ஒப்புதல் வாக்குமூலம்

தோற்பது ஒன்றும் எனக்கு புதிய அனுபவமில்லை. ஒவ்வொரு முறையும் நான் தோற்கும் போது அடுத்த முறை கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும் என்று மனதளவில் தீர்மானிப்பதோடு சரி. பிறகு வழக்கம் போல் ஏதாவது ஒன்றில் சிக்குப்பட்டு வெளிறிய தோற்றுப்போன முகத்துடன் தான் வெளியேறுவேன்.
இப்போதெல்லாம் தோற்பது குறித்து என்னால் தொடர்ந்து ரசிப்பான விவாதங்களை உங்கள் முன் வைக்கமுடியும். சரியான விளக்கங்களுடன் மேடையில் பேசி கைத்தட்டல்களைக்கூட பெற முடியும். சிறிதும் கூச்சமில்லாமல் என் தொடர் தோல்விகளை உறவினர்களிடமோ அல்லது நெருங்கிய நண்பர்களிடமோ கூறும்போது முதலில் என்னை வினோதமாகப் பார்ப்பார்கள். முடிவைக் கூறும்போது சிறிது நேரம் அவர்களின் கண்களை மட்டும் உற்றுப்பார்ப்பேன். நான் மறுபடியும் தோற்றுப் போவதான என் கதை முடிவை முன்கூட்டியே அவர்கள் தேர்ந்தெடுத்து என் முழு ஒப்புதலிற்குக் காத்திருப்பவர்கள் போல சிறிது பதட்டத்துடன் காணப்படுவார்கள்.
பல சமயங்களில் எனக்கு நானே பல முறை கேட்டுக்கொண்டதுண்டு. தோல்வி என்றால் என்ன? என் சுய புராணம் படிப்பதை சிறிது நேரம் மேலே தொடராமல் உங்களுக்கு நீங்களே ஒரு முறை இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள். 90 சதவிகிதத்தினர் அவரவர் தோல்விக்கான காரணங்களை மட்டுமே பட்டியலிடுவார்கள். என்னக் கேட்டால் நாம் நமகக்காக வாழாமல் ஏதோ ஒன்றிற்காக அதைப் போல் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவே மாறாமல் அதை மறுதலிக்கும் சந்தர்ப்பங்களில்தான் நாம் தோற்றுப் போகிறோம்.
முதன் முதலாக நான் தோற்கும் போது எனக்கு பத்து வயதிருக்கும். சரித்திரப்பாடத்தில் சொல்லி வைத்தபடி குணா என்னை விட அதிக மதிப்பெண்கள் எடுத்து என்னிடம் பெருமையுடன் காட்டியப்போது அதை என் முதல் தோல்வியாக நானே வரித்துக்கொண்டேன். பிறகு ஏதாவது ஒரு வழியில் எதிர்பார்க்காத சமயங்களில் பல தோல்விகளை எதிர்கொண்டேன். கல்லூரிக் காலங்களில் ஒல்லியான என் உடல்வாகை பார்வைகளாலேயே அலட்சியப்படுத்தியவர்களிடம் ஒட்டு மொத்தமாக தோற்றுப்போனேன்.
ஒவ்வொரு முறை நான் தோற்கும் போது ஏதோ பெரிய இருண்ட பாதாளத்தில் தனியாக குரல் எழுப்பியவாறு விழுந்து கொண்டிருக்க விளிம்பில் கூட்டமாக நின்று என்னை வேடிக்கை பார்ப்பவர்களின் குரல்கள் படிப்படியாகக் குறைந்து மிகவும் பலவீனமாகக் கேட்பது போலிருக்கும். பிறகு ஒருவாறு சுய தேற்சிபெற்று அடுத்த தோல்வியை நேருக்கு நேர் ஒரு போர்வீரனைப்போல எதிர்கொள்ள ஆரம்பித்தேன்.
அத்தகைய சந்தர்பங்களில் எனக்கு முழு ஆதராவாக இருந்தது என் அம்மாதான். என் தோல்வியை ஒரு கதையைப் போல அவளிடம் கூறுவேன். விழிகளுயர்த்தி என்னையே பார்த்தவாறு எனக்கு தைரியமளிப்பாள். ஒருவர் வெற்றி பெற மற்றொருவர் நிச்சயம் தோற்கவேண்டும் என்ற கூற்றை முழுவதுமாக முறியடித்தவள் அம்மாதான். அவளைப் பொறுத்தவரை தோல்வி என்பது தற்காலிகமாக கணக்கை நேர்படுத்துவது போலத்தான். ஒருவன் வெற்றி பெறுவது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு நான் தோற்கவில்லை என்பதும் நூறு சதவிகிதம் உண்மை என்று அவள் கூறும்போது நான் நானாகவே இருப்பதைத்தான் அவள் எதிர்பார்க்கிறாள் என்று உணர ஆரம்பித்தேன்.
