தினம் தினம் அணியும் முகமூடி
தினம் தினம் அணியும் முகமூடி
காலையில் ஐந்து மணியில் இருந்து காத்திருக்கிறான் ராகவன், இன்னும் பால் பூத் திறக்கப்படவில்லை. தூக்கமும் கெட்டு சும்மாவே காத்திருப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. கோபமாக வந்தது ராகவனுக்கு, அதற்குள் பூத்காரர் அவசர அவசரமாக வந்து கடையை திறந்து சாரி “லேட்டாயிடுச்சு” என்றவர் இவனைப்போல நின்றிருந்தவர்களுக்கு பால் பாக்கெட்டுகளை விநியோகிக்க ஆரம்பித்தார். இவனும் பரவாயில்லை என்று ஒரு புன்னகையை சிந்தி பாக்கெட்டை வாங்கி வந்து கொடுத்து விட்டு தன் தூக்கத்தை தொடர சென்றவனை பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று காய் கறிகளை வாங்கி வரச்சொல்ல வந்த கோபத்தை காட்ட நினைத்தவன் பின் எதுவும் பேசாமல் பையை வாங்கி கடைக்கு சென்று விட்டான்.
ராகவன் ஆபிசுக்கு செல்ல வீட்டை விட்டு வெளியே வந்தவன் எதிர் வீட்டில் இதே போல் தயாராக நின்ற சுப்ரமணீயத்தை பார்த்தவன் முகத்தை சுருக்கினான். சுப்ரமணியம் இதை கவனித்தாரா என்று தெரியவில்லை. அல்லது கவனித்ததாக காட்டி கொள்ளாமல் இருந்து விட்டாரா என்றும் தெரியவில்லை. “குட் மார்னிங்” என்றார். இன்றைக்கும் ஓசி கிராக்கியா என்று மனதுக்குள் நினைத்தவாறு “குட் மார்னிங்” வலிய புன்னகையை சிந்தி விட்டு “ஏறிக்குங்க சார்” வீட்டிலிருந்து வண்டியை நகர்த்தினான். “சாரி உங்களை தொந்தரவு பண்ணறேன்” சொல்லிவிட்டு அவன் வண்டியின் பின்புறம் ஏறிக்கொண்டார்.
ராகவன் அலுவலகம் செல்லும் வழியில்தான் சுப்ரமணியம் வேலை செய்யும் அலுவலகமும் உள்ளது. அதனால் அவரை ஏற்றி செல்வது அவனுக்கு ஒன்றும் பெரிய வேலையில்லை. இருந்தாலும் தொடர்ந்து ஒருவரை ஏற்றிச்செல்வது இவனுக்கு ஒரு வித சலிப்பை தோற்றுவித்திருந்தது. சுப்ரமணீயத்தை இறக்கி விட்டு விட்டு சிக்னலில் நின்றபோது அருகில் ஒரு வண்டி வந்து நின்று இவனை கூப்பிட்டது. இவனுக்கு ஹெல்மெட் போட்டிருந்ததால் அடையாளம் தெரியவில்லை. அவர் ஹெல்மெட்டை கழட்ட இவனுக்கு சுரீர்..என்றது. பைனான்ஸ் சுந்தரம் அல்லவா? அதற்குள் சிக்னல் வழி விட சுந்தரம் வண்டியை ஓரம் கட்ட இவனும் வேறு வழியில்லாமல் வண்டியை ஓரம் கட்டி முகத்தில் ஒரு சோகத்தை வைத்துக்கொண்டு சார், எப்படியும் அடுத்த மாசம் வட்டியோட செட்டில்மெண்ட் பண்ணிடறேன் சார். இந்த இரண்டு மாசமா ஏகப்பட்ட டைட் சார் என்று ஏகப்பட்ட சார்களை போட்டு பேசினான். இது போல எத்தனை பேரை பார்த்திருப்பான் சுந்தரம். முகத்தை கடு கடுப்பாக வைத்துக்கொண்டு அடுத்த மாசம் வரைக்கும்தான் பாப்பேன் அதுக்கப்புறம் என் மேலே வருத்தப்படாதே என்று பார்வையை ராகவனின் வண்டியின் மேல் செலுத்தினான்.
