உன்னால் என் மனதில் மாற்றம்

இறுதி பகுதி:-
அவள் இப்படி சொல்லவும் மலர் மகிழ்ந்து தான் போனாள். ஏதோ அவளே தனது காதலில் வென்றது போல. மலரின் முகத்தில் தோன்றிய உற்சாகத்தை பார்த்து புன்னகைத்துவிட்டு தன் கைப்பேசியை எடுத்து கண்ணனிற்கான குறுஞ்செய்தியை எழுதி அனுப்பினாள் கவியரசி.

அங்கே பூங்காவில் தன்னிலை மறந்து பிதற்றி கொண்டிருந்த கண்ணனை சென்றடைந்தது அது. அவன் தனது கைப்பேசியை எடுத்தான். அந்த செய்தியை படித்தான். “நாளை மாலை பூங்காவில் அவசியம் உன்னை சந்திக்க வேண்டும்” முதல் வரியை படித்ததும் அவனது இதழில் தோன்றிய புன்னகை மெல்ல அகன்றது அவன் அந்த செய்தியை தொடர்ந்து படித்த போது.
மறுநாலைய பொழுதிற்காக ஏங்கி கொண்டிருந்த அவனது மனதில் சிறிய அச்சம் ஆட்கொண்டது. அவளது பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் தோன்றிய அச்சமாக இருக்க வேண்டும் அது.

மறுநாள் காலை விடிந்தது, அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கின்ற உறவின் நிலையை தீர்மானிக்க போகும் நாள் அது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் அது இன்பமான ஒன்றா அல்லது வலிகள் நிறைந்ததா என்பதை காலம் மட்டுமே அறியும்.

அன்று மாலை வழக்கம் போல் பூங்கா மேடையில் ஒரு இதயம் மற்றொரு இதயத்திற்காக காத்திருந்தது. இந்த முறை காத்திருந்தது கண்ணன். அவனது மனதில் இருந்த நடுக்கம் அவனை மதிய வேளையே அங்கு கொண்டுவந்து சேர்த்திருந்தது.
கவியரசியின் வருகையை உணர்த்தியது அவளது கொலுசொலி. அவன் அருகில் வந்து அமர்ந்தாள் அவள். அவள் பக்கம் திரும்பினான் அவன். அவன் மனத்திரையில் ஓடி மறைந்தது அவள் அனுப்பிய குறுஞ்செய்தியின் இறுதி வரி. “என் திருமணத்தை பற்றி உன்னிடம் பேச வேண்டும். அப்பா எனக்காக ஒரு மாப்பிள்ளை பார்த்துள்ளார். அவசியம் வந்துவிடு” என்ற அந்த வரிகள் அவனுக்கு வலியை அன்றி வேறு எதனை பரிசாய் தந்திருக்க முடியும்.

“என்ன கண்ணா மௌனமாகவே இருக்கிறாய்? ஏதும் கேட்க மாட்டாயா?” என்றாள் அவள். “என்ன கேட்பது கவி. என்னை எப்படி மறந்தாய் என்றா. இதே கேள்வியை நான் முன்பு ஒரு முறை கேட்டிருக்கிறேன். அதன் அர்த்தமும் இன்று நான் அப்படி கேட்டால் அதன் அர்த்தமும் வேறாக இருக்காதா?” மனதுக்குள் நினைத்தவன் “இல்லை கவி.சொல், உனக்காக உன் தந்தை பார்த்திருக்கும் மணமகனை பற்றி” என்றான் வலியை தன் மனதோடு புதைத்து கொண்டு.

“அவர் பெயர் மதி. எங்களது தூரத்து உறவு. அவர் எனது பள்ளி தோழனும் கூட. அன்று எல்லாம் நான் நினைத்ததில்லை அவரே என் வாழ்க்கையின் பாதியாய் ஆவார் என்று” சொல்லிவிட்டு அவனது விழிகளை பார்க்க மறுத்து மறு பக்கம் தனது தலையை திருப்பி கொண்டாள் அவள்.

“உன் பள்ளி கால தோழனா? அவனால் என்னை விட அதிகமாய் உன்னை நேசிக்க முடியுமா? அளவற்ற காதலை உனக்கு அளிக்க முடியுமா?” ஏனோ அவனது இதழ்களுக்கு இந்த கேள்வியை கேட்கும் திறன் இல்லாமல் போய்விட்டது. “உனக்கு அவனை பிடித்திருக்கிறதா?” என்றான்.

