காசு பணம்
==========
இல்லாத ஏழையர்க்கும் இடர்சூழும் கையில்
=இருகின்ற பேர்களுக்கும் இடர்சூழும் – இந்த
பொல்லாத பணத்தாலே புவிசுற்றும். வாழ்க்கைப்
=போராட்டப் பாதையிலே புதிராகும். தனது
செல்வாக்கால் மாந்தரெமைச் சீரழிக்கும் காசு
=சிதையாகிப் போகுமட்டும் சேர்த்துவைக்கும் பேர்க்கே
நல்வாழ்வை கொடுத்திருக்கும். நலிந்தவர்க்கோ நீதான்
=நாதியற்றுப் போவென்றே நவிலாமல் நவிலும்.
*
கட்டிக்கத் துணியின்றிக் கலங்குகின்ற ஏழைக்
=கண்ணீரைத் துடைப்பதற்குக் கைகொடுக்கா பணம்தான்
வட்டிக்குக் கொடுத்தென்றும் வாழ்வோர்க்குக் கல்லால்
=வடிவமைத்த இதயத்தை வைக்கவிட்டப் பணமாம்
கட்டுகட்டாய் சேர்த்துவைத்துக் கடுகளவும் நாளும்
=கண்தூங்க முடியாதக் கயவர்களின் வாழ்வை
பெட்டிக்குள் அடங்கென்றுப் பிடிக்குமெமன் வந்தால்
=பிரயோசன மில்லாமல் போகின்றப் பணம்தான்.
*
உறவெல்லாம் பிரிவாக உட்பூசல் வளர்த்து
=உள்ளத்தில் சுயநலத்தை உருவாக்க விட்டு
பறவைபோல் சிறகின்றிப் பறக்கின்றப் பட்சி
=பரத்தைக்கைப் பைக்குள்ளும், பக்திமான்தன் வீட்டில்
சிறைவைத்துப் பூசிக்கும் சிற்றுண்டிய லுள்ளும்
=சிக்குண்டுக் கிடக்கையிலே சிந்திக்க வைக்கும்
நிறம்கொண்ட காசுபணம் நிலையாய்நம் கைமேல்
=நிற்காதக் காரணத்தால் நிலையாமை உணர்த்தும்.
. *மெய்யன் நடராஜ்
.