வாராதோ விழிப்புணர்வு

"மண்ணாளப் பிறந்த மகராசன்...
விண்தேவன் அனுப்பிய
வீரமகராசன்...
கண்ணுக்குள்ள வச்சி உன்ன
காத்து வளத்தேன்...
கடைசிகால கஞ்சி உன்
கரத்தாலென நினைச்சேன்...
கண்ணா நம்காலம் உருண்டோட...
கூடாத கூட்டாளி உன்ன சேர...
நோய் தீர்க்கும் மருந்தொன்று
உன் உணவாக...
உன்னோட கடமையெல்லாம் மறந்தாயே...!!!
ஊராரும், உறவாரும் உன்னை சாட...
உண்ணாமல், உறங்காமல் நான் வாட...
கள்ளமதுவின் காலடியிலா உன் துயில்...?!
கள்ளைக் காய்ச்சி உன்னை கொன்றவனைக் கண்டால்
கல்லால் அடித்து
கொல்லாமல் விடுவேனோ...?! "

ஒரு தாய்தெய்வத்தின் ஓலக்குரல்.....,
எட்டவில்லையோ இந்த வீணர்களுக்கு........!!!
ஒன்றா.. ?! இரண்டா..?!
ஒவ்வொரு குடும்பத்திலும்...,
ஓலக்குரல்கள்
ஒலிக்கதான் செய்கிறது...!!!

மதியிழந்து., மானமிழந்து.,
மனைவிமறந்து.,
மக்கள் மறந்து.,
மதுவை நாடும்
மதிகெட்ட மனிதா...
மதுமட்டுமிழந்தால்.,
மாண்பு உன்னைத் தேடி வாராதோ...
குடியை நேசிக்கும் குடிமகனே...
உன் குடும்பத்தை யோசித்துப்பார்...!!!

சாராயம் சாக்கடைதானென தெரிந்தும்..
சந்ததிகளை சாகடிக்கும் சாமானியனே...
உன் வாரிசுகளுக்கு
வளமான காலம் வேண்டாமா...??!!
மண்ணோடு மண்ணான கோடானகோடி
குடிகார குப்பன்களின் குடும்பத்தார்
கண்ணீர்கடல் கண்டும்...
காய்ச்சியவனின் கண்களில்
வாராதோ விழிப்புணர்வு....???!!!

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன் (14-Mar-18, 8:12 pm)
பார்வை : 107

மேலே