ராகவனும் புரிந்து கொண்டான். அடுத்த மாதம் வந்து வண்டியை தூக்கிக்கொண்டு போவான். போனா தொலையுது, என்று ஒரு கணம் நினைத்தான். சுப்ரமணியம் மாதிரி ஆளுங்க தொல்லையில்லாம இருக்கும் என்று நினைத்தவன், வண்டியில்லாமல் தனக்கும் பெரிய இடைஞ்சலாகிவிடுமே, என்று தோன்றியதும் சடாரென அந்த நினைப்பை கைவிட்டான். கவலைப்படாதீங்க சார் கண்டிப்பா அடுத்த மாசம் கொடுத்திடறேன் அவன் பதிலை முழுதும் எதிர்பார்க்காமல் சர்ரென வண்டியை கிளப்பிச்சென்றான், சுந்தரம்.
வெயில் ஏறத்தொடங்கியிருந்தது. ராகவனின் மனதிலும் உஷ்ணம் ஏற தொடங்கியிருந்தது. “இன்னைக்கு யார் மூஞ்சியில முழிச்சேனோ” மனதிற்குள் புலம்பியவாறு வண்டியை எடுத்தான். பணி புரியும் நிறுவனத்தில் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான். நுழை வாயிலில் நின்றிருந்த காவலாளி “சார் உங்க பேட்ஜை” போட்டுங்குங்க, அறிவுறுத்தியவுடன் இவனுக்கு கோபம் வந்தது. சூடாக பதில் சொல்ல காவலாளியிடம் முகத்தை திருப்பினான். மனதில் பைனான்ஸ் சுந்தரம், இந்த மாத செலவுகள், இத்யாதி, இத்யாதி போன்றவை மனதில் பயமுறுத்த புன்முறுவல் காட்டி மறந்துட்டேன் என்று சாப்பாட்டு பையை கீழே வைத்து அடையாள அட்டையை போட்டு கொண்டான்.
இவன் சீட்டை அடைந்து “அப்பாடா” என உட்கார்ந்த பத்து நிமிடத்தில் மேனேஜர் இவனை கூப்பிடுவதாக சொன்னதும் ஒரு ‘சுரீர்’ என்ன பிரச்சினையோ பயத்துடன் உள்ளே சென்றான். பரமசிவம் பெயருக்கேற்றவாறு சிவப்பழமாக உட்கார்ந்திருந்தார். ஏய்யா ராகவா நீ ஸ்டோர் ஸ்டாக் எடுத்துட்டு வந்து கொடுத்ததுக்கும் இப்ப அவங்க கொடுக்கற ஸ்டாக்குக்கும் நிறைய வித்தியாசம் வருதேயா. போய் அதை என்னன்னு பாத்துட்டு வந்து “டீடெய்ல்ஸ்” கொடு. அப்பாடா சிவப்பழம் கடிக்கவில்லை, தப்பித்தோம் என நினைத்துக்கொண்டு “யெஸ் சார்” இப்பவே போய் பாக்கறேன், விட்டால் போதும் என்று வெளியே ஓடி வந்தான்.
கம்பெனி ஸ்டோருக்குள் நுழைவதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் முதலில் போர்மேன் (மேற்பார்வையாளர்) அனுமதி வேண்டும். அவர் அனுமதி கொடுத்தால்தான் ஸ்டோர் கீப்பர் ஒத்துழைப்பார். ஆகவே அவரை போய் பார்த்து ஒரு கும்பிடு போட்டான். அவர் அப்பொழுதுதான் கம்பெனிக்குள் சென்று வேலை செய்யாமல் அரட்டை அடித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை திட்டி விட்டு வந்து உட்கார்ந்திருந்தார். இவனை பார்த்தவுடன் அதே வேகத்தில் என்ன ராகவன் சார் கம்பெனிக்குள்ள வந்திருக்கறீங்க? கேட்டதும் இவனுக்கு அவர் கோபத்தில் இருப்பதை உணர்த்தியது. ஒண்ணுமில்லை சார்..என்று இழுத்தவாறு மெதுவாக பிரச்சினையை சொன்னான்.
