கரங்கள் நீளட்டும்

கரங்கள் நீளட்டும்!

சிரியாவின்
இளம்
செங்கன்னங்களில்
தெறித்து விழுந்த துளிகள்
மனித வேட்டையாடி
வருவோருக்கு
எதிரான
குருதிக் குண்டுகள்.

எதன் பேராலும்
எதன் பொருட்டும்
எவர் மீதும்
போர் நடக்கலாம்.

பிஞ்சுகள் மீதான
நஞ்சு குண்டுகள்
விழுகிற போது
விழித்தெழும்
மனிதம்.

மழலையர் மீதான
தாக்குதல்களால்
ஏழாண்டுகளாக
எட்டப்படாதவைக்கு
தீர்வு
எட்டப்படும்...
ஏனெனில்
சர்வதேசியத்தை
எழுப்பியவர்கள்
இந்த சின்னஞ்சிறுசுகள்
மட்டுமே.

எதிர்காலத்தை அழிப்பவர்களுக்கு
நிகழ்காலமே காலமாகும்
என்பது
கடந்த காலத்தின் பாடம்.

எதிர்கால சந்ததிகளை
அழித்துவிட்டால்
இன்னுமொரு
நூற்றாண்டு
கோலோச்சலாம்
என்பவர்களின்
கனவை
கலைத்தன
இந்த சின்னஞ்சிறு
சிறகுகள்.

சிதறி விழுந்தவர்களிடையே
விடுபட்ட
குழந்தைகளின்
ஒரே குரல்
'உலகே
வன்மத்தில் இருந்து
விடுபடு'
என்பது தான்.

எவர் எவரை
ஆதரித்தாலும்
எதிர்த்தாலும்
இப் பிஞ்சுகளை
இதயங்களில்
சுமந்தே
சர்வதேசிய சமூகம்
கடக்கும்.
கடக்காவிட்டால்
கூண்டோடு
கடத்திவிடும்
உலகம்.

இதற்காகவா
நாடுகள்
வளர்ந்தன?

பூமி பந்து
சுழலும் போது
மேல் இருப்பவர்
கீழும்.
கீழிருப்பவர்
மேலும்
இடம் பெயர்வர்.
இடைப்பட்ட காலத்தில்
பந்துவை காப்பவர்
காக்கப்படுவார்.

ஏனெனில்
மேலும்
கீழும்
எவருக்கும்
சொந்தம் என
எழுதி வைக்கப்படவில்லை.

சுழலில்
கிடைத்த அற்ப வாய்ப்பில்
ஆடுவோர் ஆட்டம் காண்பார்.
அணைத்து மகிழ்வோர்
அணைக்கப்படுவார்.

சிரியா
என்றாலும்
ஈழம்
என்றாலும்
இது நிகழ்ந்தே
தீரும்.

ஏனெனில்
பூமழலையர்
மீதான
இத்தாக்குதலால்
உலக மாந்தரின்
கண்ணீர் பூக்கள்
சிரியாவின்
எண்ணைக்கிணறுகளை
நிறைக்கும்.
ஆள்வோரையும்
அடக்குமுறையாளர்களையும்
அணைக்கும்.

எங்கோ
ஒருமூலையில்
நடக்கும்
இந்த ஓலங்களை
அடக்காவிட்டால்
உலகம்
தான் கற்றவற்றை
இழக்கும்.
தன்னையும்
இழக்கும்.

பிஞ்சு கன்னங்களை
வருடிட
நம் கரங்களும்
நீளட்டும்...

- சாமி எழிலன்

எழுதியவர் : சாமி எழிலன் (4-Mar-18, 4:57 pm)
சேர்த்தது : Saami Ezhilan
Tanglish : karankal neelattum
பார்வை : 49

மேலே