அன்போடு அன்பாகக் கலந்திட

அன்பில் கரை கண்டவர் யார்?

இறைவா,
உன்னில் கரை கண்டவர் யார்?

வம்பே செயலாய் கொண்டு வார்த்தையில் அம்பு எய்து கொல்பவர்களை எண்ணவே முடியாவண்ணம் இருக்கிறார்கள் அத்தனை கோடி.

அன்பு மட்டுமே செயலாய் கொண்ட ஒருவர் உண்டோ?
அங்கும் தேடினேன்,
இங்கும் தேடினேன்,
அவ்வுலகிலும் தேடினேன்,
இவ்வுலகிலும் தேடினேன்,
மனித உருவில் ஒருவரும் தென்படவில்லை, என்னையும் சேர்த்தே சொல்கிறேன்.

சுற்றமும், சூழலும் சுற்றி சுற்றி வந்து மனதைக் கூறுபோட அன்பாய் வாழ்ந்திட அன்பு அடியிலொரு இடம் கிடைக்குமா?

திருவடி எங்கு கிடைக்கும்?
ஓடுகின்ற நதிகளே கொஞ்சம் பதில் சொல்லுங்கள்.
சுவாசிக்கின்ற காற்றே கொஞ்சம் தேடிச் சொல்.

அன்பென்பது நெருப்பு.
அன்பென்பது காந்தம்.
தன்வயப்பட்டவரை எல்லாம் தானாகவே மாற்றிவிடும்.

சீக்கிரம் சூரியனே அருகில் வா,
உடலை எரித்து உயிரை எடுத்துப் போ.
உயிராய் உன்னில் எரிந்து கொண்டே இருப்பேன்.
அதிலிருந்து வெளிப்படும் வெளிச்சம் அகிலமெங்கும் பரவட்டும்.

அடிக்கடி சொல்கிறேன்,
அன்பே சிவம்.
அன்பைத் துறந்த சவமாய் வாழ நான் இங்கு பிரவேசிக்கவில்லை.
அன்பை அன்பால் அடைய ஞானபலம், புத்திபலம் ஒன்று சேர சக்தி வடிவாய் ஆன்மா நிலைபெற உடல் அழியட்டுமே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Mar-18, 5:35 pm)
பார்வை : 1426

மேலே