இந்த ஸ்டோர் கீப்பர் சரியான சோம்பேறி, ஒரு நிமிடம் இருங்க, போனில் ஸ்டோர் கீப்பரிடம் ஏதோ வேகமாக பேசி விட்டு பின் போனை வைத்து விட்டு நீங்க போய் பாருங்க சார் அனுமதி கொடுத்தார். இவன் ரொம்ப நன்றி சார் சொல்லிவிட்டு ரெடிமேட் புன்னகையை சிந்தினான்., உள்ளே ஸ்டோர் கீப்பரை காண சென்றான்.
ஸ்டோர் கீப்பரும் கோபமாக காணப்பட்டார். இவன் போய் நின்றவுடன் ஏன் சார் நீங்க வர்றதா இருந்தா “லிஸ்ட் செக்” பண்ன போறேன்னு சொல்லிட்டு வந்தா பத்தாதா? என்னை பத்தி அவர் கிட்ட போட்டு கொடுத்துட்டு வர்றீங்க. கடிந்து கொண்டான். இவன் இரத்தம் சூடாக ஆரம்பிக்க மனமோ பைனான்ஸ் சுந்தரம், மனைவி மக்கள் போன்றவைகளை ஞாபகப்படுத்த சார், கோபிச்சுக்காதீங்க, போர்மேன்தான் ஏன் எதுக்குன்னு? ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு பதில் சொல்லிட்டு வர்றதுக்குள்ள போதும், போதுமுன்னு ஆயிடுச்சு. இதுல நீங்க வேற கோபிச்சிக்கறீங்க. நான் எங்கதான் போவேன்? அவரை தாஜா செய்து விவரங்களை வாங்கி ஒரு வழியாக வேலையை முடிக்கும்போத மதிய உணவு இடை வேளையையும் தாண்டி விட்டது.
மனைவி கட்டி கொடுத்த உணவு பொட்டலத்தை பிரித்து சாப்பிட்டு விட்டு மதியத்துக்கு மேல் கொஞ்சம் நிதானமாக வேலை செய்யலாம் என நினைத்து அவன் சீட்டில் உட்கார, அதற்காகவே காத்திருந்தது போல் எதிர் சீட்டு கோபால் இவன் அருகே வந்து நண்பா உங்கிட்ட ஒரு 500 ருப்பீஸ் இருக்குமா? பிரண்ட்ஸ் எல்லாம் நாளைக்கு ஒரு சின்ன பார்ட்டி வச்சிருக்கோம், அடுத்த மாசம் கொடுத்திடறேன். ராகவனுக்கு நன்கு புரிந்தது. இந்த 500 ரூபாய் மாதாந்திர பட்ஜெட்டில் விழுந்த துண்டு. இந்த மாதத்தின் மிச்ச பத்து நாட்களை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பான். ஆனால் அதை சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு பிரண்ட்ஸ், பார்ட்டி என்று கதை விடுகிறான். இவன் நிலைமை மட்டும் என்னவாம்? இவனுக்கும் அதற்கு மேல் பண பிரச்சினை, ஆனால் அவன் அதை சொல்வானா? சாரி நண்பா, நேத்துத்தான் ஒரு பிரண்ட் எங்கிட்ட இருந்த 1000 ரூபாயும் அவசரமா வேணும்னு வாங்கிட்டு போயிட்டான். இவன் கேட்ட தொகையை விட இரட்டிப்பாக அடுத்தவனுக்கு கொடுத்துவிட்டதாக பெருமையுடன் சொன்னான்.
