உளியின் யுத்தம் நூல் ஆசிரியர் கவிஞர் பல்லவி குமார் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

உளியின் யுத்தம்!

நூல் ஆசிரியர் : கவிஞர் பல்லவி குமார் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

வெளியீடு :
நிவேதிதா பதிப்பகம், 22/105, எண் 2, பாஸ்கர் காலனி 3வது தெரு, விருகம்பாக்கம், சென்னை - 600 092. செல் : 99628 96884
பக்கம் : 80, விலை : ரூ. 70.



******

நூலாசிரியர் கவிஞர் பல்லவி குமார் அவர்கள் ஹைக்கூவில் பல்லாண்டுகளாக இயங்கி வரும் படைப்பாளி. முதல் வரி மற்றும் மூன்றாம் வரியில் இறுதி எழுத்து ஒன்றி வரும் இயைபு துளிப்பா தான் லிமரைக்கூ. படைப்பாளி சில லிமரைக்கூ எழுதலாம். நானும் எழுதி உள்ளேன். ஆனால் நூல் முழுவதும் எழுதி இருப்பது சிறப்பு ; வியப்பு! பாராட்டுக்கள் ...

“உளியின் யுத்தம்” நூலின் பெயரே கவித்துவமாக உள்ளது. உளியின் யுத்தம் முடிந்தால், கல் வலி பொருத்தால் அழகிய சிலை உருவாகும். அது போல அழகிய லிமரைக்கூ விருந்து வைத்துள்ளார் கவிஞர் பல்லவி குமார். லிமரைக்கூ ஒரு பார்வை என்ற கட்டுரை வளரும் கவிஞர்களுக்கு லிமரைக்கூ வடிக்க வழிகாட்டும். இனிய நண்பர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் அணிந்துரை நன்று.

இனி நூல்களில் இருந்து பதச்சோறாக சில லிமரைக்கூ உங்கள் பார்வைக்கு.

என்னைப்பார் யோகம் வரும்
ஏக்கத்துடன் பொதி சுமத்து செல்லும்
கழுதைக்கு என்று வரும்?

கணினி யுகத்திலும் இன்னும் சில கடைகளில் கழுதையின் படம் வைத்து இந்த வாசகத்தை எழுதி வைத்திருப்பார்கள். மூடநம்பிக்கையைச் சாடும் வண்ணம் பகுத்தறிவை விதைக்கும் விதமாக வடித்த லிமரைக்கூ நன்று. ‘ம்’ என்ற இறுதி எழுத்து ஒன்றி வருவதைக் காண்க!

ஆலைகள் மூடி விடுவார்கள், அப்போது தொழிலாளிகள் வாடி விடுவார்கள். வறுமை பட்டினி வாட்டும். இந்த நிலையினைப் படம் பிடித்துக் காட்டிடும் லிமரைக்கூ.

தொழிலாளி வயிற்றில் கங்கு
தொடர்ந்து ஊதாமல் கிடந்தது
தொழிற்சாலையின் சங்கு!

அடுத்து ஒரு லிமரைக்கூ பாருங்கள்

நாடெங்கும் தண்ணீர் பஞ்சம்
தண்ணியில்லா காட்டுக்கு மாறுதல்
தரமுடியாதென மகிழும் நெஞ்சம்!

கோடையில் எங்கும் தண்ணீர் பஞ்சம் நிலவுகின்றது.எங்கு மாற்றினால் என்ன என்று இருப்பார்கள். எனவே தண்ணியில்லா காட்டுக்கு மாற்றுவேன் என்று மிரட்ட இயலாத இன்றைய நிலையை உணர்த்தியது நன்று.

மாணவர்களிடையே சாதித்தீ
மூளை மழுக்கி முளை விடுகிறது
மனமதில் ஏற்றனும் நீதித் தீ!

இன்றைக்கு பல கல்வி நிறுவனங்களில் சாதி மோதல் வருவதையும் சாதிச் சங்கங்களில் மாணவர்கள் பங்கு பெறுவதையும் பார்க்கிறோம். சாதி மதம் கடந்து சகோதர உணர்வுடன் சங்கமித்து கூடி வாழ்வது தான் மாணவப்பருவத்து வாழ்க்கை என்பதை உணர்த்தும் படைப்பு நன்று.

பணம் குவிக்கும் மனம்
பற்றற்று படுத்து அடங்கி விடும்
வாழ்வின் இறுதி தினம்!

