நானும் கவிதையும்

கவிதை ஒரு மகுடம்
நான் அந்த மகுடத்தில்
பதிக்கப்பட்ட ஒளிவீசும்
நவரத்தின கல்

கவிதை ஒரு காற்று
நான் அந்த காற்றுக்கு
ஒரு நிரந்தரமான உருவம்
கொடுக்க முயன்று
தோற்றுப்போன விஞ்ஞானி

கவிதை ஒரு காந்தம்
நான் அதனோடு
ஒட்டிக்கொண்டு
விழாமலே இருக்கும்
இரும்பு துண்டு

கவிதை ஒரு கற்புக்கரசி
நான் ஒருத்திக்கு ஒருவன்
என்று வாழும்
ஏகபத்தினி விரதன்

கவிதை ஒரு புதுமழை
நான் அதில் நனைந்து
காய்ந்து மீண்டும் நனையும்
மழைப்பிரியன்

கவிதை ஒரு
கலங்கரை விளக்கம்
நான் பாக்களை
ஏற்றிச்செல்லும்
மாலுமி

கவிதை ஒரு பூந்தோட்டம்
நான் அந்த பூக்களை
பறித்து பாக்கள் தொடுக்கும்
சேவகன்

கவிதை ஒரு
அணையா விளக்கு
நான் அந்த விளக்கொளியில்
முட்டி மோதும்
விட்டில் பூச்சி

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (10-Feb-18, 12:06 am)
Tanglish : naanum kavithaiyum
பார்வை : 334

மேலே