தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல்

மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் ஆகும். தேவைகளில் முதன்மையானது உணவே. திணையிலக்கியத்தின் பின் தோன்றிய மணிமேகலையில் ‘உணவின்’ முதன்மையானது,

“அறம் எனப்படுவது யாது எனக்கேட்பின்
மறவாது இதுகேள் மண் உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும்
அல்லது கண்டது இல்” (மணிமேகலை.25.288-291)

என்றவாறு உணர்த்தப்பட்டுள்ளது.

திருக்குறளும்,

“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள்.81)

விருந்தினரை வரவேற்று உணவிடுதலே இல்லறத்தான் கடமை என்று தெளிவுறுத்துகின்றார். நீதி மற்றும் காப்பியம் புகழ்ந்துரைக்கும் உணவிட்டு உயிர் ஓம்பும் பழக்கத்தின் மூலஊற்றாக அகத்திணையிலக்கியம் விளங்கினமை தெள்ளிதின் புலனாகும். அகத்திணையிலக்கியத்தில் தன்னைப்போன்ற சக மனிதர்களுக்கு உணவிடும் நேய உணர்வானது ‘விருந்தோம்பல’ என்னும் நிகழ்வால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. விருந்தோம்பல் என்னும் இனிய பண்பாட்டு அறத்தை ஆணும் பெண்ணுமாக இணைந்தே செயல்படுத்தியுள்ளனர். வளம் மேம்பட்டால் தான் விருந்தினருக்கு உணவிட முடியும் என்பதும் அவர்களால் உணரப்பட்டுள்ளது. அதனால் தான் இயற்கை செழிக்கவும் வேண்டியுள்ளனர்.

“நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!” (ஐங்குறுநூறு.பா.1)

“விளைக வயலே! வருக இரவலர்!” (ஐங்குறுநூறு.பா.2)

“பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!” (ஐங்குறுநூறு.பா.3)

“பசி இல் ஆகுக! பிணிசேண் நீங்குக!” (ஐங்குறுநூறு.பா.5)

இரவலர் வர வேண்டும், பசி இல்லாமல் போக வேண்டும் என்பது முன்னோர்களின் விருப்பமாக இருந்துள்ளது. சங்ககால மகளிரின் மனையற மாண்புகளில் முதன்மையானதாக ‘விருந்தோம்பல்’ முன் வைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியர் மனையறம் போற்றும் தலைவியின் மாண்புகளை “விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்” (தொல்.கற்பு.11) என்று விருந்தோம்பலுக்கு முன்னுரிமை தந்து கூறியுள்ளார். திருவள்ளுவர், விருந்தோம்பலுடன் சுற்றம்ஓம்பலையும் அதிகாரமாக வைத்துப் போற்றியுள்ளார். இத்தகைய பெருஞ்சிறப்புற்ற விருந்தோம்பல் அகன் ஐந்திணைகளில் வாழ்ந்த தமிழரின் வாழ்வியல் நெறியாகக் கடைப்பிடிக்கப்பட்டமை குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விருந்து - விருந்தினர் - விருந்தோம்பல்

பண்டைய தமிழரின் பண்பாட்டில் தலையானது விருந்தோம்பல் ஆகும். “பண்டமாற்று முறை வழக்கிருந்த அக்காலத்தில் போக்குவரத்து வசதிகளும் இல்லாத சூழ்நிலை நிலவியது. எனவே, இரவலர்கள் மட்டுமின்றி ஏனையோரும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு கால்நடையாகவே நடந்து செல்ல வேண்டியிருந்தது. உணவு விடுதிகள் இல்லாத காரணத்தினால் உண்டிக்கும் உறையுளுக்கும் அனைவரும் செல்லும் ஊர்களையே நம்ப வேண்டியிருந்தது. ஆகவே, புதிதாக வருவோர்க்குப் பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையால் விருந்தோம்பல் பண்பாடு தமிழகத்து இல்லங்களில் உருவாயிற்று” (பி.சேதுராமன், ஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் விருந்தோம்பல்) என்ற கருத்து விருந்தோம்பல் உருவான காரணத்தை ஆராய்ந்துள்ளது. விருந்து என்னும் சொல்லுக்குப் ‘புதுமை’ என்ற பொருண்மையைத் தொல்காப்பியர் சுட்டுகிறார்.