ம்..பரவாயில்லை எதிர்பார்த்தவன் போல் திரும்பி விட்டான் எதிர் சீட் கோபால். இவனிடம் பணம் இல்லை, ஆனால் கொடுத்ததாக பொய் சொல்லுகிறான். என மனதில் நினைத்திருப்பான்,
அலுவலகம் முடிய அரை மணி நேரம் முன்பு இவனுடைய் செல் போன் ஒலித்தது. அவன் மனைவி ! ஏங்க வீட்டுக்கு வரும்போது பசங்களுக்கு ஒரு “இங்க்” பாட்டிலும் பென்சில் பாக்சும் வாங்கிட்டு வாங்க பதிலை எதிர்பாராது போனை வைத்து விட்டாள். அவள் செல் பேலன்ஸ் தீர்ந்து விடுமல்லவா? எல்லா பாக்கெட்டிலும் கை விட்டு தேடியதில் 50 ரூபாய் தேறியது, அவள் சொன்னதை வாங்கி விடலாம்.அலுவலகம் முடிந்து அவள் சொன்ன பொருட்களை வாங்கி வாகன நெரிசலை கடந்து வீடு வந்து சேர்ந்த பொழுது இருள் சூழ்ந்து விட்டது.
வீட்டுக்குள் நுழையுமுன் அப்பா..என இரு குழந்தைகளும் இவனிடம் ஓடி வந்தது. இவன் அடித்து விட்டான், இவன் கிள்ளி விட்டான் என இவனை நடுவராக்கி புகார் செய்தன. இவன் வந்த அலுப்பினால் குழந்தைகளிடம் குரலை உயர்த்த போனவனின் மனம் யார் யாருக்கோ பல்லைக்காட்டி சிரிக்கிறோம். நம் குழந்தைகளிடம் காட்டுவதால் ஒன்றும் குறைந்து விடாது மனதை தேற்றிக்கொண்டு சரி..சரி..இந்தாங்க நீங்க கேட்டது, அவர்களிடம் வாங்கி வந்ததை கொடுக்க அவர்கள் சண்டையை மறந்து விட்டு ஆவலுடன் வாங்கி சென்றனர்.
எப்பவுமே மாச முதல் வாரமே குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கி வச்சிடுவோம்னு சொன்னா கேட்டாதானே? ஒரு தொடர் போல பேசிகொண்டே வந்த மனைவியிடம் கடும் கோபம் ஏற்பட்டது முதல் வாரமே வாங்கி விடு என்று இவன் சொன்ன பொழுது அப்புறம் பார்த்துக்கலாம், என்று சொன்னவள் இவள்தான். இப்பொழுது பிளேட்டை திருப்பி போடுகிறாள். மனம் அடங்கு அடங்கு என்றது. கட்டின பொண்டாட்டிதானே “மீண்டும் ஒரு ரெடிமேட் புன்னகையை” உதிர்த்து விட்டு சரி அடுத்த மாசம் பார்த்துக்கலாம், பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு கை கால் கழுவ பின் புறம் சென்றான்.
இனி !
வீட்டுக்காரர் அடுத்த மாசத்திலிருந்து வாடகையை உயர்த்தி விட்டதாக சொல்லி சென்றது, கரண்ட் பில் இந்த மாதம் அதிகமாக வந்துள்ளது, பசங்களுக்கு கல்வி சுற்றுலா ஆளொன்றுக்கு ரூபாய் 250 கேட்பது இவை எதுவுமே இவன் மனிவி இவனிடம் சொல்லவில்லை. மறந்திருக்கலாம், அல்லது நாளை சொல்லலாம் என்று நினைத்திருக்கலாம்.
அதுவும் நல்லதுக்குத்தான். படுக்கும்போதாவாது இவன் தன்னுடைய முகமூடியை கழட்டி வைத்து விட்டு நிம்மதியாய் தூங்கட்டும். நாளை காலையில் இவன் மனைவி இந்த பிரச்சினைகளை சொல்லும்போது மீண்டும் முகமூடியை எடுத்து மாட்டிக்கொள்வான்.