எப்போது காயும் வியர்வை

ஏழ்மையின் பிடியில் தவிப்பவர்களுக்கு
எப்போது காயும் இந்த வியர்வை..!
எமன் பார்வை படும் வரை
எள்ளளவும் காயது இந்த வியர்வை..!

ஏர் பிடித்து உழுது
ஏக போக விதை விதைத்து
அருவி போல நீர் இரைத்தாலும்
அறுவடையில் இலாபமில்லை..!

அலையின் மீது பயணித்து
ஆழ் கடலில் வலை விரித்து
அள்ளி அள்ளி வந்தாலும்
அதிகமான விலையில்லை..!

சுத்தமாக ஊர் இருக்க
நித்தம் நித்தம் பாடுபடும்
துப்புரவு தொழிலாளியின்
துயரங்கள் என்றும் அடங்கவில்லை..!

பேருந்து நிறுத்தமோ
பெருந்திரள் கூட்டமோ
கூவி கூவி விற்றாலும்
கூடை காலி ஆகவில்லை..!

கடந்து செல்லும் மக்களின்
கால்களை நம்பிருக்கும்
செருப்பு தைப்பவன் இன்னும்
செம்மையாக வாழவில்லை..!!

அழகாய் நூல் கோர்த்து
ஆடைகளை நெய்தாலும்
நெய்பவனின் வருமை
நெடுங்காலமாய் தீரவில்லை..!

உழைத்து உழைத்து தேய்ந்தாலும்
உயராத இவர்களின் வாழ்க்கையில்
எமன் பார்வை படும் வரை
எள்ளளவும் காயது இந்த வியர்வை..!

எழுதியவர் : ந.இராஜ்குமார் (21-Mar-18, 8:46 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
பார்வை : 1356

மேலே