ஏதுமில்லை

தற்காப்பின்
உச்ச நிலையே;
வீரமென
ஏதுமில்லை!
வெற்றித் தோல்வி
தொடரோட்டம்;
வசந்தமென
ஏதுமில்லை!
வினைப் பயனின்
அறுவடையே;
விதியென
ஏதுமில்லை!
தவறி செய்த
பிழையின் மொத்தம்;
தனியே தத்துவம்
ஏதுமில்லை!
ஓருயிராகிட
ஈருடல் வாதை;
காதலென்று
ஏதுமில்லை!
மாடுகள் போல்
நிதம் ஓட்டிடும்
ஆசை;
மடிந்தால் வாழ்க்கை
ஏதுமில்லை!
கழிந்திடும் நாட்களுள்
களித்திடும் நொடிகளே;
ஆயுளென
ஏதுமில்லை!
ஏழாமறிவாய்
மனிதம் ஏற்றிடு;
உன்னதமிங்கு
ஏதுமில்லை!
எளிய சொற்களில்
உணர்ச்சிகள் கொட்டிடு;
இலக்கியம்
வேறேதுமில்லை!
மரபின் பாதையில்
மடமைகள் விலக்கிடு;
பண்பாடிங்கு
ஏதுமில்லை!
பெற்றது மண்ணிடம்.
கற்றது வலியிடம்;
தானென தறுக்கிட
ஏதுமில்லை!
பெண்வழி நுழைவு.
மண்மடி சிதைவு;
இரண்டின் மீதம்
ஏதுமில்லை!
உணர்ந்தவை உரைத்தேன்.
உணர்ந்திட அழைத்தேன்;
உயர்வு நவிற்சி
ஏதுமில்லை!!!

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (30-Jan-18, 10:16 am)
பார்வை : 115

மேலே