செழியற்கே தக்கதோ நீரொழுகப் பாலொழுகா வாறு – முத்தொள்ளாயிரம் 59

நேரிசை வெண்பா

மன்னுயிர் காதல் தனதான அவ்வுயிருள்
என்னுயிரும் எண்ணப் படுமாயின் - என்னுயிர்க்கே
சீரொழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ
நீரொழுகப் பாலொழுகா வாறு. 59 முத்தொள்ளாயிரம்

தெளிவுரை:

நிலைபெற்ற உயிர்களிடத்து அன்பு செலுத்துதல் தனது கடமையாயிருக்க, அவ்வுயிர்களுக்குள் எனது உயிரும் ஒன்று என்று கருதப்படுமாயின், பிற உயிர்களுக்குப் பால் வழங்கியும், என்னுயிர்க்கு நீரளித்துப் பால் வழங்காதது நெறி ஒழுங்குடன் நடக்கும் செங்கோன்மையுடைய பாண்டிய மன்னன் செழியனுக்குத் தகுதியானதோ?

விளக்கம்:

மன்னுயிர் – நிலைபெற்ற உயிர், காதல் – அன்பு, தனதான அவ்வுயிர் – தான் காப்பதற்குரிய அவ்வுயிர்கள், சீர் ஒழுகு – சிறப்புடன் நடக்கும்,

நீரொழுகப் பாலொழுகா ஆறு – பழமொழி.

மன்னன் என்பவன் நடுவு நிலைமையுடன் எல்லா உயிரையும் சமமான முறையில் அன்பு பாராட்டுதல் வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Mar-18, 10:12 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே