தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி15

" புறாக்களாக பிறந்திருக்கலாம். அழகாக சந்தோஷமாக வாழ்ந்திருக்கலாம். ",என்று சிவாவின் மனதில் எண்ணம் உதித்தது.

அசோக் புறாக்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

" அப்பா! அப்பா! ",என்றபடி ஜெகனிடம் ஓடி வந்தார்கள் தமிழ்செல்வனும், தமிழ்செல்வியும்.

குழந்தைகள் இருவரையும் அறிமுகம் செய்து மகிழ்ந்தார் ஜெகன்.

காலை உணவு பூர்த்தியானப் பிறகு,
சிவா கைது செய்யப்பட்ட ராம்-ஐப் பற்றிக் கேட்டான்.

" பத்திரமாக இருக்கிறான். வாருங்கள் என்னுடன். ",என்று ஜெகன் சிவாவையும், அசோக்கையும் அழைத்துக் கொண்டு தன் வாகனத்தில் சென்றார்.

வாகனத்தை மலையோரத்தில் நிறுத்திவிட்டு நடந்து மூவரும் செல்ல, ஜெகன் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளைச் சிவாவிற்கும், அசோக்கிற்கும் சொல்லியபடி வந்தார்கள்.

கேட்டுக் கொண்டே வந்த அசோக்கிற்கும், சிவாவிற்கும் ஆச்சரியம் தாளவில்லை.
சிறிது தூரத்தில் இரைச்சல் கேட்டது.
சிவாவும், அசோக்கும் தயாராக, ஜெகனோ, " பயப்பட வேண்டாம். நம் குரங்கு நண்பர்கள் தான் வருகிறார்கள். ", என்றார்.

அவர் சொன்னது போல் குரங்குகள் வந்து வரவேற்றுச் சென்றன.
பெரியவர் புன்னகையோடு மூவரையும் வரவேற்றார்.

" சிவா, அசோக் இந்த பெரியவர் தான் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர். ",என்றார் ஜெகன்.

அதைக் கேட்ட பெரியவரோ, " நான் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எரியும் தீபம் அணையாமல் தூண்டிவிடும் விரலைவிட என் பங்கு சிறிது தான். ".என்றார்.

" ராம் எங்கே? ",என்றான் அசோக்.

" அதோ! பல்லுயிர் குடித்தவன், பாவம்! தலைகீழாக தொங்குகிறான். ",என்றார் பெரியவர்.

அசோக்கும், சிவாவும் ராம்-ஐம் கீழிறக்கும் படி கூறிட குரங்குகள் கீழிறக்கிவிட்டன.

கீழிறக்கப்பட்டவனிடம் சிவாவும், அசோக்கும் விசாரணையைத் தொடங்கினர்.
ராம் ஒவ்வொரு உண்மையாகக் கசிக்க, அதை கைபேசியில் பதிவு செய்தார் ஜெகன்.

ஒரு வழியாக விசாரணை முடிந்தது.

" இவனை என்ன செய்யலாம்? ",என்றான் அசோக்.

" கொடியவனின் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். ", என்றான் சிவா.

" சிவா, அசோக் சற்று பொறுங்கள். பெரியவரே நீங்கள் சொல்லுங்கள். இவனை என்ன செய்யலாம்? ", என்றார் ஜெகன்.

" சிவா கூறியது போல் இவனுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். ஆனால், அந்த இரத்தக்கரை உங்கள் கைகளில் படிய வேண்டாம். கொடியவனை வேட்டையாடுவது கொடிய விலங்குகளின் பொறுப்பு. ",என்று கூறி பெரியவர் வாய் மூடும் முன் சிங்கமும், புலியும் பாய்ந்துவந்தன.

சிங்கம் வலதுபக்கம் கடிக்க, புலி இடதுபக்கம் கடித்து இழுக்க, அலறிய ராம் இரண்டு துண்டாகப் பிளந்தான்.
சிங்கமும், புலியும் தம் பங்கை உண்டு, மிச்ச எலும்புகளை உமிழ்ந்து,
ஏப்பமிட்டபடி தூங்கச் சென்றன.

மூவரும் பெரியவரிடம் விடை பெற்றுக் கொண்டு வீடுநோக்கிச் சென்றனர்.

அப்துல்லா சென்னையில் இருப்பதால் அவர் மூலமாக தர்மராஜ் பற்றிய தகவல்களை விசாரிக்கச் சொன்னான் சிவா.

ஜெகன் தனது காவல் உளவாளிகள் மூலமாக விசாரணையைத் தொடங்கினார்.
அசோக் தனது இராணுவ நண்பர்கள் மூலம் விசாரணையைத் தொடங்க, மூவராக இருந்தவர் முப்பது பேர்களாகப் பெருக ராம் சொன்ன தகவல் ஒவ்வொன்றாக சரிபார்க்கப்பட்டது.

