பிரிதலில் ஒரு புரிதல் 3

பிரிதலில் ஒரு புரிதல்
பாகம்3 இறுதிப்பாகம்

வெளியே ஒரு இளைஞன் சிரித்த முகத்துடன், கையில் ஒரு அழகாக வடிவமைக்கப்பட்ட பூங்கொத்துடன் நின்று கொண்டிருந்தான். "வணக்கம் அம்மா, லாவண்யா என்பவரின் வீடு இதுதானே?" என்று கேட்டான். "ஆமாம் என்ன விஷயம்?" லாவண்யாவின் தாய் வினவ, "இந்தப் பூங்கொத்தை அவரிடம் சமர்ப்பிக்க சொல்லி எங்கள் நிறுவனத்தில் சொன்னார்கள்" .. இந்த அட்டையில் கையொப்பமிட்டு கொடுங்க.." என்று அந்தப் பூங்கொத்தையும் அட்டையையும் லாவண்யாவின் தாயிடம் கொடுத்தான். அட்டையை வாங்கி கையொப்பம் வைக்கும் போதுதான் பார்த்தார் அனுப்புபவர் ஜெயராமன் என்றும், பெறுபவர் லாவண்யா என்றும் இருந்தது. "இறைவா நன்றி.. மாப்பிள்ளை கோபம் தணிந்து விட்டது. இனி மகளின் வாழ்க்கையில் பிரச்சனையில்லை" வாய்விட்டு ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்த தாயின் முகம் பூரிப்பில் ஜொலித்தது. " நன்றி தம்பி" என்று அந்தப் பையனிடம் கூறிவிட்டு வாயெல்லாம் பல்லாக உள்ளே வேகமாக வந்தார் லாவண்யாவின் தாய். "யாரம்மா வந்தது.." இது என்ன பூங்கொத்து.. அழகாக இருக்கின்றதே.. யார்கொடுத்தது?" சரமாரியாக கேள்விகளைக் கேட்ட மகளிடம் பூக்கடைக்காரப் பையன் வந்து கொடுத்து சென்றான். யார் கொடுத்தது என்று நீயே பார்த்துக் கொள்" என்று பூங்கொத்தை மகள் மடியில் வைத்து விட்டு, அப்படியே அவள் கன்னத்தையும் மெல்ல கிள்ளிவிட்டு சென்றார் லாவண்யாவின் அருமை தாயார்.

நிறைய ரோஜா மலர்களையும், ஆங்காங்கே வெள்ளை சாமந்தி மொட்டுகளையும், பச்சை இலைகளையும் இணைத்து வெகு நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தது அந்தப் பூங்கொத்து. அதன் அழகில் லயித்து சிறிது நேரம் பார்த்தவள், அதனுள் வைக்கப்பட்டிருந்த கடித உறையை எடுத்துப் பிரித்தாள். உள்ளே ஓர் இளஞ்சிவப்பு அட்டையில் கருப்பு மையில், ஜெயராமன் கையெழுத்தில் ஒரு கவிதை...
" எனதினிய தேவதையே,,,
மறுசுழற்சிக்கு அனுப்பிய கோபங்களும்,
மனக்கிலேசமும் புது உயிர் கொண்டு,
பூக்களாய் உருமாற்றம் கண்டுள்ளன.
பூங்கொத்தாய் உன் வீடு வந்துள்ள நான்,
நாளை சந்திரனாய் உனை நாடி வருவேன் .
என்றும் உனதாகிய ஜெயா ...."
அளவற்ற சந்தோஷத்தில் " அம்மா" என்று பேரிரைச்சலுடன் கூவினாள் லாவண்யா........