“பிடித்திருக்கிறது கண்ணா. தோழன் ஒருவன் வாழ்க்கை துணையாய் வருவதை எந்த பெண்ணும் விரும்ப தானே செய்வாள். அடுத்த மாதம் நிச்சயதார்த்தம், ஆறு மாதத்தில் திருமணம்” அவளது இந்த வரிகள் அவனை எத்தனை அளவு காயப்படுத்தி இருந்தால் அவனது கண்களின் ஓரம் அவனையும் அறியாமல் கண்ணீர் துளிகள் எட்டி பார்த்திருக்கும். அதை அவள் காணும் முன்னர் வேகமாய் தன் தலையை மறு பக்கம் திருப்பியவாறே அந்த துளிகளை துடைத்து கொண்டான்.
“தேவி என்ன சொன்னாள்? உங்களுக்குள் எல்லாம் நலம் தானே. உன் காதலை உன் அம்மாவிடம் சொல்லி நீயும் என் போல கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் கண்ணா” அவள் பேச பேச அவனது மனம் கண்ணீர் அன்றி உதிரத்தை சிந்திவிட கூடாதா என்றே எண்ணியது.

“என் வாழ்வில் இருக்க வேண்டியவள் இன்று இல்லை கவி. அவள் தனது வழியில் செல்ல முடிவெடுத்துவிட்டாள்” அவன் சொல்ல அவனை புதிராய் பார்த்தாள் அவள். அவளது புருவங்கள் கேள்வி குறிகள் போல் வளைந்தன.
“என்னை விடு கவி. என் வாழ்வில் இதனால் ஏற்பட போகும் மாற்றங்கள் நானே அறியாத ஒன்று தான். அதை பற்றி சிந்திக்கும் நிலையில் நான் இப்போது இல்லை” என்றவன் அந்த இடத்தை விட்டு செல்ல முடிவு செய்து அந்த மேடையில் இருந்து எழுந்து நடந்தான்.

அவன் மனதில் ஆயிரம் கேள்விகள். ஏன் இத்தனை வலிகள் அவனுள். இதை எல்லாம் எதிர்த்து நின்றவன் தைரியத்தை வரவழைத்து கொண்டு அவள் பக்கம் திரும்பினான். “கவி உன்னிடம் நான் சொல்ல வேண்டியது ஒன்று தான்….” அவன் சொல்லியதை கேட்ட போது அவளது மனதிலும் வலி நிரம்ப தொடங்கியது.

ஆறு மாதங்களுக்கு பின்,
அவன் இரெயிலில் அமர்ந்திருந்தான். இன்று அவளுக்கு திருமணம். ஆம் அவன் பெரிதாய் நேசித்த கவிக்கு தான். இனி அவளை கவி என்று அழைக்கும் உரிமை அவனிடத்து இருக்க போவதில்லை.
அன்று அவர்களின் இறுதி சந்திப்பில் அவனால் தைரியத்தை வரவழைத்து கொண்டு அவளிடம் சொல்ல முடிந்தது இதை தான் “உன் திருமண வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள்”.

ஆனால் இன்று அவள் அருகில் வேறு ஒருவன் அமர போவதை காணும் துணிவு அவனிடம் இல்லை. அதனால் தான் அவன் டெல்லிக்கு புறப்பட்டு விட்டான். ஆம், முன்பு அவனுக்காக அவனது மாமா பார்த்து வைத்திருந்த அதே வேலைக்காக தான். அவனது கைப்பேசியை கையில் எடுத்தான். அவளுடம் இனி பேசிடும் அளவு அவன் மனதில் வலிமை இருக்குமா என்ற ஐயம் அவனுக்கு.
குழப்பம் நிறைந்த அவன் மனதை வென்றது அவனது அச்சம். அவன் கைப்பேசியில் இருந்த சிம்மை எடுத்து வெளியில் வீசி எறிந்தான்.அங்கே அவளது திருமணம் நடந்தேரியாது. இரெயில் நகர தொடங்கியது. அவனது வாழ்க்கையும் தான், அவள் நினைவுகள் தரும் சுகங்களையும் வலிகளையும் சுமந்தபடி.

——> சொல்ல படாத காதலும் கொலையாளியின் ஆயுதமும் ஒன்று தான், இரண்டும் தருகின்ற வலி கொடுமையானது.

எழுதியவர் : (28-Feb-18, 3:57 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 494

மேலே