அதோடல்லாமல் அப்துல்லா விசாரித்ததில் தற்சமயம் ராகவன் என்பவன் தர்மராஜைச் சந்திக்க வந்ததும், அவர்களிடம் எதோ பெரிய திட்டம் போடப்பட்டு இருப்பதும் சிவாவிற்குத் தெரிய வந்தது.

" என்ன திட்டமாக இருக்கும்? ", என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அந்த செய்தித்தாள் கண்ணில்பட்டது.

" பிரதமர் இராஜேஷ்குமார் 22ம் தேதி தமிழகம் வருகை ", என்ற செய்திதான் அது.
அந்தச் செய்தியில் அவர் 23-ஆம் தேதி மெரினாவில் மேடை அமைத்து பேச இருப்பதாகவும், மக்கள் குறை கேட்க இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.
அந்தச் செய்தியை உறுதி செய்ய டெல்லிக்குக் கால் செய்தான் அசோக்.

அங்கும் செய்தி உறுதிபடுத்தப்பட அசோக்கும், சிவாவும் ஜெகனிடம் சொல்லிவிட்டு சென்னை சென்றனர்.

22-ஆம் தேதி பிரதமர் இராஜேஷ்குமார் சென்னை வந்தார்.
சென்னையில் ஆடம்பர செலவு கூடாதென ஒரு விடுதியில் எளிமையான பாதுகாப்புடன் தங்கியிருந்தார்.

அவரைக் காண அசோக்கும், சிவாவும் சென்றார்கள்.
காவல்துறையினர் உள்ளே விடவில்லை.

விடுதியின் சொந்தக்காரரை தொடர்பு கொள்ள அவரின் மூலமாக பிரதமர் இருந்த அறையின் தொலைபேசி எண் கிடைக்க, அதன் மூலம் பிரதமரைத் தொடர்பு கொண்டு விடயத்தை அசோக் கூறினான்.

" தம்பி, என் உயிரைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ", என்றார் பிரதமர்.

" உங்களுக்கு கவலை இல்லாமல் இருக்கலாம் சார். ஆனால், ஒரு நல்ல மனிதரை நாங்க இழக்க விரும்பவில்லை. ", என்று அசோக் கூறினான்.

" சரி, இப்போ என்ன செய்யலாம் தம்பி? ",என்றார் பிரதமர்.

" உங்களைச் சந்தித்து நேரில் பேசனும் சார். ", என்றான் அசோக்.

" சரி வாங்க தம்பி. ", என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு பிரதமர் தன் அறைவிட்டு வெளியே வந்தார்.
அங்கு இருவர் வருவதைக் கண்டார்.
தனது பாதுகாவலர்களிடம் அவர்கள் இருவரையும் அழைத்து வருமாறு கூறினார்.

உள்ளே சென்ற அசோக்கும், சிவாவும் பிரதமருக்கு நன்றி கூறினார்கள்.
தாங்கள் கொண்டு வந்த வீடியோ ஆதாரத்தைப் பிரதமரிடம் காட்டினர்.
அதைப் பார்த்த பிரதமர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

நாட்டிற்கு எதிராக அரங்கேற்றப்பட்ட நிகழ்வுகள் பற்றிய பல முக்கிய தகவல்கள் அதில் அடங்கி இருந்தன.

அந்த வீடியோ பிரதியொன்றை தனது மடிக்கணினியில் ஏற்றிக்கொண்டார்.

" தம்பி, நீங்க இருவரும் இந்த நாட்டிற்குப் பெரிய உபகாரம் செய்து இருக்கிறீர்கள். இதன் மூலம் ஒட்டுமொத்த தீவிரவாத இயக்கங்களையும் வேரோடு அழிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் டெல்லி சென்றதும் என்னுடைய முதல் வேலை அதுதான். ", என்று கூறினார் பிரதமர்.

" உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது சார். நீங்கள் நாடாளுமன்றத்தில் தீவிரவாத ஒழிப்பு குறித்து பேசினீர்கள்.
அதனாலேயே, உங்களை அழிக்கத் தீவிரவாத அமைப்புகள் திட்டம் தீட்டியுள்ளன. நாளை உங்களுக்கு ஆபத்து எந்த வடிவிலும் வரலாம். ",என்றான் சிவா.

" என்ன நடந்தாலும் தீவிரவாதத்தை ஒழித்தே ஆக வேண்டும். ", என்றார் பிரதமர் இராஜேஷ்குமார் கம்பீரமாக...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Feb-18, 11:58 pm)
பார்வை : 553

மேலே