"அம்மா" என்ற லாவண்யாவின் அலறலில் திடுக்கிட்டுப் போன அவள் தாய் பதட்டத்துடன் சமையலறையிலிருந்து ஓடி வந்தார். "என்னாச்சு, ஏன் இப்படி கூச்சலிட்டாய்?" என்ற தாயின் வினாவுக்கு பதிலளிக்காமல், அன்னையை அப்படியேக் கட்டிப்பிடித்து சுற்றினாள் வாய் விட்டுச் சிரித்தப்படி. வலுக்கட்டாயமாக அவளைத் தடுத்தி நிறுத்தி, " காய்ச்சலில் பினாத்திக்கொண்டிருந்து விட்டு இப்போ, இப்படி சுற்றுகிறாயே மயக்கம் வராதா? என்ன நடந்தது.. முதலில் சொல்" கண்டிப்புடன் வினவினாள் லாவன்யாவின் தாய். "அம்மா.. என் செல்ல அம்மா.. உங்கள் வாக்கு பலித்து விட்டது. உங்கள் வருங்கால மருமகன், என்னைக் காண வருவதாகச் சொல்லி, மன்னித்து விட்டதற்கு அத்தாட்சியாக இந்தப் பூக்களை அனுப்பியுள்ளார்" முகமெல்லாம் மலர அவ்வளவொரு பூரிப்புடன் பதிலளித்தாள் லாவண்யா. " அப்படியா,,! நான் தான் சொன்னேனம்மா.. ஜெயா தம்பி ரொம்ப நல்ல மாதிரி . நிச்சயம் கோபம் தணிந்து வருவார் என்று" அம்மாவின் பதிலில் மகிழ்ச்சியுற்றவளாய். மீண்டும் பழைய குணம் ஓடி வர.." என்னம்மா.. மாப்பிள்ளைக்கு பாராட்டெல்லாம் ஒரு மார்க்கமாக இருக்கு.. இரண்டு பேரும் பேசி வைத்து என்னைப் பழி வாங்குறீங்களா.. அப்படியெல்லாம் நான் சீக்கிரம் திருந்தி விட மாட்டேனாம்.. என் வழி தனி வழி" என்று சினிமா பாணியில் விரலை ஆட்டிப் பதில் கொடுத்த லாவண்யாவின் தலையில் நச்சென்று கொட்டினார் அவள் அன்பு தாய். " பட்டும் கூட உன் சின்னப்பிள்ளைத்தனம் குறையல பார்த்தியா.. சரி சரி வந்து சாப்பிடு " என்று மகளை இழுத்துச் சென்றார்.

அன்றையப் பொழுதை மிகவும் நிம்மதியாக கழித்தாள் லாவண்யா.. நிறைந்த நித்திரையும், நித்திரையில் சுகமான கனவுகளுமாய், திருப்தியுடன் மறுநாள் காலையில் எழுந்து பணிமனைக்குச் சென்றாள். முதல் நாள் வேலைக்குப் போகாததால், கூடுதல் வேலை மலையாய் குவிந்துக் கிடந்தது. தன் உள்ளங்வர்ந்தவனின் நினைவுகளை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு பணியில் முழுக்கவனத்தையும் செலுத்தினாள். மதிய உணவை துரிதகதியில் முடித்துவிட்டு, முழுமூச்சுடன் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் முடித்து அப்பாடா என்று இரு கரங்களையும் தலைக்கு மேலே தூக்கி நெளிவு எடுக்கையில் மாலை மணி 6 என்று சுவர்க்கடிகாரம் காட்டியது. "ஐயையோ..!... இவ்வளவு தாமதமாகி விட்டதே, ஜெயா வருவதாகக் கூறியிருந்தாரே..!" என்று தனக்குள் பேசிக்கொண்டே, விறுவிறுவென்று மற்றவர்களிடம் விடை பெற்று, வாகனத்தில் வந்து அமரவும் அலைபேசி மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது. அவர்தான் அழைக்கின்றாரோ என்ற பயந்தபடி எடுக்கையில், அம்மாவின் குரல்.." லாவண்யா.. எங்கு இருக்கின்றாய்.. ? " இதோ அம்மா வந்து கொண்டிருக்கின்றேன். சரி சரி வைத்து விடுகின்றேன்" என்றபடி அலைபேசியின் அழைப்பைத் துண்டித்து வாகனத்தைச் செலுத்துவதில் கவனம் செலுத்தினாள்.

அரைமணி நேரப் பயணம் முடிந்து வாகனத்தை வீட்டின் முன் நிறுத்துகையில், அங்கு ஜெயராமனின் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தாள். மனம் அப்படியே அந்தரத்தில் பறந்து செல்வது போன்ற சில்லென்ற ஓர் உணர்வு. ஆசுவாசப்படுத்தி, ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்துவிட்டு, நிதானமாக கதவைத் திறந்து வெளியே வந்தாள். அவளுக்காகவே காத்திருந்தது போல், அவளின் தாய் வெளிவாசலில் நின்றபடி." ஏன் இவ்வளவு தாமதம்..? ஜெயா வந்து ஒருமணி நேரமாகி விட்டது. சீக்கிரம் போய் குளித்து வந்து விடு, அவர் தொலைக்காட்சியில் பந்து விளையாட்டு பார்த்துக் கொண்டிருக்கிறார். சீக்கிரம் சீக்கிரம் போ.. " அம்மாவின் அலட்டலும் அவசர விரட்டலும் லாவண்யாவிற்கு சிரிப்பை வருவித்தது. இருப்பினும் வெளிக்காட்டாமல் அம்மா சொன்னது போல் துரிதமாக குளித்து, கிளம்பி வந்தாள். அறைக்குள் வந்த லாவண்யாவின் தாய், "பக்கத்து வீட்டு பாட்டிக்கு காலில் சுளுக்காம், தைலம் கேட்டார்கள். நான் போய் அவர்களுக்கு உருவி விட்டு வருகிறேன். மேஜையில் இரவுச்சாப்பாடு எடுத்து வைத்திருக்கேன், மாப்பிள்ளைக்குப் பரிமாறி, நீயும் சாப்பிடு.. அப்புறம் கொஞ்சம் பணிவா பேசு. மீண்டும் வேதாளம் முருங்கைமரத்தில் ஏறுவது போல் ஏடாகூடமாக பேசி மாப்பிள்ளை மனத்தை நோகடிக்காதே.." என்று அறிவுரைப் போல் அம்மா பேசியதை நல்லபிள்ளையாகத் தலையைத் தலையை ஆட்டி கேட்டுக் கொண்டாள். அம்மா இப்போது பக்கத்து வீட்டுக்கு போவதே, இவர்கள் இருவரையும் சங்கடமில்லாமல் மனம் விட்டு பேசுவதற்கு தானே என்ற அம்மாவின் இங்கிதம் மனத்துக்கு இதமாக இருந்தது.