‘விருந்தோம்பல்’ என்பது இல்லம் தேடி வரும் புதியவர்களை இன்முகத்துடன் வரவேற்று இனிய மொழி கூறி உபசரித்து உணவளிக்கும் உயரிய பண்பாகும்.

“விருந்தே தானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே” (தொல்காப்பியம்.செய்யுள்.231)

உறவினரும் நண்பரும் அல்லாதவராகப் புதியவராக நம்மிடம் வரும் அனைவரையும் ‘விருந்தினர்’ என்கிறோம். அகநானூற்றில் மாற்றூர்கிழார் மகனார் கொற்றங்கொற்றனார் ‘விருந்து’ என்ற சொல்லை ‘புதியவர்’ என்ற பொருளில் கையாண்டுள்ளார்.

“விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன்” (அகம்.54)

புதிய மன்னர்கள் கொடுத்த திறைப்பொருளால் மன்னன் பகை தணிந்தான் எனச் சுட்டப்பட்டுள்ளது. விருந்தோம்பல் என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல் Hospitality என்பதாகும். ‘விருந்தோம்பல்’ என்பதற்குக் கழகத் தமிழ் அகராதி “புதிதாய் வருபவரை உண்டி முதலியவற்றால் உபசரிக்கை நடத்துவது” எனச் சுட்டுகின்றது. இல்லறத்தின் தலையாயநெறி விருந்தோம்பல் என்பதனைச் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் புலப்படுத்துகின்றது. இளங்கோவடிகள் விருந்தோம்பலை இல்லற வாழ்வில் இணைத்துள்ளார்.

“மறட்பருங் கேண்மையோ டயப்பரி சாரமும்
விருந்துபுறந் தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்” (சிலம்பு,மனை.காதை:85-86)

மேலும், கோவலன் பிரிவால் கண்ணகி விருந்து செய்ய முடியாத நிலை பெற்றதற்கு வருந்துவதாகக் குறிப்பிடுகின்றார்.

“அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (சிலம்பு,கொலை.காதை:71-73)

‘தொல்லோர் சிறப்பு’ என்பது அறவோருக்கு அளித்தல், அந்தணருக்கு ஓம்பல், துறவோருக்கு உதவுதல் போன்றன. விருந்தோம்பல் ‘தொல்லோர் சிறப்பு’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. இராமனைப் பிரிந்த சீதையின் நிலையானது, “விருந்து கண்ட போது என்னுறுமோவென்று விம்மும்” ( கம்ப.சுந்தர காண்டம்,கா.ப,15:2) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மனைவியைப் பிரிந்த இராமன் விருந்தோம்பும் தகுதி இழந்து துன்புறும் நிலைக்குச் சீதை வருந்துகின்றாள். மேற்கண்டவை கணவன் துணையோடுதான் விருந்தோம்பல் நிகழ்ந்ததற்கான சான்றாதாரங்கள். அகநானூற்றில் பெருந்தேவனார் பாடிய பாலைத்திணைப் பாடல் விருந்தோம்பலை ‘இல்வாழ்க்கைத் தொழில்’ என்றே சுட்டுகின்றது.

“... ... ... ... ... நாளும்
மனைமுதல் வினையொடும் உவப்ப,
நினை - மாண்நெஞ்சம் நீங்குதல் மறந்தே” (அகம்.51)

பொருள்வயிற் பிரிவு கடைகூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் கூறும் கூற்றில் இடம்பெறும் ‘மனைமுதல் வினை’ என்ற சொல்லாடல் விருந்தோம்பல் என்னும் குறியீட்டு நிகழ்வாகும். மேலும், கணவன் - மனைவி இணைந்து நிகழ்த்தும் தொழிலாக விருந்தோம்பல் கூறப்பட்டுள்ளது.

விருந்தோம்பும் முறை

விருந்தோம்பலில் உபசரிக்கும் பாங்கே முதன்மையானது. முகம் மலர்ந்து உபசரிக்கும் போது, விருந்துப்பொருள் உப்பில்லாத கூழாக இருந்தாலும் சிறப்பாக இருக்கும்.

