ தெரிஞ்ச மாதிரி..அவளும் அப்பாவோட தன்ன சேர்த்து கிட்டா..இப்ப..நானும் அண்ணாவும் அனாதையா நிக்கிறோம்".

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (27-Jan-18, 1:14 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 260

மேலே