என்றாலும் என் ஆழ்மனதில் என்னைத் தோற்கடித்த அனைவரையும் ஒட்டு மொத்தமாக தோற்கடிக்க வேண்டும் என்ற குரல் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. நான் ஏதோ ஒன்றாக உருமாற எனக்கு இந்தக் குரல் ஆரம்பகட்ட உதவிகளைச் செய்தது என்னவோ உண்மைதான். நானும் மெல்ல மெல்ல உருமாறிக்கொண்டே இருந்தேன். சரித்திரப்பாடத்தில் என்னை விட மதிப்பெண்கள் எடுத்த குணாவிலிருந்து நான் தற்போது வேலை பார்க்கும் அலுவலகத்தில் என்னைவிட கார்ப்பரேட் படிகளில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் என் தகுதியொத்த ஆல்பர்ட் வரை என் தோல்வி ஒரு ஒப்பீட்டுப் பதிவுதான் என்பதை முழுவதுமாக ஒப்புக்கொள்வைதை மனதளவில் மறுக்க ஆரம்பித்தேன். நான் நானாக இருப்பதில்தான் எனக்கான முழு வெற்றி என்று தெரிந்தும் எனக்கன உருமாற்றம் அதிவேகமாக அடுத்தவர் சாயலில் நிறைவறிக்கொண்டேயிருந்தது.
நான் பலரிடம் தோற்றிருந்தாலும் அதிகம் என்னை பாதித்த ஒருவரையாவது நான் நிச்சயம் தோற்கடித்தேயாகவேண்டும் என்ற திடமான முடிவிற்கு வந்தேன். முதலிலிருந்து பெயர்களை பட்டியலிட்டேன். குணாவிலிருந்து ஆல்பர்ட் வரை ஒரு திரைப்படம் போல மனதில் உருவங்கள் தோன்றி மறைந்தது. ஒரு சிலர் என்னை வெற்றி பெற்றாலும் என்னைத் தேற்கடித்ததாக ஒப்புக்கொள்ளத் தயங்கியவர்களை என் ஹிட் லிஸ்டில் இருந்து எடுத்துவிட்டேன். என் அறிவுப்பற்றாக்குறையால் என்னை வென்றவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுத்துவிட்டேன். இறுதியில் கிடைத்தது ஐந்து வெற்றியாளர்களின் பெயர்கள். அவர்களை வரிசைப்படுத்தியதில் முதலில் இருந்தான் அவன். அவனை நோக்கி என் காய்களை வெகு சாதுர்யமாக நகர்த்த ஆரம்பித்தேன். என் உருமாற்றம் 50 சதவிகிதத்திற்கு மேல் தாண்டிவிட்டது.
அன்று ஜியார்ஜ் வாஷிங்டன்னின் நினைவு நாள். சென்னை அண்ணாசாலையில் வழக்கம் போல போக்குவரத்து நெரிசல். மனதிற்குள் சபித்துக்கொண்டேன். அன்று எங்களின் அலுவலகம் விடுமுறை. இருந்தும் நான் சென்றிருந்தேன். என் குழுத்தலைவனும் என்னை கண்காணிக்க வந்திருந்தான். அவன் வருவதற்கு முன்பே என் திட்ட அறிக்கையை வேகமாகத் தயார் செய்து அவன் மேஜையில் வைத்துவிட்டேன். ஒரு ரோபோ புன்னகையுடன் என்னைக் கடந்து அவன் கேபினில் போய் அமர்ந்தான். என் திட்ட அறிக்கையை அவன் படிப்பது கண்ணாடி வழியாகத் தெரிந்தது. அடிக்கடி பாராட்டும் பாவனையில் மேஜையைத் தட்டுவதும் என்னைப் பார்ப்பதுமாக இருந்தவன் திட்ட அறிக்கையுடன் என்னை நோக்கி வந்தான்.
“மார்வலஸ் சிவா! உங்களிடம் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. என்ன ஒரு மாற்றம். நீயே தலைமையேற்று இந்தப் பிராஜெக்டை நடத்து. நான் உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறேன். ஒரு வாரத்தில் நீ கனடா போக வேண்டியிருக்கும். அவசியமென்றால் ஆல்பர்ட்டை உன் துணைக்கு வைத்துக்கொள். வாழ்த்துக்கள்”
தன் கேபினிற்கு சென்ற குழுத்தலைவன் மீண்டும் என்னை நோக்கி வந்தான்.
வியப்புடன் என்னை உற்றுப்பார்த்தவன் “வாட் சிவா, ஆல்பர்ட் என்று கையெழுத்து போட்டிருக்கே. அதை அடித்து உன் பெயரை எழுது” என்று என்னை வினோதமாக ஒரு நோடி பார்த்தான்.
தாமதமாக வந்த ஆல்பர்ட் முதலில் குழுத்தலைவனை அவன் கேபினில் சந்தித்துவிட்டு மெலிதாகச் சிரித்துக்கொண்டே என்னைக் கடந்து போனான். அவன் உதட்டுச் சிரிப்பின் கடைவாய் வழியாக அருவருப்புடன் வழிந்துகொண்டிருந்தது என்னுடைய தற்காலிக வெற்றி.

எழுதியவர் : பிரேம பிரபா (20-Mar-18, 10:39 am)
சேர்த்தது : பிரேம பிரபா
பார்வை : 166

மேலே