திசை திருப்புதல்

திசை திருப்புதல்
==================
வறுமையின் பிடியினுள் வதைபடும் சனங்களின்
=விழிகளில் தினசரி வழிகிற துளிகளின்
பெறுமதி மறந்தவர் பிடரியைப் பிடித்திடும்
=படியொரு நிலைவரின் பதைத்திட வருமென,
குறுகிய மனதினைக் குடைபவர் சமைத்திடும்
=குழிபறிப் பதிலொரு குழப்பமும் விளைந்திட
வெறுப்பென அதன்வழி விரைவுடன் மனம்செல
=வெறுமையை மறந்திடும் விசித்திரம் நடக்குது..
**
அரசியல் நடத்திட அவசிய படும்பணம்
=அளிக்கிற திருடரை அணைத்திருப் பவர்களின்
சிரசினி லமர்கிற சிலரது கரங்களில்
=சிறைபடு வதில்பலர் சிறந்தவ ரெனவுள
நிரந்தர சுயநல நிழலது தொடர்கிற
=நிலையது மறைகிற நிலைவரும் வரையினில்
வரந்தர கடவுளர் வருகிற முயற்சியும்
=வலைவிழும் உயிரென வலியதும் சுமந்திடும்.
***
மலையென உயர்வதில் மலைப்பினை வழங்கிடும்
=மலிந்திட முனைவதில் மறுப்பினை வளர்த்திடும்
விலைகளின் வலைகளில் விழுகிற சனங்களின்
=விடுதலை கதைகளை விழுங்கிய முதலைகள்

தலையது நிமிர்ந்திட தவித்திருப் பவர்களின்
=தலைவலி யகற்றிட தகுந்தநல் மருந்தினை
நிலையென வழங்கிட நிதிநிலை குரல்வளை
=நெரிப்பதைத் தடுத்திட திசைதனைத் திருப்புது.
==============================================
மெய்யன் நடராஜ்
==================

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-Apr-18, 1:58 am)
பார்வை : 81

மேலே