“ஓப்புடன் முகம் மலர்ந்து உபசரித்து உண்மை பேசி
உப்பில்லாத கூழிட்டாலும் உண்பதே அமுதமாகும்
முப்பழமொடு பாலன்னம் முகம் கருத்து ஈவாராயின், கப்பிய
பசியினோடு கடும்பசி ஆகுமன்றோ” (விவேக சிந்தாமணி)

விவேகசிந்தாமணி முகமலர்ச்சியுடன் தரும் பொருளின் தன்மை, முகம் கருத்து தரும் பொருளின் தன்மை என்று வேறுபடுத்திப் புலப்படுத்துகின்றது. திருவள்ளுவரும் விருந்தோம்பும் பான்மையை,

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து” (குறள்.90)

அனிச்ச மலரினும் மெல்லியர் விருந்தினர். அவர்களை நோக்கும் தன்மையில் மென்மை வேண்டும். இன்முக வரவேற்பே விருந்தோம்பலில் முதன்மையானது என்கிறார். அகஇலக்கியத்தில் ‘எக்காலமும் விருந்திற்கு உகந்த காலமாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்ற மகளிரை ‘முல்லை சான்ற கற்பினள்’ என்று குறிப்பிடுகின்றது.

“அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள்” (நற்றிணை 142:9-11)

சங்ககால மகளிர் நள்ளிரவில் விருந்தினர் வந்தாலும் முகம் திரிந்து நோக்காது அவர்களை எதிர் கொண்டு வரவேற்று உணவளித்தமையைக் கற்புடைமைக்குப் பொருத்திக் காட்டியுள்ளனர்.

வாயிலான விருந்து

அகஇலக்கியத்தில் தலைவன் - தலைவி ஊடல் தீர்க்கும் வாயிலாக விருந்தினர் இடம் பெறுவது தொல்காப்பியப் பிரதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாட்டி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப” (தொல்காப்பியம்.கற்பு.52)

இல்லற வாழ்வின் இணைப்புப் பாலமாக விருந்தினர் அமைந்துள்ளனர். மருதநிலத் தலைவியின் ஊடல் தீர்க்கும் வாயிலாக விருந்தினர் வருகை நிகழ்ந்தமையைப் பின்வரும் நற்றிணைப் பாடல் வழி காணலாம்.

“தடமருப்பு எருமை மடநடைக் குழவி
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
புகைஎண்டு அமர்த்த கண்ணள், தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்லியர்
அம்துகில் தலையில் துடைத்தனள், நப்புலந்து,
அட்டிலோளே; அம்ம அரிவை
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பு ஆன்று,
சிறியமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம்காண்கும்மே.” (நற்றிணை 120)

உணவு தயாரிக்கும் தலைவியின் கண்கள் புகையுண்டு சோர்வோடு விளங்கின. அழகுடைய நெற்றியில் வியர்வைத்துளிகள் அரும்பின. இவ்வாறு சமைக்கும் தலைவி தலைவனோடு ஊடல் கொண்டுள்ளாள். ஆதலால் பரத்தமை கொண்ட தலைவன் தனது ஊடல் தீர்க்கும் வாயிலாக விருந்தினர் வருகையை வேண்டுகிறான்.

தலைவன் மேல் ஊடல் இருக்கும் சமயத்தில் கூட விருந்தினர்களை உபசரிக்கத் தயங்கமாட்டாள் தலைவி என்பதே அகஇலக்கியம் காட்டும் உண்மையாகும்.

“... ... ... ... ... குன்றூர் அன்ன என்
நல்மனை நனிவிருந்து அயரும்
கைதூ வின்மையின் எய்தாமாறே” (நற்றிணை.280)

விருந்தினரிடம் முழுமையாக கவனம் செலுத்துவதால் தலைவனிடம் ஊடல் நீங்காது இருக்கும் தலைவி குறித்து அகஇலக்கியம் குறிப்பிட்டுள்ளது. “தலைவனின் பரத்தமை ஒழுக்கம் கண்டு வாடிய தலைவி விருந்தின் வழி ஊடல் தீர முயலும் தலைவனிடம் ஊடல் நீங்காது இருக்கக் காரணம் அவள் கவனம் முழுவதும் விருந்தினர் பக்கம் இருப்பதால்”; என்று நற்றிணை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் நாம் அறிவது அகவாழ்வில் விருந்தோம்பலின் தனித்துவமே.

