ரத ராஜ்ய நோக்கம்

கோடிகளில் சுருட்டியவர்களைக்
கொல்லைப்புறமாக
அனுப்பிவிட்டு

பாடுபடும் சுருக்குப்பைகளில்
பைசாக்களை
எடுப்பதுதான்
புதிதாக நீங்கள் செய்யும்
பொருளாதாரச் சீர்திருத்தமா ?

தமிழகத்தில் காவிரியை
ஓடவிடாமல் தடுத்துவிட்டு
ரதங்களை மட்டும் ஓடவிட்டு,
கூடவே
ரத்தமும் ஓடுமா என
வேடிக்கை பார்ப்பதுதான்
தேச ஒற்றுமைக்கு
நீங்கள்
தேடிப்பிடித்த பெருந்திட்டமா ?

தண்ணீரைத் தடுத்துவிட்டுத்
தாமரையை மலர்விக்க
எல்லா முயற்சிகளையும்
எடுத்துப் பார்ப்பதுதான் அரசியல் சீர்திருத்தமா ?
மற்றும் அதிநுட்ப
விவசாய முன்னேற்றமா ?

விவசாயிகள் செத்தபோது
வேடிக்கை பார்த்துவிட்டு
உணவு படைப்பவனை
உடையின்றிக் கதறவிட்டு

அவமானப் படுத்துகின்ற
அரசாட்சி நடத்திக்கொண்டு
தன்மானத் தமிழகத்தின்
தந்தைசிலை உடைத்துவிட்டு

தமிழைப் புறந்தள்ளி
தமிழரையும் புறந்தள்ளி
மதத்தை மட்டும் வைத்துக்கொண்டு
மாரடித்து அழுவதுதான்
மாபெரும் சீர்திருத்தமா ?
அதுதான் நீங்கள் செய்யும்
மக்களின் முன்னேற்றமா ?

நாங்கள் வணங்கும் கடவுள்களை
நாங்களே காத்துக்கொள்வோம் !
நீங்கள் வந்து காப்பதாக
நீட்டி முழக்க வேண்டாம் !

எங்களுக்கு எல்லாக் கடவுளும் சமம் !
கடவுளுக்கு நாங்கள்
எல்லோருமே சமம் !
உங்கள் குறுக்குப்புத்தி நோக்கத்தோடு
கூறுபோடப் பார்க்கவேண்டாம் !

சமத்துவமே நாங்கள்பெற்ற மதம் !
சகோதரத்துவமே
நாங்கள்பெற்ற வரம் !

அன்று வடநாட்டில்
ரதயாத்திரை
நடத்தித்தானே
ரத்தயாத்திரை செய்தீர் !

அந்த ரத்தவாடைச் சுவாசத்தில்
அரசவாதை வளர்த்ததுபோல்
இன்று ருசிகண்ட பூனையெனத் தென்னாட்டில் நுழைகின்றீர் !

மோடிராஜ்யம் நடக்கையிலே
ராமராஜ்யம் கேட்பவரே !
ராமராஜ்யம் சிறந்ததென்றால்
மோடிராஜ்யம் மோசமாயிற்றா ?

உங்கள் சிறந்தராம ராஜ்யத்தில்
தவம் செய்த
சம்பூகனைப்
பிறந்த குலத்தைக் காட்டி அவனைக் கொலைசெய்தான் ராமன் !

ராமன்செய்த படுகொலையை
நியாயமெனச் சொல்லுவீரோ ?
நியாயமற்ற ராமனாட்சி
நிலைநாட்ட முயல்வீரோ ?

ராமராஜ்யம் தேவையென
ரதயாத்திரை செய்பவரே !
என்றேனும் சமத்துவமாய்
மக்கள்ராஜ்யம் அமைப்போமென
மனிதயாத்திரை செய்வீர்களா ?
நீங்கள் மனிதயாத்தி்ரை செய்வீர்களா ?

*********

எழுதியவர் : நவீன் இளையா (26-Mar-18, 8:59 pm)
பார்வை : 37

மேலே