மெதுவாக வெளியே வரவேற்பரையில் அமர்ந்திருந்த ஜெயாவின் அருகில் சென்று " வாங்க ஜெயா" என்றபடி அமர்ந்தாள். திடுக்கிட்ட நிமிர்ந்த அவன், அவளை அப்படியே பார்த்தான். அவள் கண்களில் கண்ணிரைக்கண்டவுடன், அவன் கண்களும் கலங்கின.. " என்னை மன்னித்து விட்டீர்களா ஜெயா.." அவள் கேள்விக்கு பதிலளிக்காமல், அவள் கண்ணிரை துடைத்து, அவளை மெல்ல அருகில் இழுத்து அணைத்துக் கொண்டான். அந்த ஒரு அணைப்பில் அவன் மன்னித்துவிட்டதையும் தம்மேல் வைத்துள்ள காதல் கிஞ்சிற்றும் குறையவில்லை என்பதையும் புரிந்து கொண்டாள். வாய் வார்த்தைகளை விட ஒரு சிறு அணைப்பு அனைத்து கலக்கங்களையும் போக்கிடும் சக்தியினை உணர்த்தியது அவளுக்கு. மனது இலேசானது... " நடந்த விஷயங்களை பேசுவதில் எந்த பலனும் இல்லை. நமக்குள் ஒரு பரஸ்பர நம்பிக்கை இருக்கணும். ஊரே திரண்டு நின்றாலும் உன் மேல் உள்ள என் நம்பிக்கை என்றும் சீர்குலையாது என்ற உணர்வு நமக்குள் ஆணியடித்தது போல் ஆழமாய்ப் பதிந்திருக்கணும். எந்த ஒளிவுமறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ளும் தம்பதிகள் தான் மிக மிக அந்நியோன்மையாக வாழ்கின்றார்கள். நாமும் அது போல் வாழணும். வாழுவோம்.. என்ன சரியா லாவண்... " காதலுடனும் வாழ்க்கைக்கு ஏற்றவாறு முத்தய்ப்பாக சொன்ன கருத்திலும் மனம் நெகிழ்ந்து போனாள் லாவண்யா. அவன் கூற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு அர்த்தமாக அவனை ஒரு முறை இறுக்க அணைத்து நெற்றியில் முத்தமிட்டபடி எழுந்தாள்.

" நீங்கள் அதிக நேரம் எனக்காக காத்திருந்து களைத்திருப்பதாலும். நீளளளளமாமாககப் பேசி தொண்டை காய்ந்து இருப்பதாலும். உங்கள் மாமியார் தம் வருங்கால மருமகனுக்காக சுவையாக இரவு உணவு தயாரித்து வைத்திருப்பதாலும், இப்போது உங்களை பணிவன்புடன் உணவு மேஜைக்கு வரும்படி தாழ்மையுடன் அழைக்கின்றேன்" என்று நாடகபாணியில் கையை மடக்கி தலை குனிந்து சொன்ன அவளின் கிண்டலில் லயித்து , எழுந்து அவளைக் கொட்ட ஒங்கிய கையைப் பார்த்து பயந்தது போல், அவள் ஓட, அவன் துரத்த, அங்கு ஒரு சங்கீத கச்சேரி நடப்பது போல் கலகலப்பான சூழ்நிலை உருவாகியது.
அவர்களின் மனமும் உணர்வும் நிறைந்தது மகிழ்ச்சியில்....

**** முற்றும்****


பெ.மகேஸ்வரி

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (26-Mar-18, 8:16 pm)
பார்வை : 180

மேலே