விருந்து விளையாட்டு

விளையாட்டுப் பருவத்தில் பயிற்றுவிக்கப்படும் செயல்கள் ‘பசுமரத்து ஆணிபோல’ ஆழப்பதிந்துவிடும். ஆதலால், விளையாட்டில் கூட விருந்தோம்பும் மரபு கூறப்பட்டுள்ளது. நெய்தல் நிலத்து மகளிர் சிற்றில் இழைத்து விளையாடுவதை இயல்பாக கொண்டிருப்பர். அத்தகைய விளையாட்டில் கூட, தலைவி உணவு சமைப்பதாகப் பாவனை செய்கிறாள். அப்போது தலைவன் விருந்து உண்ண வருவதற்கு விருப்பம் தெரிவிக்கின்றான்.

“தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும்,சிறுசோறு குவைஇயும்,
வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது
இருந்தனமாக,எய்த வந்து,
‘தடமென் பணைத்தோள் மடநல்லீரே!
எல்லம் எல்லன்று அசைவு மிக உடையேன்
மெல்இலைப் பரப்பின் விருந்துஉண்டு, யானும்இக்
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?” (அகம்.110)

வண்டல் இழைத்து விளையாடும் தலைவியிடம் தலைவன் நானும் உனது இல்லில் தங்கி விருந்துண்டு என் வழிநடை வருத்தத்தைப் போக்கிக்கொள்ளவா? என்று வினவுவதாகப் பாடல் அமைந்துள்ளது. விருந்தோம்பும் பழக்கம் சிறுவயதிலேயே பயிற்றுவிக்கப்படுதல் இதன் மூலம் புலனாகின்றது.

அடையா வாயிலும் விருந்தோம்பலும்

விருந்தினரை வரவேற்கக் காத்திருக்கும் அடைக்காத வாயில்கள் அகஇலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருவிழா நடைபெறும் நாட்களில் பெரிய பானைகளில் உணவு தயாரிக்கப்பட்டு, சுற்றத்தாருக்கும், புதிதாக விழா பார்க்க வரும் விருந்தினருக்கும் அளிப்பதற்கு தலைவன் - தலைவி காத்திருக்கின்றனர். பைந்நிணம் கலந்த நெய்ச்சோற்றை விருந்தாகத் தருகின்றனர். தங்களுக்கு என்று உணவைப் பத்திரப்படுத்தாமல் அனைவருக்கும் தந்துவிட்டு எஞ்சிய சோற்றை தலைவி விரும்பி உண்டுள்ளாள்.

“சாறு அயர்ந்தன்ன மிடா அச்சொன்றி
வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப
மலரத் திறந்த வாயில் பலருணப்
பைந்நிணம் ஒழுகிய நெய்மலி அடிசில்
வசையில் வான் திணைப் புரையோர் கடும்பொடு
விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு
அறம் புணைஆகத் தேற்றிப் பிறங்கு மலை” (குறிஞ்சி..201-205)

உணவு வேண்டி வரும் விருந்தினர்களும்; தடையில்லாமல் உண்டு மகிழ்ந்து சென்று வர வாயில் கதவை திறந்தே வைத்திருக்கும் வளமனைகளும், பகுத்துண்டு வாழும் இல்லறச் சிறப்பும் குறிஞ்சிப்பாட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ‘இல்லறக் கடமையாற்றக் காத்திருக்கும் அடையா வாயில்கள்’ விருந்தோம்பலுக்குத் தக்க சான்றாகும்.

