மன்னித்திடு

பாஞ்சாலியின் பரிகாசத்தை துரியோதனன் மன்னித்திருந்தால்
பாஞ்சசன்யம் முழங்கியிராது பாரதப்போர் நிகழ்ந்திராது
சரச சூர்ப்பநகையை சீண்டாது இலக்குவன் மன்னித்திருந்தால்
சுந்தர காண்டத்துடன் சுபமாய் இராமகாவியம் தொடர்ந்திருக்கும்
விரோதத்திற்கு விரோதம் உதிரத்திற்கு உதிரமென
மனிதனுள் உறங்கும் மிருககுணம் விழித்தெழ
மகாயுத்தங்கள் வெடித்து பூமியெங்கும் பிணக்காடு நிரவும்
மன்னிப்பெனும் சமரசமொழியே சமாதானத்தின் வாயிலை திறக்கும்

யாது குற்றமும் இவனிடம்யான் கண்டிடவில்லையென
ஏதும்பிழை தம்மீது வீழாத வண்ணம்
தோதுவாய் தீர்ப்பை மக்களிடம் ஒப்படைத்தான் பிலாத்து
தீதான பரபாசை விடுவித்தது மக்கள்மன்றம்
தேதுவாய் பூதலபாவத்தை இரட்சிக்க வந்த
தூதான தேவக்குமாரனை சிலுவையில் ஏற்றியது
சூதான ஆசாரியர்களின் மன்னிப்பு மறுப்பு
வேதநாயகனையே செந்நீரில் மிதக்க வைத்தது!

மன்னித்திடு! மாமலை துயரம் மடுவாய் குறையும்
மன்னித்திடு! பகையெனும் புகைவிலகி பாதகங்கள் மறையும்
மன்னித்திடு!பேதங்கள் ஒழிந்து சமதர்மம் நிறையும்
மன்னிப்புக் கேள்! மனிதமாண்பு பன்மடங்காய் மிகுதிபெறும்
மன்னிப்புக் கேள்! குற்றங்கள் மறந்து சுற்றங்கள் உறுதிபெறும்
மன்னிப்புக் கேள்! புண்பட்ட இதயங்கள் பண்பட்டு அருங்கிவரும்
இறுமாப்பெனும் இதயத்திடை இழுபறிக் கயிறை
கருவறுக்க வல்ல வஜ்ராயுதம் மன்னிப்பு!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (7-Feb-18, 1:26 pm)
பார்வை : 154

மேலே