பசுமை வயல்

வயலில்
செங்கல் புதைக்காது
செந்நெல் விதைத்திருந்தால்
பசுமை வயல்தான்
எதை விதைத்தோமோ
அதை அறுவடை செய்யாது
நெல்லை விதைத்து புல்லை அறுவடை செய்வதால்
இவன் பிள்ளை வளர்க்க அரும்பாடு படுகின்றான்
கார்மேகம் நிலத்தின்
நீர் மோகத்தைத் தனித்திருந்தால்
காவிரி கைவிரிக்காமல் நீருக்குப் பணித்திருந்தால்
ஆளும் பாவியும் காவியும்
கை கொடுத்து அனைத்திருந்தால் அணை திறந்திருந்தால்
பசுமை வயல்தான்
ஆளும் மல்லி கையும் தாமரையும்
சமபந்தி கொண்டு சம்மந்தி ஆகிவிட்டதால்
சாமந்தி பூக்கவில்லை இவன் நிலத்தில்
வயல் மீது புயல் முயல் ரயில் மயில் குயில்
இவை வராமல் இருந்திருந்தால்
வருணன் பெயருக்கேற்றாற்போல்
வந்திருந்தால் பசுமை வயல்தான்
இந்தியக் குளத்தில் எல்லாம்
தாமரை மலரவைக்க அனைவரின்
மறையையும் சலவைசெய்தவர்கள்
உழவன் வியர்வை சிந்திய நிலத்தில்
தாவரம் வளரவைக்க வரம் தந்திருந்தால்
உரம் தரம் இன்றி கண்டது ஜுரம்
இதுதான் இவன் பெற்ற வரம்
பூச்சிக் கொல்லிகள்
பூச்சியை விட்டுவிட்டு
பூச் செடியையும்
உழவன் மூச்சடியையும்
கொல்லாமல் இருந்திருந்தால்
வயல் பசுமையாக இருந்திருக்கும்
ஏரிகளெல்லாம்
ஏரியாவாகாமல் இருந்திருந்தால்
ஆறுகள் எல்லாம்
ஆறுதல் சொல்லவாவது வந்திருந்தால்
பசுமை வயல்தான்
விளையாடும் களம் ஆனதால் விவசாயக் குளம்
அழிந்துகொண்டிருக்கின்றது விவசாயிக் குலம்
இவன் உழும்போதும் அழுவதில்லை
கீழே விழும்போதும் அழுவதில்லை
அறுவடை முடித்து எழும்போது அழுகின்றான்
ஏர் பிடித்தக் கையால் தேர்ப்பிடித்துத் தொழுகின்றான்
உழவனுக்கு
ஏழ்மை பசிமை பணிச்சுமை
இல்லாதிருந்தால்
பசுமை இருந்திருக்கும் வயலருகே
நீருக்கு பதில் கண் நீருக்கு பதில்
பசு நெய் இருந்திருக்கும் அவன் வாயருகே
எருதுகள் எல்லாம் ஏறும்புகளாய்
மெலிந்துவிட்டன
உழவின்றி நிலத்தில்
எறும்புகளெல்லாம் அரும்புகளாய்
மலிந்துவிட்டன
பிறகு எப்படிச் சாத்தியம் பசுமை வயல்
தான் கிழவனாகும் வரை உழைக்கும்
இந்த உழவனை வாழ்வெல்லாம்
தாழ்வினை அளிப்பது ஊழ்வினை
தீண்டத் தீண்ட ராகம் வருகின்றது
வயலினில்
தோண்டத் தோண்ட இவன் தேகம் வருகின்றது
வயலினில்
உழவினைக் காத்து உழவனைக் காப்போம்