ஊழல் புரிந்து கோடி கோடியாகக் குவித்தவர்கள் எல்லாம் இறுதியில் மண்ணிற்கே இரையானார்கள் என்ற தத்துவம் உணர்த்திடும் நல்ல படைப்பு.

பேருந்து படிக்கட்டில் பயணம்
பொறுப்பில்லா இளைய மனங்கள்
விழுந்தால் எழமுடியா சயனம்!

மாணவர்கள் பலர் பேருந்தின் படியிலேயே பயணிப்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர். அது உயிருக்கு உலை வைக்கும் என்பதை உணர வேண்டும் என்று உணர்த்திய படைப்பு நன்று.

‘படியில் பயணம் ; நொடியில் மரணம்’ என்ற வாசகத்தை நண்பர் சுரேந்திரன் எழுதினார். அவர் முதுமையால் இறந்து விட்டார். அவர் எழுதிய எழுத்து பேருந்துகளில் இன்றும் வாழ்கின்றது.

மதுவிலக்கு வரப் போவதில்லை
மனைவியே போராடித் திருத்த வேண்டும்
பெண்களுக்கு வந்து சேரும் தொல்லை!

மன்றாடி போராடி வேண்டிய போதும் மதுவிலக்கு வந்தபாடில்லை. வரப்போவதும் இல்லை. வருவதற்கான அறிகுறியும் இல்லை. எனவே மனைவிகள் போராடியே கணவனை குடிக்காமல் தடுக்க வேண்டும். ஆனால் மனைவி தடுத்தும் குடிகாரன் திருந்துவதில்லை. தினமும் குடித்து தொல்லைகள் தருகின்றனர். தொடர்கதையாகி வருகின்றது.

மீன்கள் செய்தன உள்ளிருப்பு
தீர்வு கிடைக்காத வருத்தத்தில் கொக்கு
தவம் செய்தது வெளிநடப்பு.

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் நலமே என்ற கருத்தை வலியுறுத்தும் விதமான அழகிய படைப்பு. பாராட்டுக்கள். நூல் ஆசிரியர் கவிஞர் பல்லவி குமார் அவர்கள் குறிஞ்சிப்பாடி ச.மு. வேலாயுதம் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை வணிகவியல் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே தமிழ்ப்பணியும் செய்து வருபவர்.

பாராட்டினால் மனம் கரையுமோ?
கல்யாண வீட்டில் இசை நிகழ்ச்சி
கை தட்டினால் குறையுமோ?

திருமண வீட்டில் உயிரைக் கொடுத்துப் பாடிக் கொண்டிருக்கும் இசைக் கலைஞர்களை மதிப்பது இல்லை, கை தட்டுவது இல்லை, இசை நிகழ்ச்சியைக் கவனிக்காமல் வேறு கதைகள் பேசிக்கொண்டு இருப்பார்கள். இனியாவது திருமண வீட்டு இசை நிகழ்ச்சிக்கு கைத்தட்டுங்கள்.

அடைமழையிலும் கூப்பாடு
கூடை சுமந்து நீரை விற்றால் தான்
குழந்தைக்குக் கிடைக்கும் சாப்பாடு!

வறுமையை ஒழிப்பதாக வாய் வசனம் பேசிடும் அரசியல்வாதிகள் அவர்களது வறுமையை ஒழித்து வசதியாகி விடுகின்றனர். வாக்களித்த ஏழைகளின் வாழ்வில் என்றும் ஏற்றமில்லை, விடிவும் இல்லை. ஏழ்மையின் படப்பிடிப்பு நன்று.

தவணையில் வளர்ந்திடும் வட்டி
குடலையும் உருவித் தின்றுவிட்டு
கொலையும் செய்திடும் சுட்டி!

எங்காவது தற்கொலை நடந்தால் கந்துவட்டி சட்டம் பாயும் என்று வசனம் பேசுவார்கள். வேறு பிரச்சனை வந்ததும் அதனை மறந்து விடுவார்கள். கந்துவட்டிக் கொடுமை நாள்தோறும் நடந்து கொண்டே தான் இருக்கும்.

இப்படி பல சிந்தனைகளை விதைக்கும் வண்ணம் சமுதாயத்தை சீர்திருத்தும் விதமாக வடித்த ‘லிமரைக்கூ’ யாவும் மிகவும் நன்று. நூலாசிரியர் ஆசிரியர் கவிஞர் பல்லவிகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (22-Mar-18, 7:24 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 98

மேலே