விருந்தினருக்கு அறிவிப்பு செய்தல்

நம் முன்னோர் இரவுப் பொழுதில் உணவுக்கு வழிதேடி வரும் புதியவர்கள் தடுமாறா வண்ணம் அறிவிப்புச் செய்து உணவு வழங்கியுள்ளனர். இஃது குறுந்தொகைப் பாடலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

“புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார்இல் மாலை,
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்,
‘வருவீர் உளரோ?’ எனவும்,
வாரார் தோழி நம் காதலரே.” (குறுந்தொகை.118)

பொழுது கண்டு இரங்கிய நெய்தல் நிலத்தலைவி, தலைவன் வருகை நீட்டித்த வழி, தோழியிடம் உரையாடிய பாடலில், “பலர் புகும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை அடைப்பதற்கு முன்னம் வீட்டிற்குள் உணவருந்த வரவிருப்பவர் யாரும் உள்ளீர்களா? என்று அறிவிக்கும் வீடுகள்” இருந்ததாகக் கூறுகின்றாள். இன்றைய நடைமுறை வாழ்வில்; அறிவிப்பு பலகைகள் அன்னச் சத்திரங்களை இனங்காட்டுதல் போன்று சங்ககாலத்தில் அறிவிப்புச் செய்து விருந்தோம்பியுள்ளனர் என்பது சிறப்பிற்குரியது.

வினை முடிந்தால் விருந்திடும் மரபு

தலைவன் வினை மீண்டு திரும்பினால் விருந்து கொடுக்கும் பழந்தமிழ் மரபு அகஇலக்கியங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளதைத் தொல்காப்பியரும் சுட்டுகின்றார்.

“அருந்தொழில் முடிந்த செம்மற் காலை
விருந்தொடு நல்லவை வேண்டற்கண்ணும்” (தொல்.கற்பு.5)

தலைவன் கூற்று நிகழுமிடங்களைச் சுட்டிய தொல்காப்பியர், வினை முடித்து மீண்ட போது, தனது இல்லத்தில் நிகழும் விருந்தோம்பலில் விருந்தினரிடம் நிகழும் கூற்றை தெளிவுறுத்துகின்றார்.

“பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின்,
விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ?
இருண்டு தோன்று விசும்பின் உயர்நிலை உலகத்து
அருந்ததி அனைய கற்பின்,
குரும்பை மணிப்பூண் புதல்வன் தாயே.” (ஐங்குறுநூறு.442)

பாசறைக்கண் பருவவரவு கண்டு வருந்தும் தலைவனின் மனமானது வினை மீண்டால் தலைவி விருந்திடுவாளே என்று ஏக்கம் கொள்கின்றது. புதல்வன் தாய், அருந்ததி அனைய கற்பினாள் என்று தலைவியின் இல்லறத்திற்கான நற்பண்புகளும் பாடல்களில் சுட்டப்படுகின்றது.

போர்த்தொழில் முடித்து திரும்பிய முல்லை நிலத் தலைவன் தன் குடும்ப நினைவுடன் வருகிறான். தேர்ப்பாகனை விரைந்து செலுத்துமாறு உத்தரவு இடுகிறான்.

“... ... ... ... ...
செல்க பாக நின் செய்வினை நெடுந்தேர்
விருந்து விருப்புறூஉம் பெருந்தோட் குறுமகள்,
மின்ஒளிர் அவிர்இழை நல்நகர் விளங்க,
நடைநாட்செய்த நவிலாச் சீறடிப்
பூங்கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
வந்தீக எந்தை! என்னும்
அம்தீம் கிளவி கேட்கம் நாமே.” (நற்றிணை,பாடல்.221)

தலைவன் வருகையால் வீட்டில் விருந்து நிகழும் என்ற குறிப்புணர்வு மட்டுமின்றி, அதனை விருப்பத்துடன் செயல்படுத்தும் இல்லறத்தான் கடமையும் முதன்மைபடுத்தப்பட்டுள்ளது.

“... ... ... ... ...
அழுதனள் உறையும் அம்மா அரிவை
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவள் இன்நகை காண்கம்!
உறுபகை தணிந்தனன், உரவோன் வேந்தே” (நற்றிணை,பாடல்.81)

ஆற்றியிருக்கும் முல்லைநிலத் தலைவி விருந்திட முடியாதும் ஆற்றியிருக்கிறாள். தலைவன் வருகை விருந்தினர் வருகையைத் தடையின்றி அறிவிக்கும் என்பதால் தலைவனைக் கண்டவுடன் மகிழ்கின்றாள் தலைவி.

விருந்திட்டு சுற்றம்ஓம்பலும் ஈகையும்

உறவினர்களுக்கு உணவு முதலியன தந்து பாதுகாத்தல் சுற்றம் ஓம்பலாகும். பழந்தமிழர்களின்; மரபுகளில் விருந்திட்டு சுற்றம் ஓம்புதல் குறிப்பிடத் தகுந்த வழக்கமாகும்.

பாலைநிலத் தலைவி, பிரிவில் வருந்தும் போது தோழியானவள் சுற்றம் ஓம்பலின் கடமையை வற்புறுத்துகின்றாள். தலைவன் பிரிந்து சென்று பொருள் ஈட்டுவதே ‘இல்லை என்று இரந்த சுற்றத்தவருக்கு கொடுப்பதற்கே’ என்ற அறவுணர்வையும் போதிக்கின்றாள்.

“அறந்தலை பிரியாது ஒழுகுலும், சிறந்த
கேளிர் கேடுபல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இரந்தோருக்கு இல்’எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர்.”

சங்ககால மக்கள் தன் வீடு, தன் பிள்ளை என்று சுயநலத்தோடு வாழாமல் சமூகத்தோடு ஒன்றுபட்டு வாழ்ந்துள்ளனர். இல்லறத்தான் தான் தேடிய பொருளை சுற்றத்தாரோடு பகிர்ந்து உண்டுள்ளான் என்பதைச் சங்க இலக்கியம் பதிவுசெய்துள்ளது.

“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்
அன்பெனப்படுவது தன்கிளை செறாஅமை” (கலித்தொகை, பாடல்.133)

அன்பு என்பதனைக் குறிப்பிடும் போது தன் கிளையோடு (சுற்றத்தினரோடு) ஒன்றுபடுதலே என்று குறிப்பிட்டுள்ளனர். சுற்றம் தழுவுதலுக்கு என்றே ஈகைப் பண்பை போற்றியுள்ளனர்.”

‘திரியாச் சுற்றத்தோடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நீலியரோ அத்தை’ (புறநானூறு, பாடல்.2)

மன்னன் தன் சுற்றத்தோடு நிலைத்து நின்று ஆட்சி புரிய புறநானூறு சுட்டுவதும் நோக்கத்தக்கது.

“... ... ... ... ... கிளையோடு கலிசிறந்து,
சாந்த ஞெகிழியின் ஊன்புழுக்கு அயரும்
குன்ற நாட!... ... ... ... ...” (அகம்.172)

தனது உறவினர்களோடு பலாப்பழத்தின் சாற்றைக் கொண்டு செய்த மதுவைப் பருகி சந்தனக் கட்டையை விறகாக வைத்துச் செய்த ஊன் கலந்த சோற்றினை உண்டு மகிழ்கின்றான் என்று குறிஞ்சி நிலத் தலைமகனின் ‘சுற்றம்ஓம்பும்’ நல்லறம் தோழியால் கூறப்பட்டுள்ளது.

செலவழுங்குவித்தலில் - விருந்தோம்பல்

செலவழுங்கல் என்றால் “பிரிதலைத் தவிர்த்தல்” என்று அகராதி விளக்கம் தருகின்றது. ‘பொருளில்லார்க்கு இவ்வுலக வாழ்வு இல்லை’ என்று வாழ்வின் பயன் கருதிய தலைவன் பொருள் ஈட்டப் பிரியும் தருணம், தலைவியின் வருத்தத்தை எண்ணிய தோழி தலைவனிடம் பயணத்தைத் தவிர்க்குமாறு கூறுவாள். தோழி குறிப்பிட்டதும் தலைவன் பயணத்தைத் தவிர்த்தலே செலவழுங்குவித்தல் துறை’ என உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். தொல்காப்பியர் ‘செலவழுங்குவித்தலை’ ‘போகாமை’ அன்று ‘வற்புறுத்திப் பிhpவது’ என்கிறார். இத்தகைய செலவழுங்குவித்தல் துறை விருந்தோம்பலுக்குத் தேவையான பொருள் ஈட்டுவதற்குப் பிரியும் தலைவன் பிரிவைத் தாங்கியிருக்குமாறு பாடப்பட்டுள்ளது.

எழுதியவர் : (7-Mar-18, 2:45 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 2347

மேலே